ஞாயிறு, 22 ஜூலை, 2018

ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்

thetimestamil : நந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். (ஆதார் என்று சொல்ல மாட்டேன்; UID எண் என்பது அடித்தள மக்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் செயல்பாட்டாளர் உஷா ராமநாதன். ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் ஒழுங்கு செய்திருந்த திரையிடல் ஒன்றில் கலந்துரையாட சென்னை வந்திருந்தார். மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவரை த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்)
கேள்வி : சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற நீங்கள் நீதிமன்றத்தில் வழக்காடுவது இல்லையே ஏன்?
பதில்: எனக்கு சொந்த ஊர் சென்னைதான். நான் இங்குதான் சட்டத்தையும், சமூகவியலையும் படித்தேன். தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். நான் சட்டத்தை பற்றியும், வறுமையைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறேன். என்னுடைய செயல்பாடுகள் பெரும்பாலும் வறுமையைப்பற்றி இருக்கிறது.
சட்டமானது வசதியானவர்களுக்கு அதிகம் கொடுக்கிறது; ஏழைகளை ஒடுக்குகிறது. இந்த நிலைமாற வேண்டுமானால் நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும். அதன் அங்கமாக இருந்தால் விமர்சிக்க முடியாது; எனவே நான் நீதிமன்றத்தில் வாதிடுவது இல்லை என முடிவெடுத்தேன். பிச்சை எடுப்பதை தொல்லையாகத்தான் சட்டம் பார்க்கும்; சேரியை ஒழிப்பது என்பது மத்திய தர வர்க்கத்தை பொறுத்தவரை அது அழுகுபடுத்தும் வேலைதான்; ஸ்மார்ட் சிட்டியில் ஏழைகளுக்கு இடமில்லை. வசதி இருந்தால்தான் சட்டப்பூர்வநிலையையே நீதிமன்றத்தில் பெற இயலும். எனவேதான் நான் நீதிமன்றத்தை விட களத்தில் பணிபுரிவது மேலானது என தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.

செயல்பாட்டாளர்  டாக்டர். உஷா ராமநாதன்
கேள்வி: வாக்காளர் அடையாள அட்டைதான் ஏற்கெனவே இருக்கிறதே ? ஏன் ஆதார் திட்டத்தை மட்டும் எதிர்க்கிறீர்கள் ?
பதில்: 1990 களில் வாக்காளர் அடையாள அட்டையை , தேர்தல் ஆணையம் அமலாக்கியபோது ஏழைகள் பாதிக்கப்படுவார்கள்;  தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுவார்கள் என்று நினைத்தோம். அது நடைமுறைக்கு வந்த போது சில இடங்களில் அவர்களுக்கு அதனால் பலன்கூட கிடைத்தது.  உதாரணமாக குடிசையை அகற்றும் போது இந்த அட்டையைக் காட்டி தாங்கள் அந்த இடத்தில குறிப்பிட்ட தேதியில் குடியிருந்ததாகச் சொல்லி மாற்று இடம் பெற்றார்கள். இந்த அட்டை பொதுமக்களிடமே இருந்தது. இதைக்காட்டி ரேஷன் கடையில் பதிவு செய்தார்கள். அரசு நிறுவனங்களிடம் பதிவு செய்ய முடிந்தது. UID அது போல இல்லை. முதலில் இது அட்டை அல்ல; கைரேகையுடன் இணைந்த எண் அவ்வளவுதான். எனவே கைரேகை தெரியவில்லை என்றால் உங்கள் அடையாளம் மறுக்கப்படும். பல மாநிலங்களில் இதுதான் நடந்தது. பட்டினிச் சாவினால் பலர் இறந்தனர். வாக்காளர் அடையாள அட்டை மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படவில்லை. இப்போதுள்ள UID மூலம் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.இதை மாற்றுத்திறனாளிகளுக்கு, குடிசைவாசிகளுக்கு,விபச்சாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும்; பயன்படுத்தப்படுகிறது.
குடிசையில் இருப்பவர்கள் இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்யக் கூடாது என அரசு சொல்ல முடியும். அட்டை வைத்து இருக்கவில்லை என்பதற்காக ஒருவரை குற்றவாளியாக்க முடியும்.
2009 ல் இந்த UID தொடர்பாக அறிவிப்பு வந்தபோது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி இருக்கிறது என நினைத்தோம். ஆனால் இதற்கான பூர்வாங்க கூட்டம் பெங்களூருவில் 2009 நவம்பரில் நடந்தபோது எங்களுக்கு சந்தேகம் வந்தது. இது பற்றி கொள்கை அறிக்கை வெளியிடவில்லை; சாத்திய அறிக்கை வெளியிடவில்லை.
கேள்வி : ஆதார் அட்டை என்று சொல்ல மாட்டேன் , UID என்றுதான் சொல்லுவேன் என்கிறீர்களே ஏன் ?
பதில்: நந்தன் நீலகேணியும் அவரது மனைவி ரோகினி நீலகேணியும் உருவாக்கிய தனியார் அறக்கட்டளைதான்- ஆதார் டிரஸ்ட். பிறகு இந்திய அரசு பொது மக்களிடையே போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற பெயர் ‘ ஆதார்’ என்றனர். எனவே நான் இதை நம்பவில்லை. ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டு பெயர். எனவே நான் UID அல்லது UID எண் என்றுதான் சொல்லிவிருகிறேன்.
இது போன்ற அட்டை உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இல்லை. ஐரோப்பிய நாடுகளில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நமது அரசு கூட ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைத் தருகிறது. அதில் வழங்கியவர் கையொப்பம் இருக்கும்; எதற்காக இது வழங்கப்படுகிறது என்று இருக்கும். வெள்ளி இலச்சினை ( ஹாலோகிராம்) பதிக்கப்பட்டு இருக்கும். அவை நம்மிடமே இருக்கும். விவரங்கள் அரசிடம் இருக்கும். அரசு பொறுப்பேற்றுக் கொள்கிறது.
ஆனால் UID -ஐ யார் வேண்டுமாலும் தரவிறக்கம்(download) செய்து கொள்ள முடியும். நமது கைரேகை ( Bio Metric) ,விழித்திரை போன்ற விவரங்கள் ஏதோ ஒரு கம்பெனியிடம் இருக்கும். அவை குறித்த தரவுவங்கி ( data base) உருவாக்கப்படும். அவை வெளிநாட்டு கம்பெனியிடம் இருக்கும் என்பது போன்ற சம்பவங்கள் இந்தத் திட்டம் குறித்த ஐயப்பாட்டை அதிகப்படுத்துகின்றன.  “கைரேகையும், விழித்திரையும் UID எண் பெற்ற 48 % பேரிடம் சோதிக்கப்பட்டது. அதில் 8 % பேருக்கு கைரேகையும், 6.5 % பேருக்கு விழித்திரையும் வேலை செய்யவில்லை” என்று UIDAI வின் தலைமை நிர்வாகி அஜய் பூஷன் பாண்டே உச்சநீதிமன்றத்திலேயே சொன்னார். எனவே அதில் உள்ள நபர்கள் நீங்கள் இல்லையென்று அவர்கள் சொல்லுவார்கள். அப்புறம் எப்படி இது ‘உங்களுக்கான எண்’   (Unique ) என்று சொல்ல முடியும்.
கேள்வி : ஆனால் அரசு இதை இந்த திட்டத்தை கறாறாக அமலாக்கி வருகிறதே?
பதில்: இந்த திட்டத்தில் பலன் பெறப்போவது கார்பரேட் நிறுவனங்களே.நீலகேணிக்கு ஒரு மத்திய மந்திரியின் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.எல்லாப் பணிகளையும் அவர்தான் செய்தார்.ஆனால் அவர் பாராளுமன்றத்திற்கு, மக்களுக்கு பதில் சொல்லவில்லை.அவருக்காக அப்போதைய அமைச்சர் நாராயணசாமிதான் பதில் சொன்னார்.மக்களிடம் பெறப்பட்ட விவரங்களைக் கொண்டு அடையாளம் சார்ந்த வியாபாரங்களை (Identity based Business) முன்னெடுக்க, கார்ப்பரேடுகள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப அவர்கள் algorithm ஐ (நிரைநிரலை)உருவாக்கி, தங்களுக்கேற்ற வாடிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிய விரும்புகிறார்கள். கடன் வழங்க கூடிய அளவுக்கு நீங்கள் பொருத்தமானவரா என அவர்களுக்கு தெரிய வேண்டும். நந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். எனவே அவர் இதில் ஈடுபட்டுள்ளார். அதனால்தான் இப்போது பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளிலும் இதனை அமலாக்கத் தொடங்கி உள்ளனர்.

நந்தன் நீல்கேணி, ஆதார் தொடர்பான நிகழ்வொன்றில்…
மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். பாராளுமன்ற கூட்டுக் குழு UID க்கு எதிராக முடிவெடுத்தது. உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் இதற்கு எதிரான உத்தரவுகளை கொடுத்து இருக்கிறது. ஆனாலும் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து இதனை அமல்படுத்த துடிக்கிறார்கள்.
கேள்வி: ரேஷன் கடைகளை சீர்திருத்தம் செய்யவே அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்கிறார்களே?
பதில்: உண்மையிலேயே இது போன்ற duplication ஐ குறைக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. மக்கள் பங்கேற்புடன் தமிழ்நாடு , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ரேஷன் கடைகள் நன்றாக செயல்படுகின்றன.இதனை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தி இருக்கலாமே? இந்த அட்டையை பயன்படுத்த ரேஷன்கடைகள் அதற்கான இயந்திரங்களை வாங்க வேண்டும். அந்த செலவுகளை எல்லாம் இந்த திட்டத்திற்கு ஆகும் செலவோடு சேர்க்கவில்லை. அரசு பொருளாதாரத்தை முறைப்படுத்துகிறது(formal economy);வேலைவாய்ப்பை, முறைசாரா வேலைவாய்ப்பாக (non formal employment) மாற்றுகிறது. உங்களது பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அதனால்தான் அட்டை, செல்பேசி, வங்கிக் கணக்கு இவைகளை இணைக்கிறார்கள்.
கேள்வி: இதுபற்றி பத்திரிக்கைகளில் யாரும் பெரிதாக எழுதக் காணோமே?
பதில்: இந்தத் திட்டம் பற்றி எழுத யாரும் தயாராக இல்லை.முக்கிய ஊடகங்கள் அமைதி காத்தன; தொலைக்காட்சிகள் அமைதி காத்தன. வெகுகாலம் கடந்து 2013 ல் statesman பத்திரிக்கை தொடர் கட்டுரைகள் வெளியிட்டது. quint, the wire, news laundry போன்ற இணைய இதழ்களில் எழுதி வருகிறேன். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ இதற்கு எதிராக முடிவெடுத்து உள்ளது. ஆனால் திரிபுரா முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார் நாங்கள் 96% பேருக்கு ஆதார் திட்டத்தை அமலாக்கி விட்டோம் என்கிறார். கர்நாடகாவில் கோகரன் (Gokaran) என்ற இடத்திலும், ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் குறைந்தது 13 பேர் பட்டினியால் இறந்தனர்.
ராஜஸ்தானில் 90 வயது பாட்டி பசியினால் இறந்து போனார். ஏனென்றால் அவர்களிடம் UID இல்லை; எனவே ரேஷன் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட பட்டினிச் சாவுகளுக்குப் பிறகுதான் பத்திரிக்கைகள் UID க்கு எதிராக எழுத ஆரம்பித்தன. மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் பணியிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் இருக்கும் ஒருவரை இந்த அட்டைக்குள் கொண்டுவருவது இந்த இழிநிலை தொடருவதையே உறுதிப்படுத்தும் அதனால் தான் மக்சேசே விருது பெற்ற பேஸ்வாடா வில்சன் எதிர்க்கிறார்.
கேள்வி: நீதிமன்றங்கள் இதுகுறித்து என்ன சொல்லுகின்றன?
பதில்: அப்போதைய பாராளுமன்றத்தின் கூட்டுக் குழு ஆதார் அட்டைக்கு எதிராக முடிவு எடுத்தது. உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக பேஸ்வாடா வில்சன், அருணா ராய், குழந்தை உரிமை செயற்பாட்டாளர் சாந்தா சின்ஹா ஆகியோர் வழக்கு தொடுத்து இருக்கின்றனர். மூவருமே மக்சேசே விருது பெற்றவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான அந்தரங்கம் (Privacy judgment) தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிஅற்புதமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இது UID தொடர்பான தீர்ப்பை பாதிக்க வேண்டும்; பார்ப்போம். 1980களில் பொதுநல வழக்கு என்ற கருத்தாக்கம் வந்த போது இந்திய நீதிமன்றங்கள் உலக அரங்கில் புகழ்பெற்றன. அரசு தன் கரங்களை நீட்டும் போது அதைக் கட்டுப்படுத்த வேண்டியது நீதிமன்றங்களின் கடமை. அப்படி இருந்தால்தான் அரசியலமைச் சட்டம்(Constitutional Law) வளரும்.
இந்தியா போன்ற அரைக் கல்வி பெற்றவரகள் உள்ள நாட்டில் இப்படிப்பட்ட எண்கள் மூலம் ஆட்சி செய்வது மிக ஆபத்தானது. மருத்துவமனை போன்ற இடங்களில் ஒரு சில தகவல் மாறிவிட்டால் நோயாளிக்கு சிகிச்சை ஆகும் என்று பாருங்கள். வங்கிக் கணக்கிலிருந்து சங்கேத வார்த்தை (password), மூலம் பணம் பறிபோவதை நாம் இப்போதே பார்க்கிறோமே? வெளிநாட்டு கம்பெனிகளிடம் நமது கைரேகை software கொடுப்பது மிக ஆபத்தானது. ‘பணமில்லாத, காகிதம் இல்லாத, வருகை இல்லாத'(Cashless, Paperless & Presenceless) வியாபாரத்திற்கு இந்த ஏற்பாடு முக்கியம். இப்படிப்பட்ட சிக்கல்கள் நிறைந்த UIDAI சட்டத்தை பணமசோதாவாக மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
கேள்வி: இதன் முடிவு என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் எங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு அரசாங்கத்திடமிருந்தோ, UIDAI வின் தலைமை நிர்வாகியிடமிருந்தோ பதில்கள் இல்லை. ஆனால் மக்கள் ஒன்று சேர்ந்தால் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது. தூத்துக்குடியையே பாருங்கள். துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நீதிமன்றம் மாறிவிட்டது. இலண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா குழுவை நீக்கி வட்டார்கள். மோடி அரசாங்கம் எப்படியோ அதிகாரத்திற்கு வந்துவிட்டது. இதை தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மோடி அரசாங்கத்தில் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் இல்லை. அரசியல் முதிர்ச்சி இல்லை. அவர்களை நான் அனுதாபத்தோடுதான் பார்க்கிறேன். ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்த போது GSTN என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். அது தனியார், அரசு கூட்டு நிறுவனம். ஜிஎஸ்டி அமலானதில் பெரிய நிறுவனங்கள் நிலை பெற்றுவிட்டன. சிறு, குறு தொழில்கள் அழிந்தன.அவர்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்று அரசு நினைக்கிறது. அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும்.எனவே இப்போது GSTN ஐ முழுமையான அரசு நிறுவனமாக மாற்ற அரசு நினைக்கிறது. 2016 ல் பண மதிப்பு நீக்க நடவடிக்கை வந்த போது Pay TM திடீரென பலன் அடைந்தது.இது நந்தன் நீலகேணி ஏற்கெனவே உருவாக்கி வைத்து இருந்த FIN TEK கம்பெனிக்கு போட்டியாகிவிட்டது.இது போன்ற உள் முரண்பாடுகளால் ஆதாரின் உண்மையான நோக்கம் மேலும் அம்பலமாகும். இதில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் நீலகேணியோடு தொடர்பு உள்ளவை. எனவே, இதில் முரண்பாடான நலன் (Conflict of Interest) இதில் இருக்கிறது என்று சொல்லுகிறோம்.
கேள்வி: இப்படி அயராது உழைக்கிறீர்களே உங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது என்று நினைக்கிறீர்ரகளா?
பதில்: எனக்கு அங்கீகாரம் என்பதை விட இப்போது ஆதார் தொடர்பாக விவாதங்கள் மேலெழும்பி வருகின்றன. இதுவே எனக்கு மகிழ்ச்சிதான்.
(“Speak Truth to Power, Make the truth powerful and Make the powerful truthful” என்ற தென் ஆப்பிரிக்க கவிஞர் Jeremy cronin ன் கவிதை வரிகளை என் நண்பர் ஒருவர் தான் அனுப்பும் மின்னஞ்சலில் எப்போதும் வைத்து இருப்பார். உஷா ராமநாதனுடனான நேர்காணல் முடிந்தவுடன் எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது என்கிறார் நேர்காணல் செய்த பீட்டர் துரைராஜ்.)

கருத்துகள் இல்லை: