சனி, 18 ஆகஸ்ட், 2018

கொள்ளிடம் பாலம்: ராணுவ உதவி தேவை! ஸ்டாலின் அவசர கோரிக்கை!

கொள்ளிடம் பாலம்: ராணுவ உதவி தேவை!மின்னம்பலம் :திருச்சி கொள்ளிடம் பாலத்தை ராணுவத்தின் உதவியுடன் சீரமைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் வெள்ளத்தின் வேகத்தால் இரும்புப் பாலத்தின் ஒரு தூண் வலுவிழந்து பாலம் விழும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நேற்று பாலத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “இந்த பாலம் தற்போது காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. போக்குவரத்துக்கு புதிய பாலமே பயன்பாட்டில் இருந்துவருகிறது. வெள்ளம் வடிந்தவுடன், இந்தப் பாலம் இடித்து தரைமட்டமாக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 18) தனது ட்விட்டர் பக்கத்தில், “கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது! மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: