வியாழன், 16 நவம்பர், 2017

சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு நியுட் , எஸ்,துர்கா படங்கள் மறுக்கப்பட்ட அநீதி!


minnambalam :சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தேர்வாகியிருந்த நியூட், எஸ்.துர்கா ஆகிய படங்கள் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு இரு படங்கள் கலந்துகொள்கின்றன.
சர்வதேச இந்திய திரைப்படவிழா கோவாவில் வரும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்குழுவால் தேர்வுசெய்யப்பட்ட இந்த படங்கள் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய விருதுபெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ள மராத்தி திரைப்படம் நியூட். மும்பையில் உள்ள கவின்கலை கல்லூரியில் ஓவியர்கள் வரைவதற்காக நிர்வாண மாடலாக செல்லும் ஒரு பெண்ணை பற்றியும் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் இப்படம் பேசுகிறது. கல்யாணி முலே, சையா கடம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் நஸ்ருதின் ஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்த பின் ஏன் தனது படத்தை நீக்கியுள்ளீர்கள் என ரவி ஜாதவ் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். “திரைப்பட விழாவில் துவக்க திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகப் பெரிய கௌரவம். ஆனால் தற்போது திரைப்பட விழாவில் இருந்தே எனது படத்தை நீக்கியது மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இந்த முடிவு குறித்து என்னிடம் யாரும் தெரியப்படுத்தவில்லை. இது பற்றிய விளக்கத்தை தரவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதிலே பெரும் சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்சார் சான்றிதழ் பெற்ற தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தை தடுப்பது கருத்துரிமையை கேள்விக்குள்ளாக்குவதாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை: