புதன், 15 ஆகஸ்ட், 2018

இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி ... டாலர் ரூபாயின் மதிப்பு 70.8

மின்னம்பலம்: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு
வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.8 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இன்றோடு இந்தியா சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை ஒப்பிட்டு பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 1948ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருந்துள்ளது.

கடந்த 70 வருடங்களில் 21 மடங்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. 1951ஆம் ஆண்டு ஐந்தாண்டு திட்டங்களைக் கொண்டுவந்த பிறகுதான் வெளிநாட்டுக் கடன் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது மற்றும் 1970க்குப் பிறகான பொருளாதார நிலையற்றத் தன்மைகளால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 2007க்குப் பிறகு சர்வதேச பொருளாதாரத்தில் காணப்பட்ட நிலையற்றத் தன்மையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளது. இருப்பினும் இப்போது சர்வதேசப் பொருளாதார நிலை சீராக இருக்கிற சூழலில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பது மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வரலாறு காணாதது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பொருளாதார நிலைகள் குறித்து மோடி பேசும் பழைய காணொளிப் பதிவு ஒன்றைப் பகிர்ந்தும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தனது ட்விட்டர் பதிவில், “சுதந்திரம் பெற்று இந்தியா 71 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாயைக் கடந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்போது ரூபாய் மதிப்பு 59 ரூபாயாக இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ரூபாயாக வலிமைப்படுத்துவோம் என்று உறுதியளித்தார். அவர் சொன்னதிலிருந்து 30 ரூபாய் உயர்ந்துதான் உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை மோடி முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: