திங்கள், 24 செப்டம்பர், 2018

குவியும் வழக்குகள்: ராஜா மீது குண்டாஸ்?


குவியும் வழக்குகள்: ராஜா மீது குண்டாஸ்?மின்னம்பலம்: கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் மட்டுமில்லாமல் பொது மக்கள் மத்தியிலும் இரண்டு பெயர்கள் சரளமாக உச்சரிக்கப்பட்டது. அதில் ஒருவர் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மற்றொருவர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் ஆகியோர்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஹெச்.ராஜா போலீஸாரையும், நீதிமன்றத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். இதற்காக அவர் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது. ராஜாவை காவல்துறை இன்னமும் கைது செய்யவில்லை. ஆனால் இதே ரீதியில் பேசிய கருணாஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கருணாஸ் கைது... ராஜாவுக்கு பாதுகாப்பா?

இருவருமே பொதுவெளியில் வரம்பை மீறி பேசியிருந்தாலும் கருணாஸை மட்டும் தமிழக காவல் துறை உளவு பார்த்து கைது செய்திருக்கிறது. இந்த கைதானது பாரபட்சமானது என்று கூறியுள்ள அரசியல் தலைவர்கள்,“கருணாஸூக்கு ஒரு நீதி, ஹெச்.ராஜாவுக்கு ஒரு நீதியா”என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

அரசியல்வாதிகளின் கேள்வி ஒருபுறம் இருந்தாலும் ஏன் ஹெ.ராஜா இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
காவல் துறையையும், நீதிமன்றத்தையும் அவதூறாகப் பேசியதற்காக ஹெச்.ராஜா மீது கடந்த 18ஆம் தேதி திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து, அவர் மீது இந்து சமய அறநிலையத் துறையினர், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரும் புகார் அளித்து வருகின்றனர்.
புகார்களைக் கேட்டு வாங்கும் போலீஸ்

இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இட்ட உத்தரவின் பேரில் தற்போது ராஜா மீது ஆங்காங்கே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி குறித்து ஹெச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்காக ஹெ.ராஜா மீது பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்கள். ஆனால் இந்த புகார்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக காவல் துறை புதுப்பிக்க ஆரம்பித்துள்ளது.
சிதம்பரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கிள்ளை ரவீந்திரனுக்கு கடந்த வாரம் கிள்ளை காவல் நிலையத்தில் இருந்து போன் வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய காவல் அதிகாரி “ஹெச். ராஜா மீது நீங்கள் கொடுத்த புகார் குறித்து பேச வேண்டும்”என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து கிள்ளை காவல் நிலையத்திற்குக் கடந்த 20 ஆம் தேதி சென்ற கிள்ளை ரவீந்திரனிடம் காவல் துறையினர் ஹெச். ராஜா மீதான புகாரை மீண்டும் பெற்று உடனடியாகவே வழக்கை பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை நகலையும் கொடுத்திருக்கின்றனர். கிள்ளை ரவீந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல கோவை மாவட்டம் கனியூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் (தி.மு.க) வேலுச்சாமி என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் கருமத்தம்பட்டி போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் மீதும் இப்போது ஹெச்.ராஜா மீது 500, 501 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக எம்.பி. புகாரின் மீதும் வழக்கு!

புகார் அளித்து 4 மாதங்களுக்குப் பிறகு வழக்குகள் ஹெச்.ராஜா மீது குவிந்து வரும் நிலையில் கடலூர் அதிமுக எம்.பி. அருண்மொழித்தேவன், ஹெச். ராஜா மீது புகார் கொடுத்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து கோயில்கள் மீட்பு இயக்கம் சார்பில் கடந்த 2ஆம் தேதி உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “திட்டக்குடி சிட்டிங் எம்.பி அருண்மொழிதேவன். ஒரு எம்.பி.யாக இருக்கின்ற ஆள், அதுவும் சிட்டிங் எம்.பி, கோயில் நிலத்தை 200 ஏக்கர் அபகரிச்சு இருக்கார். அதில் பிரதானமானது குளம். கடந்த வாரம் அந்தக் குளத்தை நமது இயக்கம் மீட்டெடுத்திருக்கிறது. எங்கிட்ட எல்லா டாக்குமென்ட்டுகளும் இருக்கு. கழகம் என்றாலே கலகம்தான். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி” என்று பேசியிருந்தார். அறநிலையத் துறை அதிகாரிகளையும் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து தன் மீது வீண் அவதூறு கிளப்புவதாக அதிமுக எம்.பி. அருண்மொழி தேவன் ராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இதன் மீது செப்டம்பர் 24ஆம் தேதி ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
“குண்டாஸுக்கும் ரெடி!
காவல்துறை வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தோம்.
“பெரியார் சிலைக்கு செருப்பு வீசியதற்காகவே ஜெகதீசன் என்பவர் மீது மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற சூழலில் ஹெச்.ராஜா மீதான வழக்குகள் தொடர்ந்து பதியப்பட்டு வருவதை திட்டமிட்ட ஒரு ஆயத்த நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.
ஹெச். ராஜா மீது அதுவும் திமுகவினர் சில மாதங்கள் முன்பு கொடுத்த புகார்களின் மீது வழக்குப் பதிவும் முடிவு என்பது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களால் தன்னிச்சையாக மேற்கொண்டுவிட முடியாது. அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் அறிவுறுத்தல் இல்லாமல் இந்த வழக்குகள் பதியப்பட வாய்ப்பில்லை. எஸ்.பி.க்களுக்கு நிச்சயம் காவல்துறை தலைமையின் அட்வைஸ் இருக்கும். காவல்துறை தலைமை என்றால் அது முதல்வர் சொல்படிதான் செயல்படும்.
இந்த நிலையில் ராஜா மீது கடந்த ஒருவாரத்தில் நான்கு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரியாரிய அமைப்புகள் கொடுத்த புகார்களையும் வழக்குகளாக மாற்றினால் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும். எனவே அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு ராஜா மீது குண்டாஸ் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றே தெரிகிறது. சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் நான்கு வாரங்களுக்குள் ஒரு நாள் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும். ராஜா ஆஜர் ஆகி பதில் அளிக்கும் வரை தமிழக போலீஸ் காத்திருக்கக் கூடும்” என்கிறார்கள் தமிழக போலீஸ் வட்டாரத்தில்.
-மின்னம்பலம் அரசியல் டீம்

கருத்துகள் இல்லை: