திங்கள், 13 நவம்பர், 2017

புதுவை: நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ரத்து!

புதுவை: நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ரத்து!
மின்னம்பலம் :அதிகாரம் படைத்த நபரிடம் இருந்து உரிய பதில் வராததால் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் உத்தரவு செல்லாது என்று புதுவை சட்டமன்ற செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நேரடியாகத் தேர்தல் மூலம் 30 எம்.எல்.ஏ.க்களும், மாநில அரசின் நியமனத்தின் பேரில் 3 எம்.எல்.ஏ.க்களும் நியமிக்கப்படுவர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகிய மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. அவர்கள் மூன்று பேரும் தங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி அன்றே சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் அளித்தனர்.
உரிய ஆய்வு செய்து பதவிப் பிரமாணம் செய்துவைப்பதாகச் சபாநாயகர் அவர்களிடம் கூறியிருந்தார். ஆனால் அன்று இரவே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூன்று பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கிரண்பேடியின் பதவிப் பிரமாணத்தையடுத்து தங்களுக்குச் சட்டமன்றத்தில் இருக்கை மற்றும் அலுவலகம் அளிக்கும்படி சட்டமன்ற செயலர் வின்சென்ட்ராயரிடம் கடிதம் அளித்தனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து கிரண்பேடி தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்படுவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
சட்ட விரோத நியமனத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் ஜனநாயக விரோதமான இந்த நியமனத்தை அங்கீகரிக்கக் கூடாது என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். புதுச்சேரி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. விஜயவேணியும் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனவே மூன்று பேரையும் அங்கீகரிக்கக் கூடாது என்றும் சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்.
தற்போது இந்த மூன்று பேரின் நியமனத்தையும் சபாநாயகர் அலுவலகம் ரத்து செய்து அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட மூன்று பேருக்கும் ரத்து செய்யப்பட்ட கடிதத்தையும் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்' "இந்திய அரசியலமைப்புச் சட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேசச் சட்டம் 1963இன் படி மூன்று பேரின் நியமனம் உரிய அதிகாரம் படைத்த நபரால் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பதற்காக உங்களை எம்.எல்.ஏ.க்களாக ஏற்க முடியாது. எனவே எம்.எல்.ஏ.க்கள் சலுகைக்கான உங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. சபாநாயகரின் உத்தரவின் பேரில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: