சனி, 18 நவம்பர், 2017

குஜராத் தேர்தல் 2017: குஜராத்தில் காங்கிரஸ் அலை? இந்து பத்திரிகை

ஒரு வாரம் என்பதே தேர்தல் அரசியலில் ‘நீண்டகாலம்’ எனும்போது, இரண்டரை மாதங்கள் என்பதை ‘ஒரு யுகம்’ என்றே சொல்லிவிடலாம்: குஜராத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘லோக்நீதி-சிஎஸ்டிஎஸ்’ அமைப்பு நடத்திய கருத்தறியும் வாக்கெடுப்பில் பாஜக மீண்டும் வெற்றிபெறுவது உறுதி என்றே தெரிந்தது. பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் 30% வாக்கு வித்தியாசம் இருந்தது. 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது இருந்ததைப் போன்றது அது. தீபாவளிக்குப் பிறகு, அக்டோபரில் நடத்திய அடுத்த வாக்கெடுப்பில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான ஆதரவு வேறுபாடு வெறும் 6% ஆகச் சுருங்கிவிட்டது. இம்மாத இறுதியில் இரு அணிகளுக்கும் ஆதரவு சம அளவு என்றாகிவிடுமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 18-ல் வாக்குகள் எண்ணும் போது விடை கிடைத்துவிடும். இப்போதும்கூட பாஜக முன்னிலையில் இருந்தாலும், வாக்காளர்களின் ஆதரவு காங்கிரஸை நோக்கி வலுவாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதே நிலையை காங்கிரஸ் பராமரித்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு வாரத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் சொந்த மாநிலத்திலேயே பாஜகவுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

சாதிக் கூட்டல்கள்

மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு இந்த அளவுக்கு ஆதரவை காங்கிரஸ் பெருக்கிக்கொள்ள முக்கிய காரணம் படேல் சமூகத்தவரின் புதிய முடிவுதான். கடந்த பல பொதுத் தேர்தல்களில் இச்சமூகத்தவரில் மூன்றில் இரண்டு பங்கினர் பாஜகவையே தொடர்ந்து ஆதரித்தனர். ஆகஸ்ட் மாதத்தில் படேல் சமூகத்தவரிடையே பாஜகவுக்கு 58% ஆதரவு இருந்தது. அது இப்போது 20% குறைந்திருக்கிறது. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸுடன் கூட்டுசேர்ந்துள்ள ஹர்திக் படேலை, அச்சமூகத்தவரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கின்றனர். சௌராஷ்டிரா, வடக்கு குஜராத் பிரதேசங்களில் காங்கிரஸ் இப்போது முன்னிலை வகிக்கிறது. அதற்கு இப்பகுதி வாக்காளர்களில் 12% முதல் 15% வரையில் இருக்கும் படேல்கள் ஒரு காரணம். இந்த ஆதரவை அடுத்த மாதம் வரையில் தக்கவைத்துக்கொள்வது காங்கிரஸ் முன்புள்ள சவால். தன்னிடமிருந்து விலகிச் சென்றுவிட்ட படேல்களை மீண்டும் இழுப்பது பாஜகவுக்குள்ள மிகப் பெரிய சவால். கேசுபாய் படேல் தலைமையிலான எதிர்ப்புகளை இரண்டு முறை சமாளித்த அனுபவம் பாஜகவுக்கு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை எப்போதும் ஆதரித்துவந்த தாக்கோர், சத்திரியா, கோலி, பட்டியல் இனத்தவர்கள் 2014 தேர்தலில் பாஜகவை ஆதரித்திருந்தாலும் இப்போது மீண்டும் காங்கிரஸுக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் அடங்கிய ‘ஏக்தா மஞ்ச்’ தலைவர்களான அல்பேஷ் தாக்கோர், ஜிக்னேஷ் மேவானியை காங்கிரஸ் தன் வசம் ஈர்த்துவிட்டது. முஸ்லிம்களும் இயல்பாகவே காங்கிரஸ் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். பழங்குடிகளின் ஆதரவைப் பெறுவதில் தான் காங்கிரஸ் தடுமாறுகிறது. குஜராத்தின் மத்திய, தெற்கு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பழங்குடிகள் காங்கிரஸை விட்டு விலகிச் சென்றனர். 2014-ல் 26 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் இழக்க பழங்குடிகளின் ஆதரவு சரிந்தது முக்கியக் காரணம். படேல்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர்களைக் காங்கிரஸ் அரவணைக்கும்போது தாங்கள் தனித்துவிடப்படுவதாக பழங்குடிகள் கருத வாய்ப்பு இருக்கிறது.
பாஜகவுக்கு எதிராக வாக்காளர்கள் திரும்ப அவர்களுடைய சாதி மட்டுமல்ல பொருளாதார நிலையும் முக்கியக் காரணம். நாம் எதிர்கொண்ட வாக்காளர்களில் சரிபாதிக்கும் மேல் (54%) இப்போது கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவை ஈடுகட்டப் போதுமான தாக இல்லை என்று தெரிவித்தனர். மேல் சாதியினர், படேல்கள் தவிர எல்லா சாதி மக்களும் இந்தப் புகாரைத் தெரிவித்தனர். எல்லா சமூகத்திலும், மேல் சாதியிலும் கூட பொருளாதார இன்னல்களுக்கு ஆளானவர்கள் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஆதரவு என்று வெளிப்படையாகவே அறிவித்தனர். பாஜகவை ஆதரித்த முற்பட்ட வகுப்பினரிலேயே பலர் இம்முறை காங்கிரஸை ஆதரிக்க முடிவுசெய்துள்ளனர்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி

பணமதிப்பு நீக்கம், பொதுச் சரக்கு - சேவை வரி விதிப்பால் பாஜகவுக்கு ஆதரவு சரிந்துவிட்டது. ஐந்தில் இரண்டு பங்கு வாக்காளர்கள் பொதுச் சரக்கு, சேவை வரி விதிப்பு தவறான முடிவு என்றனர். ஆகஸ்டில் நான்கில் ஒருவர்தான் அப்படிக் கூறினர். பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்தவர்கள் எண்ணிக்கை முன்னர் பாதியாக இருந்தது. இப்போது மூன்றில் ஒரு பங்கினர் மட்டும்தான் ஆதரிக்கின்றனர். மத்திய அரசின் இவ்விரு முடிவால் தொழில், வேலைவாய்ப்பை இழந்தவர்களை அறிவோம் என்று 44% பேர் கருத்து தெரிவித்திருந்தனர். வர்த்தகர்களிடையே பாஜகவுக்கு இருந்த ஆதரவு, காங்கிரஸைவிட 4% குறைவாகச் சரிந்திருக்கிறது.
விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்டமும் கூட மக்களை வாட்டிவருகின்றன. கருத்து தெரிவித்தவர்களில் 19% விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சினை என்றனர். 11% வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சுட்டிக்காட்டினர். 10% வறுமையைத் தீர்க்க வேண்டும் என்றனர். இந்தத் தேர்தலானது பொருளாதாரக் கவலைகளை அடிப்படையாகக் கொண்டது என்பது இவற்றிலிருந்து தெரிகிறது.
‘இளைஞர்களுக்கு வேலை – விவசாயிகளுக்கு அதிகாரம்’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விவசாயிகளில் பாதிப் பேரும் இளைஞர்களில் பாதிப் பேரும் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். ‘பாஜகவின் வளர்ச்சி – சாதனை’ என்ற பிரச்சாரத்தைக் கேலி செய்யும் ஒலி-ஒளி காட்சிகளை இளைஞர்களில் முக்கால்வாசிப் பேர் பார்த்துவிட்டனர். ஆனால், நகரங்களில் பெண்களின் ஆதரவை பாஜகவிடமிருந்து மீட்பதுதான் காங்கிரஸுக் குச் சவாலாக இருக்கிறது. மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகஸ்டில் ஐந்தில் நான்கு பங்காக இருந்தது அக்டோபரில் மூன்றில் இரண்டு மடங்காகச் சரிந்திருக்கிறது. ஆயினும் காங்கிரஸில் உள்ள மற்ற எந்தத் தலைவரையும் விட அவர்தான் முன்னிலையில் இருக்கிறார்.

அதிருப்தி அதிகரிக்கிறது

மோடிக்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது பாஜக வட்டாரங்களிலேயே கவலையுடன் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் ‘லோக்நீதி’ அமைப்பு குஜராத்தில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தியபோது மத்திய அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக நான்கில் மூன்று பங்கினர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆகஸ்டில் இது மூன்றில் இரண்டு பங்கானது. இப்போது சரிபாதிக்கும் சிறிதளவே அதிகம் என்று சரிந்திருக்கிறது. முதலமைச் சர் விஜய் ரூபானி அரசின் மீதான திருப்தியும் அதே போலச் சரிந்திருக்கிறது.
பாஜகவின் இப்போது கவலை காங்கிரஸுக்குச் சாதகமாக காற்று வீசத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆட்சியைப் பிடிக்க இரண்டு கட்சிகளுக்குமே சம வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தை ஏராளமானோர் ஏற்கின்றனர். பாஜகவைத் தோற்கடிக்கவே முடியாது என்ற பிம்பம் நொறுங்கிவருகிறது. வாக்களிக்கும் நாள் நெருங்க நெருங்க இந்த எண்ணம் பெரிதானால், சிறிய கட்சிகளை ஆதரிப்பவர்கள் கூட மனம் மாற வாய்ப்பிருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் இந்தக் காற்றை, மாநிலம் முழுக்க பரவச் செய்வதில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும். இது சூறாவளியாக மாறினால் தான் பாஜகவை தோற்கடிக்க முடியும்!
- பேராசிரியர் சஞ்சய் குமார்,
டெல்லி சிஎஸ்டிஎஸ் இயக்குநர்,
சிரேயஸ் சர்தேசாய் லோக்நீதி இணை ஆய்வர், சிஎஸ்டிஎஸ்
©: ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை: