ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்து கொலை .தாய் சகோதரி முன்னிலையில் . கரூர் கும்பல் கொடுரம்

tamilthehindu :கரூர் கரூர் மாவட்டம் அல்லிக்கவுண்டர் என்ற இடத்தில் ச்ல்போன் திருடியதாக சந்தேகத்தின்பேரில் 15 வயது சிறுவனை தாய் சகோதரி கண்ணெதிரில் அடித்துக்கொன்றது ஒரு கும்பல்.
கரூரை அருகே உள்ளது அல்லிக்கவுண்டனூர் கிராமம். இங்கு வசிப்பவர் பழனிசாமி. இவருக்கு பாலசுப்பிரமணி(15) என்ற மகனும், ஒருமகளும் உள்ளனர். பாலசுப்ரமணியம் சரியாக படிப்பு வராததால் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார். அதன் பின்னர் பள்ளிக்குச் செல்லாமல் கிடைத்த வேலைகளை செய்துக்கொண்டு கிராமத்தில் சுற்றிவந்துள்ளார்.<" பாலசுப்ரமணியத்துக்கு திருட்டுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கைச்செலவுக்காக ஊரிலுள்ள சில வீடுகளில் பாலசுப்பிரமணி திருடியதாகவும் அதை கண்டுபிடித்த ஊர் மக்கள் அவ்வப்போது பெற்றோரிடம் கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜாலியாக சுற்றிவந்துள்ளார் பாலசுப்ரமணி. அவர் மேல் சிலர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் முனியாண்டி என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சில பொருட்கள் காணாமல் போயுள்ளது. செல்போனும் திருடு போயுள்ளது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ஊரில் உள்ள சிலர், சிறுவன் பாலசுப்ரமணிதான் இந்த திருட்டை செய்திருப்பான் என்று முடிவு செய்து ஆத்திரத்துடன் கும்பலாக உருட்டுக்கட்டைகளுடன் பாலசுப்ரமணியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் பாலசுப்ரமணியனும் அவரது தாயார் மற்றும் சகோதரிகள் இருந்துள்ளனர். பாலசுப்ரமணியத்தை தாக்கிய கும்பல் அவரைக் கதற கதற வெளியே இழுத்துவந்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக உருட்டுக்கட்டையாலும், கைகால்களாலும் தாக்கி உள்ளனர்.
இதில் கடுமையான காயமடைந்த பாலசுப்பிரமணி மயக்கமடைந்தார். தடுக்க வந்த தாய், சகோதரியை அக்கும்பல் மிரட்டி உள்ளது. மயங்கி விழுந்த பாலசுப்ரமணிக்கு தண்ணீர் கொடுக்கக் கூட அக்கும்பல் அனுமதிக்கவில்லை. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பாலசுப்ரமணி உயிரிழந்தார்.
கும்பல் ஒன்று சிறுவனை தாக்கி கொலை செய்த விஷயம் அறிந்து அங்கு சென்ற போலீஸார், சிறுவன் பாலசுப்ரமணியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை அடித்துக் கொன்றதாக சிலரைப்பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சாதாரண திருட்டு போன்ற குற்றங்களுக்கு காவல்துறையின் மூலம் தண்டனை பெறும் காலத்தில் வடமாநிலங்களில்தான் இதுபோன்று கட்டி வைத்து கொடூரமாக தாக்கி கொல்லும் சம்பவங்கள் நடக்கும். தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற கொடூர கலாச்சாரம் ஓங்கி வருவது சகிப்புத்தன்மையற்ற செயலாகவே உள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: