நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மசூர் பருப்பு தரமற்றதாக உள்ளதாக மக்களிடம் கருத்து நிலவுகிறது. இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்டபோது, "மசூர் ரக பருப்பை மக்களை வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை" என்றார்.
அமைச்சரின் இந்தப் பதில் குறித்து சமூக செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையாவிடம் கேட்டபோது, "மக்களுக்கு விரும்பியதை தான் அரசு கொடுக்க வேண்டும். கட்டாயப்படுத்தவில்லை என்று அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து விலக முடியாது. அடிப்படை உணவுப் பொருள்களாக இருக்கிற அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தரமாக பாதுகாப்பான முறையில் குறைந்த விலையில் வழங்க வேண்டியது அரசுடைய கடமை. அந்த சேவையை வழங்கத் தான் அரசு பொறுப்பேற்று இருக்கிறது. விரும்பினால் வாங்கலாம், வேண்டாம் என்றால் போலாம் என்ற தான் தோன்றித் தனமான பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்
ரேஷன் கடைகளில் உளுந்து விற்பனை தொடருமா என்ற கேள்விக்கு, "உணவுத் துறையில் இருந்து வாங்கித் தரப்படும் பொருட்களை விற்பனை செய்வது மட்டும்தான் கூட்டுறவுத் துறையின் பணி" என்று பதிலளித்தார்.
பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடிகளில் சின்ன வெங்காயத்திற்குப் பதிலாக பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் குறித்துப் பதிலளிக்கையில், "அது பெரிய வெங்காயம் என்று கூறுவது தவறானது. அதுவும் சின்ன வெங்காயம்தான். கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் சாலட் வகையிலான சின்ன வெங்காயம்தான் பண்ணைப் பசுமை அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் தன்மை, தரம் ஆகியவை பற்றிக் கேட்டால், வாங்கும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்ற பதிலைச் சொல்வது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக