வியாழன், 11 ஜூலை, 2019

குழந்தைகள் பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை... புதிய சட்ட திருத்தம்

குழந்தைகள் பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை!மின்னம்பலம் : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கான சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாகவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பச்சிளங்குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே இக்குற்றங்களுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போஸ்கோ சட்டம் 2012இல் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஜூலை 10ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ’பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை போஸ்கோ சட்டம் 2012இல் திருத்தங்கள் கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் அளிக்க இந்தச் சட்டம் வழிவகுக்கும். குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை ஒழிக்க அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்கவும் இந்தத் திருத்தம் வழிவகுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலின் பேரில் 'திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019' அறிமுகப்படுத்தப்பட்டால் திருநங்கைகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி அதிகாரங்களுக்கு இந்த மசோதா வழிவகுக்கும். பொது இடங்களில் திருநங்கைகளுக்கான மரியாதை காக்கப்படுவதோடு, கல்வி, சுகாதாரம், பணியிடங்கள் ஆகியவற்றில் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் துன்புறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை: