ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

தமிழகத்தின் தொழில் புரட்சிய சாதித்த கலைஞர் ... தொழிலதிபர்கள் புகழாஞ்சலி

Muralidharan Pb : தாஜ் கோரமண்டல் பால் ரூம் ஹாலில் இதற்கு முன்னர் ஒரு
திருமண வரவேற்பு, ஒரு அமெரிக்க நிறுவனத்தின் பொருள் அறிமுகம் மற்றும் பல வருடங்களுக்கு முன்னர் CII நடத்திய ஒரு நிகழ்விற்கு சென்றுள்ளேன். அதே ஹோட்டலில் ஒரு புகழஞ்சலி நிகழ்விற்கு செல்வது இது புதியது, எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே.
மாலை 6 மணி என்று குறிப்பிட்டிருந்தமையால் சரியாக 6 மணிக்கு சென்றோம். என் மனதுக்குள் எப்படியும் பல முதலாளிகள் அரசியியல்வாதிகள் வருவார்கள் வழக்கம் போல் நேரம் தாமதமாகவே ஆரம்பிப்பார்கள் என்று தோன்றினாலும் நமது கடமையை செய்வோம் என்று சென்றோம். எங்களுக்கே வியப்பு, 500-600 பேர் உட்கார கூடிய அரங்கில் அதிகபட்சம் 10 இருக்கைகளே மிச்சம். அனைத்துமே நிரம்பி இருந்தது. இன்னும் கேட்டால் சில நிமிடங்கள் முன்னரே வந்திருக்கவேண்டிய ஒரு நிகழ்வு. திமுக தலைவர் உட்பட நிறைய முன்னணியினர் முதல் வரிசையில் உட்கார்ந்த நிலையில் மிகச்சரியாக 6 மணிக்கு துவங்கியது புகழ்வணக்கம்.
ஒரு புகழஞ்சலி நிகழவிற்கு பல தொழிலதிபர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்தது அண்மையில் மட்டுமல்ல தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒரு தருணம். தனது பேச்சில் அதையும் ஒரு தொழிலதிபர் நேற்று குறிப்பிட்டார்.

முதலாவதாக கலைஞர் டிவி ஒரு குறும்படத்தை தயாரித்திருந்தது. இன்றைய இளைஞர்கள் கலைஞரைப் பற்றிய பார்வையை படம் பிடித்துக் காட்டியிருந்தது சிறப்பு.
அடுத்து திரு ரபீக் தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் பேசினார். அவர் தனது வரவேற்புரையில் கலைஞரோடு தனது நெருக்கத்தை குறிப்பிட்டார்.
திரு. ஏசி முத்தையா பேசுகையில், அவர் தொழில் தொடங்க அவரது இல்லாதார் அனுமதி கொடுத்தும் ஏதாவது பெரியதாக செய்யவேண்டும் என்று உரத்தொழிற்சாலை நிறுவிட எண்ணி முதன்முதலில் கலைஞரை 60களின் கடைசியில் சந்தித்து பேசியதையும், 2 வாரங்களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒப்புதல் பெற்று தூத்துக்குடியில் தொழிற்சாலையாக உருவாக்கிட கலைஞர் உதவியதை கூறினார். பிறகு மதுபான தொழிலில் இறங்க முன்வந்தவரை கலைஞர்,'உங்கள் குடும்பத்திற்கு இந்த வியாபாரம் உகந்ததல்ல' என்று அறிவுரை கூறியபின் அந்த திட்டத்தை திரு முத்தையா கைவிட்டதை குறிப்பிட்டு கூறினார்.
அடுத்து திரு. கருமுத்து கண்ணன் பேசுகையில், கலைஞருடன் தான் கொண்டிருந்த நீண்ட நாள் நட்பினை பகிர்ந்தார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் புனரமைக்கப்படவேண்டி அவரிடம் நேரம் கேட்டு சில நாட்களில் சந்தித்து பெரியதொரு மனுவை கொடுத்ததை பொறுமையுடன் படித்துப் பார்த்துவிட்டு, "ஏன்யா நார்த்திகனான எனக்கே இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று தோன்றுகிறது. இவ்வளவு நாளாக ஏன் இதை செய்யவில்லை. அரசு சார்பில் ஏதாவது உதவி கொடுக்கவேண்டும் என்று சொன்னாலும் நான் உடனே ஏற்பாடு செய்கிறேன்' என்றார். தனது தொழிலார்களின் குடும்பத்திற்கு ஒரு பள்ளி கட்ட அனுமதி கேட்டதும், அதிகாரி 40 பள்ளிகளுக்கு தான் அனுமதி என்று கூற, 'அவரென்ன தனது பசங்க படிக்கவா பள்ளிக்கூடம் கேட்கிறார்? தனது தொழிலாளர்கள் குடும்பத்துக்காக கேட்கிறார்' என்று உடனே சம்மதித்து அனுமதி அளித்ததை நினைவு கூர்ந்தார்.
அடுத்து திரு. வேணு ஸ்ரீனிவாசன் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் தனது தேவைக்கு ஒரு அணை கட்டிடவேண்டும் எனவும் அதற்கு உதவிட கேட்ட போது, 'தடுப்பணை வேண்டுமென்றால் கட்டிக்கொள்ளுங்கள் அணை தர முடியாது, ஏனெனினில் அருகில் கீழ் நிலையுள்ள கிராமங்களை அது பாதிக்கும் ஆகையால் தடுப்பணை கட்டி அதிலுள்ள நீரை ஆழ் கிணறு கொண்டு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று வேளாண்மை பாதிக்காத வண்ணம் தொழிற்சாலைகளை நிறுவியதை சிறப்பாக கூறினார். ஓசூர் சிட்டிகா உண்டாக்கியதினால் தான் தங்களது மோட்டார் பைக் உற்பத்தியை அங்கே தொடங்கி இன்று நாங்கள் சிறப்பாக முன்னேறியுள்ளோம் என்று குறிப்பிட்டார். மண்டல் கமிஷன் வருவதற்கு முன்னதாகவே தமிழநாட்டில் ஒட்டுமொத்தமாக பெரிய சமூக முன்னேற்றத்தை வழங்கி தொழிலில் மட்டுமல்ல சமூக முன்னேற்றமும் கலைஞரால் நடந்தேறியது என்று சொன்னவர் டிவி சுந்தரம் நிறுவனத்தின் மகனான திரு. வேணு ஸ்ரீனிவாசன் என்பது குறிப்பித்தக்கது.
இந்தியா சிமெண்ட்ஸ் திரு. என். ஸ்ரீனிவாசன், கலைஞர் 5 முறை முதல்வரான வரலாற்றில் ஒவ்வொரு ஆட்சியின் போதும் நடந்த சாதனைகளையும், ஒவ்வொரு முறை அவர் முன்னெடுத்த முன்னேற்றப்பாதைகளையும் குறிப்பிட்டார். 1996-2001 ஆட்சியில் கலைஞர் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் துறையில் முதலாவது மாநிலமாக்கியதை குறிப்பிட்டு சொன்னார். விஜி சந்தோசம் தங்கள் இடத்தை அரசு எடுத்துக்கொண்டால் தங்களது அண்ணாவின் கனவான அதிசய உலகம் நிறைவேறாது என்று கூறிய போது,"எங்கள் அண்ணன் கண்ட கனவு செழுமையான தமிழகம், அதற்கு மின்சாரம் முக்கியம் ஆக மின் திட்டத்தை நிறைவேற்றிட நீங்கள் உங்களது இடத்தை அரசுக்கு தாருங்கள் என்று வட சென்னை மின் திட்டத்தின் போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையை நினைவு கூர்ந்தார். 2006-2011ல் தான் தமிழகத்தின் உச்சகட்ட வளர்ச்சி, அதற்குண்டான அடித்தளத்தை அவர் முந்தய ஆட்சி காலங்களில் மேற்கொண்டார் என்று குறிப்பிட்டார்.
நிறைய பேர் பேசினார்கள், ஆகவே ஒரே பதிவாக போடுவதை விட இரு பதிவாக போடுகிறேன்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: