புதன், 15 ஆகஸ்ட், 2018

ஜெ,அன்பழகன் : திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்களின் உறவை மு.க.ஸ்டாலின் துண்டிக்கவேண்டும்

திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்களின் உறவை மு.க.ஸ்டாலின் துண்டிக்கவேண்டும் - ஜெ.அன்பழகன் பேச்சு
மாலைமலர் : கருணாநிதி மறைந்ததையடுத்து நடைபெற்ற திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெ.அன்பழகன், திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உறவை மு.க.ஸ்டாலின் துண்டிக்கவேண்டும் என கூறியுள்ளார்.
 சென்னை : திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைவர்கள் கருணாநிதியின் கட்சிப் பணிகள் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து விளக்கி அவரை நினைவுகூர்ந்தனர். கருணாநிதியின் சமாதியில் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்திய அவருடைய மகன் மு.க.அழகிரி ‘கட்சி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக’ தெரிவித்திருந்தார். இந்த கருத்து தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது. மு.க.அழகிரி கருத்து தொடர்பாக தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைவர்கள் யாரும் அதை பெரிதுப்படுத்தவில்லை.


இந்தநிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

திராவிட இயக்கங்களை அழிக்கக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களோடு உறவு வைக்க தேவையில்லை. அழிக்க நினைப்பவர்களை மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டிக்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நீங்கள் தலைவர். இப்போது, செயல் தலைவராக இருந்தாலும் கூட தலைவராக வரப்போகிறவர்.

கருணாநிதி நெருக்கடி நிலையை எவ்வாறு எதிர்த்தாரோ, அதேபோல இந்த அரசையும், இந்த அரசுக்கு துணை போகிற யாராக இருந்தாலும் அவர்களை எதிர்க்கவேண்டும். நம்முடைய இன தலைவனுக்கு, இடம் இல்லை என்று கூறிய இந்த ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டியது உள்ளது.

நீங்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும். பெரியார், அண்ணாவை எப்படி கருணாநிதியில் பார்த்தோமோ அதேபோல பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரை மு.க.ஸ்டாலினிடம் பார்க்கிறோம். கருணாநிதி காட்டிய வழியில் செல்லவேண்டும்.

குடும்பமா, கட்சியா என்ற கேள்வி வந்தபோது, கட்சி தான் என்று கூறி முன்னாடி வந்து நின்று இயக்கத்தை காப்பாற்றியவர் கருணாநிதி. அவர் வழியில் இருந்து நீங்கள் தொடரவேண்டும். நிச்சயமாக தொடருவீர்கள். உங்கள் பின்னால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: