செவ்வாய், 24 ஜூலை, 2018

யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை: இந்த ஆண்டுக்குள்... 35 ஆண்டுகளுக்கு பின்பாக..

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளம்.
tamilthehihndu : யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை இந்தியாவின் உதவியுடன் புனரமைத்து சென்னை, திருச்சி விமான நிலையங்களிலிருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ள தாக எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தி லிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பலாலி விமான தளம். இது இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான் படைத் தேவைக்காக அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்பிற்கு விமானப் போக்குவரத்து நடை பெற்று வந்தது. 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது, இந்தியாவி லிருந்து பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், 1990-ம் ஆண்டு பலாலி விமானதளத்தை சுற்றியுள்ள பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலையமாக அறிவித்த இலங்கை ராணுவம், அங்கு குடியிருந்த பொதுமக்களை வெளியேற்றியது. 2009-ல் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பலாலி விமான தளத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, 2009 ஆகஸ் டில் முதற்கட்டமாக ரூ. 5 கோடியை (இந்திய ரூபாய் மதிப்பில்) இந்திய அரசு வழங்கியது.
ஆனால், பலாலியில் ராணுவத் தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 6,000 ஏக்கர் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் மீள்குடியேற்ற வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததால், விமான தளத்தை புனரமைக்கும் பணி தாமதமடைந்தது. அண்மை யில் பலாலியை சுற்றியுள்ள 1,500 ஏக்கரில் புலம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து பலாலி விமான தளத்தை புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் பலாலி விமான தளத்தை புனரமைப்பது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
இதில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ‘‘பலாலி விமான தளத்தை விமான நிலையமாக புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்வதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நடைபெறும். முதற்கட்டமாக தொலைத்தொடர்பு சாதனங்களை பொருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை, திருச்சி, விமான நிலையங்களிலிருந்து பலாலிக்கு விமானச் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்

கருத்துகள் இல்லை: