புதன், 10 ஜூலை, 2019

Computer vision syndrome.. காக்க காக்க கண்களைக் காக்க

Sundar. P : Computer vision syndrome
By- Dr.Rohini krishna
விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்த போது, ஒரு காட்சியைப் பார்த்தேன்.
இரண்டு வயதிருக்கும் ஒரு சிறு குழந்தை. கையில் ஆன்ட்ராய்டு ஃபோனை வைத்துக் கொண்டு, இரவு பத்து மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை சுறுசுறுப்பாக, ஒரு வினாடி இடைவெளியின்றி ஸ்க்ரோல் செய்து நோண்டிக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல், எட்டிப் பார்த்த இன்னொரு குழந்தையை “டப்” பென்று, ஒன்று போட்டது.
இதில் விபரீதம் என்னவென்றால், குழந்தையின் தாய், பெருமையுடன் அகமகிழ்ந்து இரண்டையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணின், அகாமடேஷன் தசைகளே வலுப்பெற்றிருக்காது. அந்த வயதில் , பூப்போன்றிருக்கும் குழந்தையின்
விழித்திரையில், நேரடியாகப் பாயும் LED வெளிச்சம் எத்தனை கெடுதல்!
விளையாட்டுச் சாமான் போல் எலெக்ட்ரானிக் சாமன்களை , குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு, அதைப் பெருமையோடு எல்லோரிடமும் சொல்லிப் பூரிக்கும் பெற்றோரை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
கணினிக் கண் கோளாறு, எனப்படும் computer vision syndrome இன்று பெருநகர, கண் மருத்துவர்கள், மிக அதிகமாகச் சந்திக்கும் வியாதி.
சாஃப்ட்வேர் துறையில் வேலையில் சேர்ந்து, இரண்டு வருடங்களுக்குள், டாக்டரிடம் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கண்களில் வலி, கண் சோர்வு, எரிச்சல், தலைவலி, மங்கலாக , இரண்டிரண்டாக சில நேரங்களில் மட்டும் தெரிவது, எல்லாமே இதன் அறிகுறிகள்.
காரணம் என்ன?
சாதாரணமாகப் புத்தகம் படிக்கும் போது, குறுக்கு வாட்டில் படிக்கிறோம்.
Horizontal viewing. கணினித்திரையோ மேலிருந்து கீழே, ஸ்க்ரோல் செய்து வாசிக்கிறோம், vertical viewing. Palpebral fissure, எனப்படும் மேல், கீழ் இமைகளுக்கான இடைவெளி, கொஞ்சம் விரிந்தே இருப்பதால், கண்ணின் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. ஆழ்ந்த கவனத்தினால், கண் சிமிட்டுவதும் இல்லை. தசைகளும் தொடர் வேலையால், முறுக்கிக் கொள்கின்றன.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட தொடர் வேலை நேரங்கள். இயற்கைக்குப் புறம்பான தூக்கம் மற்றும் வேலை நேர மாற்றங்கள். இவை எல்லாமாகச் சேர்ந்து உண்டாக்குவது தான் கணினிக் கண் கோளாறு.
என்ன செய்யலாம்?
முதலில் கண் மருத்துவரிடம் சென்று, லேசான ஆஸ்டிக்மாடிசம் பவர் எதுவும் இல்லையா என உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். லேசான பவர் இருப்பவர்களுக்கு, பார்வை நன்றாகத் தெரியும். ஆனால், கண்சோர்வு அறிகுறிகளும், தலைவலியும் அதிகமாக இருக்கும்.. பவர் இருக்கும் பட்சத்தில், கண்ணாடி அணியாமல், கணினித்திரையைப் பார்க்கவே கூடாது.
பவர் இல்லாதவர்களுக்குக் கூட, கணினி பயன்பாட்டுக்கென, anti-glare கண்ணாடிகள் கிடைக்கின்றன.
முழு நேரக் கணினிப் பணியில் இருக்கும், நாற்பது வயதுக்கு மேலாகி, பைஃபோகல் பவர் இருப்பவர்கள், அண்ணாந்து, அட்ஜஸ்ட் பண்ணிப் பார்த்து, கழுத்தையும் கண்ணையும் ஸ்ட்ரெயின் செய்து கொள்வதை விட, கணினிக்கென, கண் மருத்துவர் பரிசோதனையுடன், ஒரு தனி கண்ணாடி வைத்துக் கொள்வது நலம்.
கருத்தில் கொள்ள வேண்டியவை:
கணினித்திரை, கண் பார்வை சற்றே கீழ் நோக்கிப் பார்க்கும்படியான உயரத்தில் இருக்க வேண்டும்.
அண்ணாந்து பார்க்கும் படியான உயரமான மேஜையில் கணினி இருக்குமானால், கண் பிரச்சினைகளோடு, கழுத்து வலியும் உத்தரவாதம்.
குறைந்தது, ஒன்றரை அடி தூரத்தில் திரை இருக்க வேண்டும்.
கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை, சில வினாடிகள் கண்களை மூடி ஓய்வு கொடுக்க வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, இருக்கையிலிருந்து எழுந்து, சற்றே உலவி விட்டு வரலாம். இது முதுகுப் பிரச்சினைகளையும் தவிர்க்கும்.
கூர்ந்து நோக்காமல், தூரத்துப் பச்சையைப் பார்ப்பதே கண் தசைகளுக்கான ரிலாக்ஸேஷன்.
இது எப்படி சாத்தியம் என்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, குளிர்ந்த நீரில் நனைக்கப்பட்ட கைக்குட்டையை, கண்களின் மேல் மூடிக்கொண்டு, கண்களுக்கு சில நிமிடங்கள் ஓய்வு கொடுக்கலாம்.
இவை போக, dry eyes க்கான, கண்களுக்கு நீர்ச்சத்துக் கொடுத்து, எரிச்சலைக் குறைக்கும் மருந்துகளை, மருத்துவர் ஆலோசனைக்குப்பின் உபயோகப்படுத்தலாம்.
முப்பது வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை முறையை நினைத்துப் பாருங்கள்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், வெள்ளிக்கிழமை ஒலியும்- ஒளியும்,
வார இறுதி திரைப்படம் தவிர, எதுவும் கிடையாது.
படிக்கும் குழந்தைகள் மாலை நேரங்களில் விளையாடுவார்கள்.
வேலைக்குச் செல்பவர்களும், வீட்டிலிருக்கும் பெண்களும் கூட, மாலை நேரங்களை நண்பர்களோடும், குடும்பத்தோடும் செலவழிப்பார்கள்.
கண்கள் சந்தோஷமாக இருந்தன.
குடும்ப உறவுகளைப் பற்றி, நான் பேசிக்கொண்டிருக்கவில்லை. கண்களின் கதியை நினைத்துப் பாருங்கள்.
இன்றோ, வேலை நேரம் போக மீதி நேரமும், அலைபேசிகள், கணினியில் சமூகத் தளங்கள், அல்லது கேம்ஸ்கள், தொடர் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.
கண்கள் “ஓய்வு, ஓய்வு”, என்று கெஞ்சுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.
ஒரு நாளைக்கு, பதினெட்டு மணி நேரம் கண்களுக்கு வேலை கொடுப்போம், ஆனால் ஒரு தொந்தரவும் இருக்கக்கூடாது, என்று நினைப்பது பேராசையல்லவா!
சரியான பழக்கவழக்கங்கள், சரியான ஓய்வு, பாதுகாப்பான ஸ்கிரீன்களுடன் கூடிய கணினிகள், கண்களின் மேல் நேரடியாகப் படாமல், சரியான அளவு இருக்கும் அறையின் வெளிச்சம், வசதியான இருக்கை அமைப்பு, இடையிடையே ஓய்வு, இவை எல்லாவற்றையும் மேற்கொண்டால் மட்டுமே, வருடக் கணக்கில், இந்தத் துறையில் பணி புரிய முடியும்.
குழந்தைகளுக்கும், பள்ளியிலும், வீட்டிலும், பாடங்களின் பளு அதிகம். தவிர, ட்யூஷன்கள், ஸ்மார்ட் க்ளாஸ்கள், கணினியில் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகள் என்று கண்களுக்கான வேலை அதிகம்.
ஆகவே, குழந்தைகள் அலைபேசி மற்றும் கணினியில் விளையாடுவதையும், வீடியோ கேம்ஸ் விளையாடுவதையும், தொலைகாட்சி பார்ப்பதையும், பெருமளவு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
எல்லா வயதினருக்குமே, அவுட்டோர் கேம்ஸ், ஒரு வரப்ப்ரசாதம்.
பாதிப் பிரச்சினைகளிலிருந்து அது விடுதலை அளித்து விடும்.
Dr.Rohini krishna

கருத்துகள் இல்லை: