வெள்ளி, 12 ஜூலை, 2019

குமாரசாமியின் அதிரடி அறிவிப்பு.. பயந்து போய் ரிசார்ட்டுக்கு ஓடும் பாஜக எம்எல்ஏக்கள்.. செம திருப்பம்

Veerakumar /tamil.oneindia.com : பெங்களூர்: கர்நாடக அரசியலில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. இத்தனை நாட்களாக பாஜகவுக்கு பயந்து, ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாத்து வந்த நிலை மாறி, இப்போது பாஜக எம்எல்ஏக்கள் பாதுகாக்கும் நிலை வந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் திடீரென 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மஜத எம்எல்ஏக்கள் என  மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்து விட்டனர்.
 பாஜகதான் இதன் பின்னணியில் இருப்பதாக ஆளும் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில்தான், அவர்கள் ரிசார்ட்டில் இருந்து பெங்களூர் அழைத்து வரப்பட்டனர். ஆனால், இன்று திடீரென பாஜகவின் 105 எம்எல்ஏக்களும் பெங்களூரின் புறநகர் பகுதியான ராஜனகுண்டே, என்ற பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் குமாரசாமியின் அதிரடி முடிவுதான். இன்று காலை, சட்ட சபையில் உரையாற்றிய முதல்வர் குமாரசாமி, நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களால், தான், அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், அதற்கு நேரம் ஒதுக்கி தரும்படி திடீரென ஒரு கோரிக்கையை சபாநாயகர் முன்னிலையில் வைத்தார். இதனால் பாஜக  வட்டாரமே அதிர்ந்து கிடக்கிறது.

 குமாரசாமி பேசிவிட்டு அமர்ந்ததும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எடியூரப்பா, திடீரென சட்டசபைக்கு வெளியே கிளம்பிச் சென்று விட்டது இந்த பதட்டத்தை உறுதிப்படுத்தியது.

வெளியே சென்ற எடியூரப்பா, பாஜக நிர்வாகிகளுடன், குமாரசாமியின் முடிவு தொடர்பாக, அவசரமாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களை விட குறைவான ஆதரவை கொண்ட குமாரசாமி, திடீரென இவ்வாறு ஒரு முடிவை அறிவிக்க காரணம் என்ன என்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலரை திரும்பவும் தங்கள் பக்கம் கொண்டு வந்து விடலாம் என்று குமாரசாமிக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மற்றொரு பக்கம், பாஜக எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து விடலாம், அல்லது அவர்களை ராஜினாமா செய்ய வைத்து விடலாம் என்று குமாரசாமி திட்டமிட்டிருக்கலாம்  என்றும் பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதனால் பயந்து போன எடியூரப்பா, அவசர அவசரமாக, இன்று மாலையே பாஜக எம்எல்ஏக்கள் அனைவரையும் ரிசார்ட்டுக்கு மாற்றுகிறார். இன்று மாலை 4.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பாவிடம், நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, ஆம்.. பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க ஆசைப்பட்டனர். எனவே செல்கிறார்கள். திங்கள்கிழமை, காலை சட்டசபைக்கு வருவார்கள் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: