ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

இடைத்தேர்தலில் களமிறக்கப்படுவாரா அழகிரி? .. 'கொடியை தம்பியிடமே கொடுங்கள்' .. அழகிரி ராணுவத்தினரிடம் ...

'கொடியை தம்பியிடமே கொடுங்கள்' என்று அழகிரி சொன்னதே ஸ்டாலினின்
தலைமையை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கான சிக்னல்தான். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குள் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை, தளபதி எப்போதோ எடுத்து விட்டார். இடைத் தேர்தல் வெற்றியையும், அழகிரியின் பங்களிப்பையும் அதுவே உறுதி செய்து விடும்" என்கிறார்கள்
ந்தியாவுக்கான சுதந்திரதினம் ஆகஸ்ட் 15-ம் தேதி என்றால், தி.மு.க.வுக்கான சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ம் தேதிதான் என்ற நம்பிக்கையோடு, உடன்பிறப்புகள் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதியன்று கட்சியின் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும், அவசர செயற்குழுக் கூட்டத்தின் முடிவுதான் கட்சிக்கான எதிர்கால விடியல் என்று அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். தி.மு.க தலைவராக ஐம்பதாண்டு காலம்வரை பொறுப்பில் இருந்த கலைஞர் , ஆகஸ்ட் 7-ம் தேதியன்று காலமானதை அடுத்து, கட்சியின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு கட்சித் தலைமைக்கு ஏற்பட்டு இருக்கிறது. கலைஞர்  இருந்த போதே கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டவர், மு.க.ஸ்டாலின். ஸ்டாலினின் சகோதரர், மு.க. அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பும் முன்னரே பறிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடே பெரிதும் எதிர்பார்த்த சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கூட அழகிரியின் பங்களிப்பு இருக்கவில்லை. இந்தச் சூழலில்தான், கட்சிக்குத் தலைவராகவும், ஸ்டாலினுக்குத் தந்தையாகவும் இருந்த கலைஞரின்  மறைவு, அழகிரியிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக மூத்த உடன்பிறப்புகள் உறுதியாக நம்புகின்றனர்.
"கலைஞரின்  இறுதிச் சடங்கின்போது, அவர் மீது போர்த்தப் பட்டிருந்த மூவர்ணக் கொடியை, ராணுவ அதிகாரிகள் அழகிரியிடம் கொடுக்கலாமா என்ற போது, 'கொடியை தம்பியிடமே கொடுங்கள்' என்று அழகிரி சொன்னதே ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கான சிக்னல்தான். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குள் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை, தளபதி எப்போதோ எடுத்து விட்டார். இடைத் தேர்தல் வெற்றியையும், அழகிரியின் பங்களிப்பையும் அதுவே உறுதி செய்து விடும்" என்கிறார்கள். கட்சியில் இன்னொரு தரப்போ, "அழகிரியின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், தீவிர ஆதரவாளர்கள் பலர், இப்போது கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அழகிரிக்கு 'முக்கியப் பொறுப்பு' கொடுத்து அவரைக்  கட்சிக்குள் கொண்டு வரும்போது, அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய நிர்வாகிகளுக்கும் பழைய பொறுப்புகளை வழங்க நிர்ப்பந்திக்கப்படலாம்.
அது குறித்தெல்லாம் அழகிரியிடம் கலந்து பேசிவிட்டு, இப்போது பொறுப்பில் இருப்பவர்களையும் பாதிக்காத அளவிற்குத்தான் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. அதுதான் சரியான நடவடிக்கையாகவும் இருக்கும். தளபதியும் அதைத்தான் விரும்புவார். தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கும் பேராசிரியர் அன்பழகனும் அதைத்தான் விரும்புவார்" என்றனர். செயற்குழு ஆலோசனைக்குப் பிறகு, பொதுக்குழு என்று ஒன்று இருக்கிறது. இறுதி முடிவுகளை பொதுக்குழுதான் தீர்மானிக்க முடியும் என்ற நிலையும் இருக்கிறது. 'செயற்குழு ஆலோசனைக் கூட்டத்திலேயே, அழகிரிக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுகிறதா இல்லையா' என்ற முதல் தீர்ப்பு வெளியில் வந்துவிடும். ஆக, தி.மு.க.வுக்கான சுதந்திரநாள் ஆகஸ்ட் 14-ம் தேதிதான்... விகடன் - ந.பா.சேதுராமன் :

கருத்துகள் இல்லை: