வியாழன், 11 ஜூலை, 2019

முகிலனை இருட்டு அறையில் வைத்து சித்திரவதை செய்கிறார்கள்’ - மனைவி பூங்கொடி கண்ணீர்

p  நக்கீரன்  ஜெ.டி.ஆர். :
கரூர் நீதிமன்றத்தில் நள்ளிரவில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன். இந்த நிலையில் நீதிபதி வீட்டில் ஆஜராக வந்த முகிலனை வீடியோ, போட்டோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை 100 மீட்டர் முன்னதாக பேரிகேட் கொண்டு தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி, ‘’யாராவது தூண்டி விட்டுத் தான் இந்த சம்பவம் நடக்கிறது. யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். முதலுதவி சிகிச்சை கூட செய்யாமல் வைத்திருக்கிறார்கள்.
என்ன நடக்கிறது? நாம் எந்த நாட்டில் இருக்கிறோம். மக்களுக்காக போராடியது பெரிய குற்றமா? கொலை செய்து கொள்ளையடித்தவர்ளை எல்லாம் விட்டு விடுகிறார்கள்.

சென்னையில் நீதிபதி காலை 10 மணிக்கு கரூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார். எங்களிடம் போலீசார், அப்படித்தான் அழைத்து செல்வோம் என்றார்கள். ஆனால் இரவோடு இரவாக அழைத்து வந்திருக்கிறார்கள். உங்களுக்காக போராடுவது தவறா என்று கண்ணீர்விட்டு அழுதார்.

அவர் போல் இனிமேல் யாரும் போராட்டத்திற்கு வரக்கூடாது என்று அவர் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். நான் கூட அவரை சந்தித்துப் பேச அனுமதிக்கவில்லை. முப்பது நாற்பது போலீசார் சுற்றி நின்று கொண்டு எங்களை பேச அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என்று கதறினார்

கருத்துகள் இல்லை: