வியாழன், 16 நவம்பர், 2017

ஆளுநர் ஆய்வு: டேக் இட் ஈஸி! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மின்னம்பலம் :கோவையில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்ட விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவைக்கு, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஆளுநரின் செயல் மாநில உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளதாக பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும், ஆளுநரின் ஆய்வு ஆரோக்கியமானதுதான் என பாஜகவினரும் அதிமுக அமைச்சர்களும் தெரிவித்துவருகின்றனர்.
டிசம்பர் 3ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இன்று( நவ.16) கோவை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இதுபற்றிப் பேசினார். “கோவை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதனால் மாநில உரிமைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது, ஆளுநர் ஆய்வு செய்திருந்தாலும் அது தவறில்லை. இதுவரை ஆளுநராக இருந்த மாநிலங்களிலும் பன்வாரிலால் புரோஹித் இவ்வாறே ஆய்வு செய்துள்ளார் என்பதால் தமிழகத்தில் ஆய்வு செய்தது புதிதல்ல” என்று அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“ஆளுநரின் ஆய்வை ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்போவதாக ஆளுநர் அறிவித்துள்ளதை நூற்றுக்கு நூறு வரவேற்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: