வியாழன், 16 ஆகஸ்ட், 2018

எல்லா நோபல் பரிசுகளுக்கும் மோடிக்கு உரியவை!


சவுக்கு : கிரிஷ் சஹானே-
அன்பு சகோதரி, சகோதரர்களுக்கு,
இனிய 72ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள். நம்முடைய வரலாற்றின் முக்கியமான இந்த தருணத்தில், நம்முடைய தேசம் உருவாக்கிய  மிகச் சிறந்த தலைவரான நரேந்திர மோடியால் வழிநடத்தப்பட அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். யுனஸ்கோ மோடி அவர்களை உலகின் சிறந்த பிரதமராக அறிவித்திருப்பதோடு, அவரது தலைமயின் கீழ், நம்முடைய தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் தேசியப் பறவைக்கு இதே போன்ற கவுரவம்
அளிக்கப்பட்டிருப்பதை, நீங்கள் வாட்ஸ் அப்பில் பார்வேர்டு செய்யப்படும் செய்திகளில் இருந்து அறிந்திருக்கலாம். நம்முடைய தேசம் மகத்தான பாய்ச்சலுக்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய தலைவருக்கு மறுக்கப்பட்ட நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுத்தர கோருவதில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
உண்மை என்னவெனில், மோடி அவர்கள் ஒன்றல்ல, எல்லா நோபல் பரிசுக்கும் உரியவர். கடந்த வாரம் தான், அவர் ரசாயன நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
வாயுக்களை தனிமைப்படுத்துவது மற்றும் அழுத்தம் தருவது ஆகிய செலவு மிக்க முறைகள் இல்லாமல் குப்பை குவியல் வாயுக்களை சமையல் எரிவாயுவாக மாற்றும் ஆற்றல் குறித்து எடுத்துரைத்தற்காக அவர் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிக திறந்த வெளி சாக்கடைகளைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு இந்த நேரடி மாற்றத் தொழில் நுட்பம் மிகவும் பொருத்தமானது.

இந்த மறுசுழற்சி ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிக செலவில்லாத எரிசக்தி மற்றும் சமையல் எரிவாயுவை மோடி அரசு அளிக்க உள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசுதான், நம்முடைய தலைவருக்கு முதலில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தியை அங்கீகரிக்க மறுத்த தவறைச் செய்த நோபல் குழு, மோடியை காந்தியின் கொள்கைகளுக்கு வாரிசாக்கிய, 2002இல் குஜராத்தில் அவரது செயல்களுக்காக அங்கீகரிக்காமல் இருக்கும் தவறான போக்கைக் கடைப்பிடிக்கிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது சகாக்களாக இருந்த பாபு பஜ்ரங்ஜி மற்றும் ஹரேஷ் பட்ஜி ஆகியோரது நேர்காணல், 1947இல் கொல்கத்தாவை அமைதிப்படுத்துவதில் மகாத்மா காந்தியின் பங்கைப் போலவே, கோத்ரா ரெயில் எரிப்புக்கு பிறகு அவர் மேற்கொண்ட செயல்களுக்கு நிகரானவை என உணர்த்துகின்றன. அந்த நாட்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்த அப்பாவி இந்தியர்களுக்கு குஜராத் நிர்வாகம் வழங்கிய நிவாரணமும் இதற்குச் சற்றும் குறைந்தது அல்ல.
நோபல் குழு அவரை அலட்சியம் செய்தாலும், 2002இல் மோடி அவர்களின் செயல்கள் நாட்டுப்பற்று மிக்க இந்தியர்கள் மனதில் அவரது இடத்தை உறுதியாக்கி, நாட்டின் பாதுகாவலர் அந்தஸ்திற்கு அவரை உயர்த்தியுள்ளது. இந்தப் பயணத்தில் மோடி,  மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு உரியவராகி இருக்கிறார். முழு தலை மாற்று அறுவை சிகிச்சை மற்றும், உடலுக்கு வெளியே நிகழும் பிரசவம் ஆகிய பாரம்பரிய இந்திய அறிவைப் புத்துயிர் பெற வைத்ததற்காக அவர் இதற்கு உரியவராகிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் நம்முடைய அற்புதமான மருத்துவ வரலாறு, காலானியாதிக்கவாதிகள் மற்றும் சுய நிந்தனை செய்யும் இந்தியர்களால் கட்டுக்கதை அல்லது புராணம் எனச் சொல்லப்பட்டதாக அவர் கூறினார். அவர் மீண்டும் பதவிக்கு வந்த போது இது குறித்து தெளிவாக கூறினார்:
“மகாபாரதம், கர்ணன் தனது தாயின் கருப்பைக்கு வெளியே பிறந்ததாக சொல்கிறது. இதன் பொருள் மரபணு விஞ்ஞானம் அந்தக் காலத்தில் இருந்துள்ளது. அதன் காரணமாகத்தான் கர்ணன், தாயின் கருப்பைக்கு வெளியே பிறந்தான். நம் கடவுள் விநாயகரை வழிபடுகிறோம். மனித உடலின் மீது யானையின் தலையைப் பொருத்தக்கூடிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வல்லுனர் அந்த காலத்தில் இருந்து, பிளாஸ்டிக் சர்ஜரி பழக்கத்தை துவக்கியிருக்க வேண்டும்.”
மகத்தான இலக்கியவாதி
மூன்று நோபல் பரிசுகள் வரலாற்றில் மோடி அவர்களின் இடத்தை உறுதி செய்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் பெயரை இடம்பெற வைக்கும். ரசாயனம் மற்றும் அமைதிக்கான இருவேறு துறைகளில் நோபல் பரிசு வென்ற லினஸ் பவுலிங்கை அவர் விஞ்சிவிடுவார். ஆனால் இந்தியர்கள், இந்த விருதுகளின் மகத்தான சங்கமத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள்.  எனவே இலக்கியத்திற்குச் செல்வோம். இதில் மோடி எழுத்தாளராக அதிலும் குறிப்பாக பெரிய எழுத்துக்களை எழுதுபவராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இந்த வகை இலக்கியம், சிக்கலான கருத்தாக்கங்களைக்கூட முதலெழுத்துக்களின் சுருக்கங்களாக மாற்றிவிடுகிறது. சில நேரங்களில் அடிப்படைக் கருத்தாங்களுக்கு விரிவாக, சுருக்கங்களையும் உருவாக்குகிறது. மோடி அவர்கள் இந்தப் பிரிவில் அதிகம் எழுதுபவராக இருக்கிறார். இந்த சுருக்கத்தின் ஆற்றல் எப்படி இருக்கிறது என்றால் சொல்லுக்கும், செயலுக்குமான வேறுபாடு மறைந்துவிடுகிறது.
விகாஸ் என்றால் வளர்ச்சி. இது மோடியின் முக்கியமான உறுதிமொழிகளில் ஒன்று. இந்தச் சொல்லுக்கு மோடி தரும் அற்புதமான விளக்கத்தைப் பாருங்கள்: VIKAS  – Vidyut, Kanoon, and Sadak. அதாவது, மின்சாரம், சட்டம் மற்றும் சாலைகள். ஒவ்வொரு கிராமமும் மின்சாரம் பெற்றிருக்கிறது.  ராம ராஜ்ஜிய காலம் போல சட்டம் ஒழுங்கு நிலவுகிறது. சாலைகளில் பள்ளங்கள் மறைந்துவிட்டன.
அவர் உருவாக்கிய மற்ற முத்துக்களையும் பாருங்கள். அவருடைய ‘டாப்’ முன்னுரிமை என்ன தெரியுமா? (TOP priority – Tomato, Onions, and Potatoes –  அதாவது, தக்காளி, வெங்காயம், உருளை.
இதோ அடுத்த முத்து. IT + IT = IT (Indian Talent + Information Technology = India Tomorrow) என்னும் சமன்பாடு அவருடய கண்டுபிடிப்பு (ஐ.டி. = இந்தியத் திறமை ஐ.டி. = தகவல் தொழில்நுட்பம் ஐ.டி. = நாளை இந்தியா),
மோடியின் கண்டுபிடிப்புகளில் புதுமைகளுக்கும் குறைவில்லை. PPPs (Public-Private-Partnerships) என்பது பொதுத்துறை, தனியார் கூட்டுத் திட்டங்களைக் குறிப்பது. அதை PPPPs (Public-Private-People-Partnerships) ஆக மாற்றி அசத்தினார் (பொதுமக்கள்- தனியார்- மக்கள்-பாட்னர்ஷிப்).
அடுத்து PRAGATI (Pro-Active Governance and Timely Implementation) என்னும் மந்திரச் சொல்லை முன்னெடுத்தார் (முனைப்புள்ள நிர்வாகம், காலம் தவறாத உடனடிச் செயலாக்கம்). தொலைக்காட்சி செய்திகளுக்கான அரசின் எதிர்வினைகளில் இதைத் தெளிவாக உணர முடியும்.
இன்னல் நீக்கம்
அவரது ஆற்றலுக்கான இறுதி உதாரணமாக, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளுக்காக மாற்றிக்கொள்ளப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை 2016,நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவில் அவர் பணமதிப்பு நடவடிக்கை மூலம் பொருளாதார நோபல் பரிசைக் கோருகிறார். இந்த அறிவார்ந்த மற்றும் துணிச்சலான நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒற்றைச் செயலில் ஒழித்தது. இது கள்ள நோட்டு பிரச்சினையையும் தீர்த்தது. அவருக்கான பாராட்டுகள் உணர்த்துவதுபோல, பாகிஸ்தானின் கள்ளப் பணம் புழங்கிய காஷ்மீரில் ஆர்ப்பாட்டங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது.  பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மாநிலங்கள் ஏகாந்தத்தில் ஆழ்ந்தன. இந்தியா முழுவதும், ஏழைகளில் ஏழைகள்கூட ரொக்கமில்லாப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு, காகித பணம் அல்லாமல் டிஜிட்டல் பணத்தில் பரிவர்த்தனை மேற்கொண்டனர்.
இனி இயற்பியலுக்கான நோபல் பரிசுதான் இருக்கிறது. கவனிப்பதற்குப் பல இருப்பதால், மிகவும் அண்மைக்காலச் சாதனைகளை நான் தவறவிட்டிருக்கலாம். ஆனால் மோடி அவர்கள் தன் பதவிக் காலம் முடிவதற்குள் இதைப் பெறுவது உறுதி. நம்முடைய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், வெர்னர் ஹைசன்பர்க், தன்னுடைய நிலையில்லாக் கோட்பாட்டை வேதங்களிலிருந்து பெற்றதாகக் காண்பித்துள்ளார்.  சார்பியல் தத்துவம் மற்றும் குவாண்டம் கோட்பாடுகள் இந்துப் புராணங்களில் ஒன்றிணைவதை மோடி அவர்கள் நிரூபிப்பார் என்பது உறுதி. இதனிடையே, நம்முடைய சகோதர சகோதரிகள், நோபல் குழுக்களிடம் உரிய முறையில் வலியுறுத்தி நம்முடைய தலைவருக்கு இந்தப் பொருத்தமான செழுமையான விருதுகளைப் பெற்றுத்தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
ஜெய்ஹிந்த்
நன்றி: ஸ்க்ரோல்.இன்
(https://scroll.in/article/890486/why-narendra-modi-deserves-not-one-but-all-the-nobel-prizes)

கருத்துகள் இல்லை: