வியாழன், 16 ஆகஸ்ட், 2018

ஆளுநர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு!

ஆளுநர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு!மின்னம்பலம் : சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் அனைவரும் புறக்கணித்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டதிலிருந்தே அவரை சுற்றி சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன. ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி அவர் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்முறையாகக் கொடியேற்றினார்.

சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று மாநில ஆளுநர்கள் தேநீர் விருந்து அளிப்பது மரபு. இதில் மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற பிற நீதிபதிகள், சபாநாயகர் மற்றும் அரசு உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.
பன்வாரிலால் புரோகித் ராஜ்பவனில் நேற்று மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆனால், இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநரின் விருந்தைப் புறக்கணித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 12ஆம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பதவி ஏற்றார். அந்த விழாவின்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு அடுத்தபடியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. நீதிபதிகள் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இதற்கு ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் நீதியரசர் எம்.எஸ். ரமேஷ் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தார். ‘‘அரசியலமைப்புச் சட்ட பேராளர்களான நீதிபதிகளுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்குமான படிநிலை வரிசை ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்குத் தெரியாதா? அல்லது அமைச்சர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் கீழானவர்கள்தான் நீதிபதிகள் என்பதுதான் அவர்களின் புரிதலா?’’ என்று வினா எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா முடிந்ததும் அனைத்து நீதிபதிகளையும் அழைத்து தலைமை நீதிபதி பேசினாராம். அப்போது, பதவியேற்பு விழாவில் நடந்த புரோட்டாகால் குளறுபடிக்காக தன்னிடம் ஆளுநர் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்ததாகவும், அதை அனைத்து நீதிபதிகளிடமும் தெரிவிக்கச் சொன்னதாகவும் தலைமை நீதிபதி கூறினாராம்.
மேலும் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளரான ராஜகோபால், சுதந்திர தின விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக தலைமை நீதிபதியை சந்தித்தபோதும் மேற்குறிப்பிட்ட நிகழ்வுக்காக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தார் என்றும் நீதிபதிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆளுநர் வருத்தம் தெரிவித்த செய்தி நீதிபதிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னும், நேற்று ஆளுநர் அளித்த சுதந்திர தின தேனீர் விருந்துக்கு பெரும்பாலான நீதிபதிகள் செல்லவில்லை. ஆளுநர் மாளிகை இதுகுறித்து வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நீதிபதிகளின் எண்ண ஓட்டமாக இருக்கிறது என்கின்றனர் உயர் நீதிமன்ற வட்டாரத்தில்

கருத்துகள் இல்லை: