திங்கள், 23 ஜூலை, 2018

நீர்க்குடம் ஆவணப்படம்! நீலமலையில் நீர்வளம் குன்றி வருகிறது .. .. இயற்கை வளங்கள் மீதான் போர்!

Kozhunthu Thiraikalam : உலகு எங்கும் பாய்ந்து ஓடட்டும்! நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஒவ்வொரு பொழுதும் நாம் மரணத்தைநோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்ட நோயாளியின் கடைசி நிமிடங்களைப்போல, இந்த பூமியின் துடிப்பு குறைவை நோக்கி வேகமாக , ஓடுவதை ஒவ்வொருநாளும் செய்தியாக நாம் உணரமுடியும்.
எங்கள் நீலமலை அதன் பொழிவை இழக்கிறது. சூடாகி வரும் இந்த உலகம் நீரற்ற உலகமாகவும் , நீர் ஏழை மக்களுக்கு எளிதில் கிடைக்காத திரவமாகவும் சமூக -பொருளாதார வாழ்வை கவனித்தால் உணரமுடியும்.
ஒருபுறம் நீர்நிலைகள் குறைந்து வருகிறது;
அதேவேளை நீர்வியாபார நிறுவனங்கள் நம்மை சூழ்கிறது. பருவ நிலை மாறுகிறது; அதேவேளை இயற்கை வளங்கள் உலகமயத்தால் வேட்டையாடப்படுகின்றன. நம்மால் எளிதில் எதை மீட்டு எடுக்க முடியாதோ , எதை நம்மால் உற்பத்தி செய்ய முடியாதோ அதைத்தான் அழித்து வருகிறோம் .


நம் தமிழ் சமூகத்தின் இயற்கை வளங்கள் மீதான போர் நடந்துகொண்டிருக்கிறது. நாம் நீருக்காக புலம்பெயரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. 'நீரின்றி அமையாது உலகு ' என்பதை உலகத்திற்கு சொன்ன நாம்தான் அதற்காக நாடோடிகளாக அலையவும் போகிறோம். இந்த நிகழ்வில் எனது குரலாக 'பச்சை ரத்தம்' என்னும் ஆவணப்படத்திற்கு பிறகு , சூழலியல் பற்றிய படமாக நீர்க்குடம் இன்றுமுதல் இணையத்தில் பதிவேற்றியுள்ளேன். பல்வேறு பொருளாதார சுமைகளோடு என் வாழ்வு நகர்ந்தாலும் நீர்க்குடம் போன்ற படைப்பை கொண்டுவருவது தோழமையின்றி எனக்கு சாத்தியமில்லை.
உள்ளூர் முதல் உலக அளவிலான முகநூல் தோழமைகள் கொடுத்த ஊக்கமும் உதவியுமே உங்கள் முன்னால் 'நீர்குடம்' என்னும் ஆவணப்படத்தின் காட்சியாக விரிகிறது.
எனக்கு கிடைத்த உதவியை வைத்துக்கொண்டு எந்த அளவிற்கு முழுமைபடுத்த முடியுமோ அதை செய்திருக்கிறேன் என நம்புகிறேன். நிறைகுறைகளை களைந்துகொண்டு அடுத்த படைப்பை மேலும் செலுமைப்படுத்துவேன் என்பதை சொல்வதோடு, இந்த நீற்குடத்தை நிறைத்த தோழமைகளுக்கும், இதற்கு எல்லாம் உறுதுணையாக என்னோடு பயணிக்கும் அன்பின் மனைவி உங்காவிற்கும், மகன்களுக்கும் மீண்டும்ஒருமுறை இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் .

நமது வாழ்வு 'நமக்கான நேரத்தை' தரப்போவதில்லை. நமக்கான நேரத்தை ஒதுக்க நாம் 'நம்மோடும்கூட' போராட வேண்டியிருக்கிறது. சிலமணித்துளிகள் நீரின்றி நாம் இருந்துவிடமுடியுமா? எதோ ஓர் திரவம் உடல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. நீர்தான் அதில் முதலிடம். நாளை உங்கள் தொண்டைக்குழி வழியாக உடலுக்கும் இறங்கும் ஒவ்வொரு துளி நீரும் விலைமதிக்கமுடியாத ஓர் திரவம்.
நீங்கள் நினைத்ததைபோல , உங்கள் உடல் கோருவதைப்போல பருகிவிட முடியாது. இந்த படம் அதை பேசுகிறது. நேரம் ஒதுக்கி பருகுங்கள்! நீங்கள் நினைத்தால் பெரும்காட்டாறாக ஒவ்வொருவரும் ஒரு பதிவின் வழியாக, பகிர்வின்வழியாக மக்களோடு விரிந்த அளவில் பேசமுடியும்.
இன்னும் இருக்கும் கொஞ்சம் பொருளாதார சுமைகளை பூர்த்தி செய்ய முடியும். அதை கட்டாயமாக கோரவும் இல்லை; உங்களின் விருப்பமே. எல்லோரிடமும் நீர்குடத்தை நீங்கள் கொண்டு சேர்ப்பதே முதன்மையானது! மிக்க நன்றி!
இனி நீங்கள் பேசுங்கள் ! கீழ்க்கண்ட லிங்கில் youtube ல் படத்தை காணலாம்! தவமுதல்வன் தொடர்பிற்கு: thavamuthalvan@gmail.com செல் : +91- 9486810897.

கருத்துகள் இல்லை: