சனி, 18 நவம்பர், 2017

இரட்டை இலை கிடைக்கும்! பன்னீர் எடப்பாடி உற்சாகம்!... கிடைச்சுட்டாலும்

தினமலர் :அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், இரட்டை இலை சின்னம் எளிதாக கிடைத்துவிடும் என, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நம்பினர். சின்னம் கிடைத்த பின், கட்சியில் தினகரன் ஆதரவாளர்களை  களையெடுப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளை துவக்க, முடிவு செய்திருந்தனர். ஆனால், தினகரன் அணியினரும், இரட்டை இலைக்கு உரிமை கோரி, தேர்தல் கமிஷன் சென்றதால், சிக்கல் ஏற்பட்டது.
தேர்தல் கமிஷன் இரு தரப்பினரையும், விசாரணைக்கு அழைத்தது. இரு தரப்பிலும், பிரபல வழக்கறிஞர்களை வாதாட நியமித்தனர். தினகரன் அணியினர், 'இரட்டை இலை தங்களுக்கு கிடைக்காவிட்டால், அது முடக்கப் பட வேண்டும்' என்பதில், ஆர்வம் காட்டினர்; அதற்கேற்ப விவாதங்களை எடுத்து வைத்தனர்.


முதல்வர் மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில், அதிக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். விசாரணையை முடித்த, தேர்தல் கமிஷன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை, தள்ளி வைத்துள்ளது. அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெயரும், அதன், அம்பு சின்னமும் தங்களுக்குரியது என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அணியும், அக்கட்சி மூத்த தலைவர், சரத்யாதவ் தலைமையிலான அணியும், தேர்தல் கமிஷனில் முறையிட்டு இருந்தன. நேற்று வெளியான தீர்ப்பில், பெரும்பான்மை இருப்பதால், நிதிஷ்குமார் அணிக்கு, ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சி பெயரும், அம்பு சின்னமும், அந்த அணிக்கு ஒதுக்கப்படுவதாக, தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதேபோல், அ.தி.மு.க.,வில் பெரும்பான்மை பலம் தங்களுக்கு இருப்பதால், கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும், தங்களுக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை, முதல்வர் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் உற்சாகமாக உள்ளனர்.

-நமது நிருபர்-

கருத்துகள் இல்லை: