சனி, 18 ஆகஸ்ட், 2018

சசிகலா : இதில கூடவா எடப்பாடி அரசியல் செய்யுறாரு?

அன்றைக்கு நைட் 8 மணிக்கு சாப்பிடும் போதுதான் விஷயத்தை சொன்னாங்க. என்னால சாப்பிடவே முடியலை. அப்படியே எழுந்து வந்துட்டேன். எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதே அவருதானே. என்றெல்லாம் நீண்ட நேரம் கலைஞரைப் பற்றியே பேசியிருக்கிறார் சசிகலா.
மின்னம்பலம்: “பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் நேற்று மாலையில் இருந்தே ஜெயா டிவியின் லைவ் வேன் காத்திருந்தது. இன்று சசிகலாவுக்கு பிறந்தநாள். வாழ்த்து சொல்ல
தினகரன் குடும்பத்தினர் வருகிறார்கள் என்பதால் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா, தினகரனின் மகள், மற்றும் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரன் அவரது மனைவி, மகள், ராஜராஜன் அவரது மனைவி ஷகிளா, சசிகலா உதவியாளர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோர் பரப்பானஅக்ரஹார சிறைக்கு சரியாக 11.50 மணிக்கு வந்தார்கள்.
ஏற்கெனவே இவர்களுக்கான அனுமதி வாங்கப்பட்டு இருந்ததால், காத்திருக்காமல் நேராக சிறைக்குள் போனார்கள் சசிகலா குடும்பத்தார். மதியம் 1.30 மணி வரை அவர்கள் எல்லோருமே சிறை வளாகத்துக்குள்தான் இருந்தார்கள்.

சசிகலாவின் கணவர் நடராஜன் இறந்து ஒருவருடம் ஆகவில்லை என்பதால், கேக் வெட்ட வேண்டாம் என சசிகலா முன்கூட்டியே சொல்லி இருந்தாராம். அதனால் கேக் வாங்கவில்லையாம். சிறையில் உள்ள அத்தனை கைதிகளுக்கும் இனிப்பு மட்டும் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். அத்துடன் ஸ்பெஷலான மதிய உணவு கொடுக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சிறைக்குள் சசிகலாவை சந்திக்க சென்ற எல்லோருமே அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க இன்று சசிகலா பெயரில் கோயில்களில் பூஜை நடத்தியதை அவரது உதவியாளர் கார்த்திக் சொல்லி இருக்கிறார். பல இடங்களில் அன்னதானம் நடப்பதையும் கார்த்திக் சொல்ல, ‘அப்படியா’ என கேட்ட சசிகலா, ‘உங்க வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க?’ என்றும் நலம் விசாரித்திருக்கிறார்.
கலைஞருடைய மறைவுக்குப் பிறகு இன்றுதான் சசிகலாவை பார்க்க பார்வையாளர்கள் செல்கிறார்கள். ‘கலைஞருடைய துக்க நிகழ்வுக்கெல்லாம் போனீங்களா? அவரு இறந்துட்டாரு என்பதை நம்பவே முடியலை. எப்பவும் போல ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு திரும்பி வந்துடுவாருன்னு தான் நினைச்சேன். அன்றைக்கு நைட் 8 மணிக்கு சாப்பிடும் போதுதான் விஷயத்தை சொன்னாங்க. என்னால சாப்பிடவே முடியலை. அப்படியே எழுந்து வந்துட்டேன். எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதே அவருதானே... பல தடவை அவரை நான் நேரில் பார்த்து இருக்கேன்...’ என்றெல்லாம் நீண்ட நேரம் கலைஞரைப் பற்றியே பேசியிருக்கிறார் சசிகலா.

கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த போன தகவல்களை எல்லாம் தினகரனும் சொல்லியிருக்கிறார். அப்போது, மெரினாவில் இடம் கொடுக்காதது சம்பந்தமாகவும் தினகரன் சொல்ல...‘அக்கா இருந்திருந்தால் இடம் கொடுத்திருப்பாங்க. இதுல கூடவா எடப்பாடி அரசியல் செய்யுறாரு? அசிங்கமா இருக்கு. இவங்களை எல்லாம் நம்பி மோசம் போய்ட்டேன்னு வேதனையாகவும் இருக்கு’ என்று சசிகலா சொன்னாராம். கட்சி தொடர்பாக சில விஷயங்களை தினகரனும் பேசியிருக்கிறார். எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொண்ட சசிகலா, சில ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்தின் கருணையின் அடிப்படையில்தான் எடப்பாடி ஆட்சி ஒடிட்டு இருக்கு....’ என எடப்பாடியை ஒரு பிடிபிடித்தாராம். .
திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தரப்பில் இருந்தும் சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சசிகலாவிடம் இருந்து பதில் வரவில்லையாம்.”

கருத்துகள் இல்லை: