திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அழகிரியோடு திமுகவினர் தொடர்பில் இல்லை!.. ஜெ.அன்பழகன்

அழகிரியோடு திமுகவினர் தொடர்பில் இல்லை!மின்னம்பலம்: திமுகவினர் யாரும் அழகிரியோடு தொடர்பில் இல்லை என்று திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 13) அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர், “கலைஞரின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். எனது ஆதங்கத்தை அப்பாவிடம் வேண்டிக்கொண்டேன். கட்சி ரீதியான ஆதங்கம் குறித்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பதில் சொல்வேன்” என்று தெரிவித்திருந்தார். மேலும் திமுகவையும் திமுக தலைமையையும் விமர்சித்து ஆங்கில ஊடகங்களில் பேட்டியும் அளித்துள்ளார்.

அழகிரியின் கருத்துக்கு சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் பதிலளித்துள்ளார்.
“தலைவர் கலைஞர் எங்களை விட்டுப் பிரிந்த துக்கத்திலிருந்து நாங்கள் இன்னும் வெளிவரவேயில்லை. ஒரு வாரகாலமாக அதே நினைவில்தான் இருக்கிறோம். அழகிரி அவர்கள் கட்சியிலிருந்து கலைஞரால் நீக்கிவைக்கப்பட்டு இருக்கிறவர். அவர் எந்தக் கருத்தைக் கூறினாலும் அது கட்சிக்கு வெளியில் இருக்கிறவர் கூறும் கருத்துதான். இதனை ஊடகங்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அழகிரி எங்களால் நீக்கிவைக்கப்பட்டவர் அல்ல, மறைந்த தலைவர் கலைஞரால் நீக்கிவைக்கப்பட்டவர் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி சொல்லும் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலையில் தற்போது நாங்கள் இல்லை. நாளை செயற்குழு கூடவுள்ளது, அங்கு விரிவான பதிலை செயல்தலைவர், பொதுச் செயலாளர் கூறுவார்கள் என்று குறிப்பிட்ட அன்பழகன், “தலைவர் கலைஞர் எடுத்த முடிவின்படி செயல்பட்டுக் கொண்டிருந்தோம். இனி செயல்தலைவர் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்” என்றும் விளக்கினார்.
திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவருடன் தொடர்பில் உள்ளனர் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “திமுகவிலிருந்து அழகிரியோடு யாரும் தொடர்பில் இல்லை” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: