

அ.தி.மு.க-வில் நிலவி வரும் பனிப்போர் தற்போது தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எதிரெதிர் துருவங்களாக வலம் வருகின்றனர். அதற்கேற்றார் போல அரசு நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ் புறக்கணிக்கப்படுவது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துக்கட்சியினரும் லோக்சபா தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் அ.தி.மு.க சார்பில் உறுப்பினர் சேர்க்கைகூட இன்னும் முழுமையடையவில்லை. இரு அணிகள் இணைப்புக்குப் பின், தினகரன் தரப்புக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தவர்கள் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து நீக்கியது தலைமை. ஆனால், அந்த காலியிடங்களுக்கான புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்படவில்லை.
கடந்த ஜூலை 16-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயாலாளர் கூட்டத்தில் வழிகாட்டிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் கேட்டபோது `கட்சியில் ஓ.பி.எஸ்.க்கான முக்கியத்துவம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. அவர் முதல்வராக இருந்தபோது அமைதியாக இருந்த மூத்த அமைச்சர்கள் சிலர் தற்போது அவருக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தொடர்ந்து கட்சியைப் பலப்படுத்த எடுக்கும் முடிவுகளில் ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்களை நியமிப்பதை, எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வருகிறார். கட்சியில் தொடரும் இத்தகைய நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே டெல்லி பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மத்திய ஆட்சியாளர்கள் விருப்பத்தின் பேரில்தான் இணைப்பு நடைபெற்றது. ஆக கட்சியின் சூழல் குறித்தும், தான் ஓரங்கட்டப்படுவது குறித்தும், புகாரை தெரிவிக்கவே இந்த டெல்லி பயணம்” என தெரிவிக்கின்றனர் அ.தி.மு.க-வினர். இதனிடையே டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் `தனது பயணம் அரசியல் பயணம் அல்ல, எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன்' என்று அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக