திங்கள், 8 ஜூலை, 2019

தினகரன் : அமமுக வேலூரில் போட்டியிடாது!

வேலூரில் போட்டியில்லை: தினகரன்மின்னம்பலம் : வேலூர் மக்களவை தொகுதியில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
விருத்தாசலம் நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் உதயகுமார் -கௌசல்யாவின் திருமணத்தை இன்று (ஜூலை 8) டிடிவி தினகரன் விருத்தாசலத்தில் நடத்தி வைத்தார்.
திருமண விழாவுக்குபின் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் வேலூர் மக்களவை மற்றும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த தினகரன்,
“அமமுகவை பதிவு செய்யும் பணியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டால் ஏற்கனவே போட்டியிட்ட பரிசுப்பெட்டி சின்னம் கேட்டாலும் கூட அதை தேர்தல் ஆணையம் வழங்குமா என்று தெரியவில்லை.
எனவே மீண்டும் நாம் புதிய சின்னத்தில் சுயேச்சையாக நிற்க வேண்டுமா என்று வேலூர் மாவட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னிடம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே கழகம் பதிவு செய்யப்பட்ட பின் தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்படும்போது அமமுக கட்சி பதிவு பெற்றிருக்கும். அப்போது நாங்கள் விரும்பும் ஒரு நிலையான சின்னத்தைப் பெற்று அந்த சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று தெரிவித்தார் தினகரன்.
வேலூர் தேர்தலில் போட்டியிடாததை அடுத்து அத்தொகுதியில் உள்ள அமமுக நிர்வாகிகளை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.

கருத்துகள் இல்லை: