வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

இம்ரான் கான் வாக்கெடுப்பில் வெற்றி .. நாளை பதவி ஏற்கிறார்

வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இம்ரான் கானுக்கு சபாநாயகர் ஆசாத் குவாசியர் வாழ்த்துத் தெரிவித்த காட்சி tamilthehindu :இஸ்லாமாபாத் :  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக நாளை பதவியேற்க உள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது.

இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் தேவை. இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்ற இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைசேர்க்கும் போது அந்தக் கட்சிக்கு 176 கிடைத்து ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப் கட்சியின் சார்பில் ஷான்பாஸ் ஷெரீப் போட்டியிட்டு, மனு செய்தார். அந்தக் கட்சிக்கு 96 இடங்கள் மட்டுமே இருப்பதால், நிச்சயம் தோற்பார் என்பது அறிந்த விஷயம் என்றாலும்கூட வேண்டுமென்றே மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 176 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் வெற்றி பெற்றார். இதனால், நாட்டின் அடுத்த புதிய பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.
நாளை நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சி மிகவும் எளிமையாகத் தேநீர், பிஸ்கட் வழங்கி நடத்தப்போவதாகப் பிடிஐ கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: