வியாழன், 16 நவம்பர், 2017

தமிழக ஆளுநர் !முடிவெடுக்க வேண்டியவர்கள் மானமுள்ள தமிழர்கள் தான் !

சிவசங்கர் எஸ்.எஸ் : முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் இங்கிலாந்து அலுவலகம் சார்ந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், ஜெர்மனி அலுவலகத்தில் இருந்தோ, அமெரிக்க அலுவலகத்தில் இருந்தோ தேர்ச்சிப் பெற்ற அதிகாரிகளை அனுப்பி சீரமைப்பு நடவடிக்கையில் இறங்குவது முக்கியம். அது தான் தொழில் முன்னேற்றத்திற்கான வழி. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியும் அதைத் தான் செய்வார்.
அதைத் தான் பிரதமர் மோடியும் செய்திருக்கிறார். அவரும் கார்ப்பரேட் முதலாளி தானே.
நேற்றும், இன்றும் (15.11.2017) தமிழக ஆளுநர் புரோகித் கோவையில் அதகளம் செய்து கொண்டிருக்கிறார். நேற்று ஓய்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்தார். ஆய்வு என்பது அரசு அதிகாரிகள் குறித்த ஆய்வல்ல. தமிழக அரசின் பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசின் பணிகளை ஆய்வு செய்யும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கே உண்டு.

ஆளுநர்களுக்கு ஆய்வு செய்யும் அதிகாரத்தையும், அரசு பணிகளை கண்காணிக்கும் உரிமையையும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் அது மாநில ஆளுநர்களுக்கு அல்ல. பாண்டிச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு தான் அதற்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் ஓர் அளவிற்கு தான். இப்போது அங்கேயே எதிர்குரல் எழும்பிவிட்டது.
இன்றைய பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு காலத்தில் சமூக வலைதள செயற்பாட்டாளர்களின் காதலர். அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். சென்னை விமான நிலையத்தில் இறங்கிய உடன் பேட்டிக் கொடுப்பார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் "பதினைந்து நாட்கள்" கெடு கொடுப்பார். "அமெரிக்க ஜனாதிபதியை மாற்றமுடியுமா", என்றுக் கேட்டாலும் சளைக்காமல், " பதினைந்து நாட்களில் முடிக்கப்படும்" என்பார்.
கார்டூன் ஹீரோவாக கொண்டாடப்பட்ட அதே நாராயணசாமி தான், இப்போது தென் மாநில அரசுகளின் மறைமுக தாகமாக இருக்கிற "மாநில சுயாட்சி" ஹீரோ. அஞ்சாமல், அசராமல் மத்திய அரசை எதிர்த்து நிற்கிறார். மாநில உரிமைகளில் தலையிடுகிற ஆளுநர் கிரண்பேடியின் அட்டாக் அத்தனைக்கும், கவுண்டர் அட்டாக் கொடுத்து வருகிறார். வேறு யாராவது இவர் இடத்தில் பாண்டி முதல்வராக இருந்திருந்தால், தலை தெறிக்க ஓடியிருப்பார்கள்.
ஒரு யூனியன் பிரதேச முதல்வர் நாராயணசாமிக்கு இருக்கும் தைரியம், தெம்பு கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. இதை விட கொடுமை, எடப்பாடியின் மனசாட்சி உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, "ஆளுநர் ஆய்வு தவறு இல்லை. அது சரி தான்", எனப் பேட்டிக் கொடுக்கிறார் இன்று. "மானம் கெட்ட மனிதர்கள் தான் நாங்கள்" எனக் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தான் இது.
தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சியின் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டார்கள். ஒரு கட்சித் தலைவர் மாத்திரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு அரசியலும் தெரியாது, சுயமரியாதையும் தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி தான் மிகக் கேவலமானவர். காரணம், அரசியலமைப்பு சட்டம் முதல்வருக்கு கொடுத்த அதிகாரத்தை தான் இப்போது கவர்னர் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில் டி.டி.வி.தினகரன் கேட்டுள்ள கேள்வி சரியானதே. "ஜெயலலிதா முதல்வராக இருந்தால் இதெல்லாம் நடக்குமா?".
தலைவர் கலைஞர் முதல்வராக இருந்திருந்தாலும் இதற்கு வாய்ப்பே இல்லை.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலவராக இருந்திருந்தால், மோடி இந்த வேலைக்கே வந்திருக்கமாட்டார்.
காரணம், தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா ஆகியோர் மக்கள் தலைவர்கள்.
இப்போது இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு அடிமை. அவ்வளவு தான் அவர் தகுதி. எடப்பாடிக்கு இணையான துணை முதல்வர், 'தர்மயுத்த' புகழ் ஓ.பி.எஸ்ஸும் இன்னோர் அடிமை. இருவரும் டெல்லிக் காலடி மண்ணெடுத்து, நெற்றியில் பட்டையிடும் பக்தர்கள்.
இப்போது மீண்டும் சொல்வது, நஷ்டத்தில் இருக்கும் தொழில் பிரிவை சரி செய்ய மோடி தன் ஏஜெண்ட்டை அனுப்பியிருக்கிறார். ஏஜெண்ட் புரோகித் தன் பணியை செய்கிறார். முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் அடிமை தான் அந்த ஏஜெண்ட்.
மோடிக்கு தெரியவில்லை. எந்த ஏஜெண்ட்டை அனுப்பினாலும், இனி தமிழக பிஸினஸில் லாபம் கிடைக்காது மோடிக்கும், பா.ஜ.கவிற்கும்.
மோடிக்கு எந்த நஷ்டமும் கிடையாது. என்ன செய்தாலும் பா.ஜ.கவுக்கு தமிழகம் பூஜ்யம் தான் தரப் போகிறது.
எடப்பாடிக்கும் நஷ்டம் கிடையாது. இழக்கப் போவது தமிழகத்தின் தன்மானம் தான். அவர் மானம் அல்ல.
# முடிவெடுக்க வேண்டியவர்கள் மானமுள்ள தமிழர்கள் தான்

கருத்துகள் இல்லை: