செவ்வாய், 25 செப்டம்பர், 2018

பாளையங்கோட்டை சிறையில் ஜாதி வார்டுகள் .ஜாதி அறைகள் .ஜாதி பெயர்கள் . தொடரும் ஜாதி வெறி அதிகாரிகள்

மின்னம்பலம்: பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகள் சாதி அடிப்படையில் வார்டுகளில் அடைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர் முன்னாள் கைதிகள். இது பற்றி, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் சாதி அடிப்படையில் கைதிகள் வகைப்படுத்தப்பட்டு வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்குப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரிகள் கண்டித்தும், சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
பாளையங்கோட்டை சிறையில் தண்டனை அனுபவித்த முனியப்பன் கூறுகையில், தான் ஏழரை ஆண்டுகள் சிறையில் இருந்ததாகத் தெரிவித்தார். “பாளையங்கோட்டை சிறையில், கைதிகளின் சாதிப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். கைதிகளைப் பார்க்க ஆட்கள் வரும்போது, சாதிப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். பார்க்க வந்தவர்களிடம், மற்ற சாதியினரைப் பேசக் கூட அனுமதிக்கமாட்டார்கள். இது குறித்துப் பலமுறை மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்து விட்டேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.

“1984ஆம் ஆண்டிலிருந்து சாதி அடிப்படையில் தான் வார்டுகள் ஒதுக்கப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலை விரித்தாடுகிறது சாதிப் பிரச்சனை. அதனால், சாதியின் காரணமாக சிறைக்குள் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக வார்டுகளை இவ்வாறு பிரித்துள்ளோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற பிரிவினைகள் எதுவும் கிடையாது என்று, இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது தமிழக அரசு. இது குறித்து சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், “மாநிலத்தின் எந்தவொரு சிறையிலும் இது போன்ற பாகுபாடுகள் கிடையாது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என கூறினார்.
சிறைச்சாலை கண்காணிப்பாளர் கிருஷ்ணா குமார் கூறுகையில், “சாதி அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படவில்லை. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை ஒரே அறையில் இருக்க வைத்துள்ளோம்” என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டில் உண்மையிருப்பது கண்டறியப்பட்டால் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிறைத் துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் அஷுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: