திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கேரள மழை பாதிப்பு: மத்திய அரசு ரூ.100 கோடி உடனடி நிவாரணம் அறிவிப்பு!

கேரள மழை பாதிப்பு: மத்திய அரசு ரூ.100 கோடி அறிவிப்பு!மின்னம்பலம்:  கேரள அரசுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடியை மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் நேற்று (ஆகஸ்ட் 12) கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார். அவருடன் கேரள முதல்வர் பினராய் விஜயன், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் மற்றும் உள் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். டெல்லி செல்லும் முன்பு எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டவர், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு, மாநில அரசுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் எனக் கூறினார்.
மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் “கேரள மக்களின் துன்பம் எனக்குப் புரிகிறது. இது எதிர்பார்க்கப்படாத ஒரு நெருக்கடி, சேதங்களை மதிப்பீடு செய்வதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதால் உடனடி கூடுதல் நிவாரண நிதியாக தற்போது ரூ.100 கோடியை அறிவிக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.


கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பருவ மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், பாலங்கள் எனக் கட்டமைப்பு அனைத்தும் உருக்குலைந்துவிட்டது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து உதவி நிதி அறிவிக்கப்பட்டு வருகிறது. லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி ரூ. 5 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இதுபோல, கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் மாற்றித் தரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பாஸ்போர்ட் சேதமடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: