புதன், 23 ஆகஸ்ட், 2017

சதுரங்க வேட்டை. .. அதிமுக அடிமைகளுக்கு மோடி என்ற லேபல் கிடைத்த மகிழ்ச்சி

22448083சவுக்கு  :கடந்த ஒரு வாரமாக அதிமுக அடிமைகள் நடத்திய அவலங்கள் அனைத்தையும் உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கொள்ளையடித்த அனைத்தையும் மொத்தமாக சேர்த்து, கொள்ளையில் பங்கு பிரித்து அனைவருக்கும் உரிய பங்கை அளித்து, ஒழுங்கான முறையில் கொள்ளையடிக்காத கொள்ளையர்களை பணி நீக்கம் செய்யும் ஒரு தலைமை இறந்து விட்ட காரணத்தால். இன்று அதிமுக என்ற அடிமைகளின் கூட்டம், தலையறுந்த கோழி போல ஓடிக் கொண்டிருக்கிறது.
GURUMURTHYஎம்ஜிஆர் காலந்தொட்டே அடிமையாக காலில் விழுந்து பழகிய கூட்டத்துக்கு திடீரென்று தொழுவதற்கு கால்கள் கிடைக்காத காரணத்தால் திக்குமுக்காடிப் போனார்கள்.   டெல்லியில் இருந்து மோடியின் கால்களில் விழுந்து தொழுவதற்கு வாய்ப்பு கிடைத்தபோது, தனித்தனியாக சென்று மோடியின் கால்களில் விழுந்து மன்றாடினார்கள். தனிப்பட்ட முறையில், சுயசிந்தனையோடு எந்த முடிவையும் எடுக்கும் திறனற்ற அதிமுக அடிமைகளுக்கு மோடி என்ற பிம்பம் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.   இலக்கில்லாமல் ஸோம்பிகள் போல திரிந்து கொண்டிருந்தவர்கள், மோடியின் விலாசம் கிடைத்ததும் அந்த திசை நோக்கி தொழுது தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள்.

ஜெயலலிதா இருந்தவரை, தமிழகத்தில் கால் வைக்க முடியாத வகையில் ஓட ஓட விரட்டப்பட்டுக் கொண்டிருந்த பிஜேபிக்கு, தமிழகத்தில் வசதியான அடிமைகள் கிடைத்த மகிழ்ச்சி.  ஆர்கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் ஒரு அணிக்கு மானஸ்தர் பன்னீரும் மறு பக்கம் டிடிவி தினகரனும் இருந்த சமயத்தில் உள்ளே கால் பதிக்க முடியாமல் திணறியது பிஜேபி.  வேறு வழியில்லாமல்தான் வெற்றி வேட்பாளர் கங்கை அமரனை களமிறக்கியது.  ஜெயலலிதா இருந்த சமயத்தில் செய்தது போலவே, ஆர்கே.நகரிலும் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்த விஷயம் மக்கள் அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்தது.   அந்த நேரம் பார்த்து, வருமானவரித் துறையை களமிறக்கி விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட, அத்தனை பேரின் பெயர்களும் சிக்கின.   அது வரை, லேசாக முறுக்கிக் கொண்டிருந்த அதிமுக அடிமைகள், தரையோடு தரையாக படுத்து மோடி பக்கம் வணங்கத் தொடங்கின.
அதில் சிக்காமல் முறுக்கிக் கொண்டிருந்தது சசிகலா அணி மட்டுமே.   டிடிவி தினகரனையும் எப்படியாவது அடக்கியாள வேண்டுமென்று, மோடி திட்டமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவராக சென்று சிக்கிக் கொண்டார்.  அவரும் திகார் சென்று சிறையில் மாட்டிக் கொள்ள, மீதமிருந்த எடப்பாடி மற்றும் பன்னீர் எனும் அடிமைகளை வளைப்பது மோடிக்கு அத்தனை சிரமமாக இருக்கவில்லை.   பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பல ஆயிரம் கோடிகளை புதிய நோட்டுக்களாக ஏறக்குறைய அதிமுகவின் அத்தனை அடிமைகளும் மாற்றி வைத்திருந்தனர்.  சேகர் ரெட்டி மாட்டியதும், அதிமுக அடிமைகள் அனைவருக்கும் பயம் தொண்டையை கவ்வியது.
தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சென்றதும், இனிமேல், சசிகலா குடும்பத்தோடு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்று திடீரென்று அடிமைகள் அனைத்தும் மான ரோசத்தை பற்றி பேசத் தொடங்கினர். அதன் பிறகு நடந்த அலங்கோலங்கள் அனைத்தையுமே நாம் பார்த்தோம்.  பன்னீர், எடப்பாடி என்று இரு அணிகளும் பிரிந்து கிடந்ததில் யார் மனவேதனை அடைந்தார்களோ இல்லையோ, மோடியும் அமித் ஷாவும் அடைந்த மனவேதனைக்கு அளவேயில்லை.
நிம்மதியாக எடப்பாடி பழனிச்சாமியும் அவரின் கொள்ளைக் கூட்டங்களும் தொடர்ந்து கொள்ளையடித்து வந்தாலும், முன்னாள் கொள்ளையர்களான பன்னீர் அணியோடு இணைந்து கொள்ளையடிக்குமாறு மோடி தொடர்ந்து அளித்த நெருக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
தமிழகத்தில் அதிமுகவை நாங்கள்தான் இயக்குகிறோம் என்பது வெளிப்படையாக அனைவருக்குமே தெரிய வேண்டும் என்பதில் மோடியும் அமித் ஷாவும் கவனமாகவே இருந்தனர்.  இணைப்புக்கு தயார் என்பதை எடப்பாடி வெளிப்படையாக அறிவித்து விட்டாலும், பன்னீர் தொடர்ந்து முறுக்கிக் கொண்டே இருந்தார்.  இணைப்பு தாமதமாவதற்கு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை, போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக ஆக்குவது என்ற வெளிப்படையான கோரிக்கைகள் இருந்தாலும், துணை முதல்வர் பதவி மற்றும் வளமையான இலாக்காக்கள் என்ற அவரது கோரிக்கைகள்தான் இணைப்பு தாமதத்துக்கு காரணமாக இருந்தது.
பன்னீர்செல்வத்தை மிக மிக ரகசியமாக வெளியுலகுக்கு தெரியாமல் மோடி நினைத்தால் சந்தித்திருக்க முடியும்.  ஆனால் ஒரு வாரத்துக்குள் நான்கு முறை பன்னீர்செல்வத்தை மோடி வெளிப்படையாகவே சந்தித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பிஜேபி தலைவர்களும், அதிமுக இணைப்புக்காக வலிந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ops_meets_modi
இந்த இணைப்பை மக்கள் விரும்பினார்களா ?  அதிமுக தொண்டர்கள் விரும்பினார்களா ?  பன்னீர் அணியில் உள்ளவர்கள் விரும்பினார்களா ?  எடப்பாடி விரும்பினாரா ?  யாருமே விரும்பவில்லை.   இன்னும் நான்கு மாதங்கள் கடந்திருந்தால், பன்னீர் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் தன் பக்கம் வந்திருப்பார்கள் என்பது எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும்.   திடீரென்று ஆளுனரை வரவைத்து, இணைப்பை நடத்தியே ஆக வேண்டும் என்பது மோடியின் விருப்பம் மட்டுமே.
சோ ராமசாமிக்கு பிறகு, துக்ளக்கின் ஆசிரியராக இருக்கும் மற்றொரு பார்ப்பன ப்ரோக்கர், தமிழக அரசியலை ஆட்டிப் படைக்கும் சூத்திரதாரி என்று தன்னை கருதிக் கொண்டு, அதிமுக அடிமைகளிடம், தான்தான் மோடியின் குரல் என்று அறிவித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார். மோடியோ, அமித் ஷாவோ, குருமூர்த்தியை நம்பவில்லை என்பதற்கான சாட்சிதான் மோடி பன்னீரை அழைத்து தொடர்ந்து நேரில் பேசி வந்தது.   குருமூர்த்தியை மோடி நம்பியிருந்தால், பன்னீரிடம் அவர் நேரில் பேசுவதற்கான தேவையே கிடையாது.   ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து தன்னோடு விவாதித்ததை, மிகப் பெருமையாக ஊடகங்களில் அறிவித்து, ரஜினியை பிஜேபியிடமிருந்து தள்ளி நிற்க வைத்தார் என்ற விவகாரத்தில், பிஜேபி தலைமைக்கு குருமூர்த்தி மீது கடுமையான கோபம்.  அதனால்தான், அதிமுக இணைப்பு விவகாரத்தை நேரடியாகவே கையாளத் தொடங்கினர்.  ஆனால் இந்த விவகாரங்கள் அதிமுக அடிமைகளுக்கு தெரியாததால், தொடர்ந்து குருமூர்த்தியோடு தொடர்பில் இருந்தனர்.  சோ இருந்த துக்ளக் ஆசிரியர் பதவிக்கு வந்து விட்டால், குருமூர்த்தி சோ ஆகி விடுவாரா என்ன ?  சோவுக்கு, வழக்கறிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நகைச்சுவையாளர், திரைப்பட நடிகர், பத்திரிக்கை ஆசிரியர் என்பதோடு சேர்த்துதான் ப்ரோக்கர் பதவி.   ஆனால் குருமூர்த்திக்கு வெறும் ப்ரோக்கர் பதவி மட்டுமே.    உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடுமா என்ன ?

ஜெயலலிதா சிகிச்சை மற்றும் மரணத்துக்கு நீதி விசாரணை, ஜெ இல்லம் நினைவிடம் என்று எடப்பாடி அறிவித்த பிறகு, இணைப்பு உறுதி என்ற தகவல் பரவியது.   ஆனாலும், தீர்க்கப்படாத இலாக்கா பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் இருப்பதையே, பன்னீர் அணியைச் சேர்ந்த கேபி.முனுசாமி போன்றோர் தங்களுக்கு திருப்தி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டது உணர்த்தியது.  பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை என்ற வளம் கொழிக்கும் துறைகளில் ஒன்று வேண்டும் என்ற பன்னீரின் கோரிக்கைக்கு எடப்பாடி சம்மதிக்காததே திங்களன்று இரு அணிகள் இணைப்பு பிற்பகல் வரை இழுபறியாக நீடித்ததற்கு காரணம்.  சசிகலாவை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னீர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.   சசிகலாவை நீக்கி வெளிப்படையாக அறிவிப்பு விடுப்பதில் இருக்கும் சிக்கலை நன்றாகவே உணர்ந்துதான் பன்னீர் இந்த கோரிக்கையை வைத்தார்.    பொதுப் பணித் துறையை அளித்தால், சசிகலா கோரிக்கையில் சமரசம் செய்து கொள்ளத் தயார் என்பதையே பன்னீர் உணர்த்தி, அதற்கான எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தார்.
எடப்பாடி அணியிலோ, சசிகலாவை நீக்கி தீர்மானம் போடக் கூடாது என்று மூன்று மூத்த அமைச்சர்களே வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  அதே நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட பன்னீருக்கு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற வளமான துறைகளை அளிக்கக் கூடாது என்பதிலும் பிடிவாதமாக இருந்தார்கள்.  இறுதியாக, பொதுக் குழுவை கூட்டி, சசிகலாவை நீக்குவது என்று அறிவிப்பு வரும் என்று எடப்பாடி அணி தகவல் கூறியபோது, பன்னீருக்கு ஏமாற்றமே.   இருந்தாலும் டெல்லி முதலாளியின் நெருக்கடி தீவிரமாகும் என்பதை உணர்ந்து, இணைப்புக்கு சம்மதித்தார்.
20915246_1808775389378603_5496709628685128881_n
பன்னீருக்கு வழங்கப்பட்ட நிதித்துறை என்பது பெரிய அளவில் சம்பாதிக்க முடியாத ஒரு துறை.   அதற்காகத்தான் கூடுதலாக, வீட்டு வசதித் துறை, நகர்ப்புற திட்டமிடல், சிஎம்டிஏ போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டன.  பன்னீருக்காவது பரவாயில்லை.  திடீர் அடிமை மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் இன்னமும் மோசம்.  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை.   தொல்லியலைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம்.   அகழ்வாராய்ச்சி செய்கிறேன் என்று மாஃபா பாண்டியராஜன் தன் வீட்டுக்கு பின்னால் வேண்டுமானால் பொழுது போகாமல் தோண்டிக் கொண்டிருக்கலாம்.   ஆனாலும், “தர்மயுத்தத்தை” உடனடியாக முடிவுக்கு கொண்டு வராவிட்டால், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையின் அழைப்பு வரும் என்பதை உணர்ந்து, பன்னீர் அணியினர் இணைப்புக்கு சம்மதித்தனர்.
இணைப்பு விழாவின்போது பேசிய எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ, சசிகலா நீக்கம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  பதவியே சுத்தமாக பிடிக்காதவர் போல, அந்த விழாவில் பன்னீர் “அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து செயல்பட விரும்புகிறேன்” என்று கூறினார். போன வாரம், எடப்பாடி அரசை ஊழல் அரசு என்று கூறியவர், எங்களை யாராலும் பிரிக்க முடியாது, நாங்கள் ஒரு தாய் மக்கள் என்றார்.  பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு, அதிமுக அடிமைகளில் மோசமான அயோக்கிய அடிமை எடப்பாடியா, பன்னீர்செல்வமா என்ற விவாதத்தையே உருவாக்கியது.
மோடி, அமித் ஷா மற்றும் எடப்பாடி பன்னீர் கூட்டணியினர் குறைத்து மதிப்பிட்டது சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் செல்வாக்கை. இரண்டு வழக்குகளை போட்டால், வாலை காலுக்கு நடுவே வைத்துக் கொண்டு சலாம் போடும் காங்கிரஸ் அரசியல்வாதிகளைப் போல, சசிகலா குடும்பத்தையும் கணித்து விட்டார் மோடி என்றே கருதத் தோன்றுகிறது.   இரு அணிகள் இணைந்தபின், டிடிவி தினகரன் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்கள், தானாக தங்களோடு சேர்ந்து விடுவார்கள் என்றே பன்னீர் அணி கருதியது.   ஆனால், தினகரனோடு இருந்த 20 பேரில் 19 பேர், இணைப்பு அன்றே டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.  மறுநாள் ஆளுனரை சந்திக்கப் போவதாக அறிவித்தனர்.
ஆளுனரிடம் இவர்கள் என்ன மனு கொடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, எடப்பாடி உளவுத்துறை மூலம் திங்களன்று இரவு முழுக்க கடும் முயற்சி எடுத்தார்.  ஆனால் அந்த கடிதத்தின் நகலை உளவுத்துறையினரால் பெற முடியவில்லை.  மறு நாள் காலை, தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆளுனரை சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்ற கடிதத்தை அளித்து அதன் விபரங்கள் வெளியானபோது, எடப்பாடி மற்றும் பன்னீர் அணியினர் நடுங்கிப் போனார்கள் என்பதுதான் உண்மை.   நிச்சயமாக இப்படியொரு தாக்குதலை டிடிவி தினகரன் தொடுப்பார் என்பதை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை.
IEFEB105_13-04-2017_18_54_4
ஆளுனருக்கு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பிய ஒரு மணி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது, ஆகையால், உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி, எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என்று ஆளுனருக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியது, எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பு மீதான அழுத்தத்தை அதிகரித்தது.
இது தவிர, எடப்பாடி முன்பாக இருந்த பெரிய சிக்கல், அவரோடு உள்ள அத்தனை எம்எல்ஏக்களையும் அமைச்சர்களாக்க முடியாது என்பதுதான்.   ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறிய, இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமாக இருந்த, கட்சியில் குழப்பம் விளைவித்த பன்னீர்செல்வத்துக்கு பதவி என்றால், உங்களோடு ஆறு மாத காலம் விசுவாசமாக இருந்த எங்களுக்கு என்ன என்று பல எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.  அவர்களுக்கு எடப்பாடியால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.   கூவாத்தூரில் தருவதாக சொன்ன 5 கோடி கூட இன்னும் பல எம்எல்ஏக்களுக்கு முழுமையாக போய் சேரவில்லை.  இந்த நிலையில், நாங்கள் எதற்காக உங்களோடு இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.  இவர்களுக்கு எடப்பாடியால் எவ்விதமான உருப்படியான பதிலையும் அளிக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், டிடிவி தனது அணியின் எம்எல்ஏக்களை கூவாத்தூர் போல பாண்டிச்சேரியில் தங்க வைத்துள்ளார்.   நம்பிக்கை வாக்கெடுப்பு, நாளையோ, அடுத்த வாரமோ நடைபெறுவதற்கான எவ்விதமான அறிகுறியும் இல்லாத நிலையில், டிடிவி எடுத்திருக்கும் இத்தகைய நடவடிக்கையை போர் பிரகடனமாகவே பார்க்க முடியும்.   டிடிவி தரப்பிலிருந்து வரும் தகவல்கள், அவரது இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக, மத்திய அரசு, தனது புலனாய்வு அமைப்புகளை வைத்து, மேலும் வழக்குகள், சோதனைகள் என்பதையெல்லாம் செய்யும் என்பதை அறிந்தே இதை செய்கிறார் என்று கூறுகிறது.
ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் டிடிவி தினகரனுக்கோ, சசிகலா தம்பி திவாகரனுக்கோ இல்லை என்றாலும், எடப்பாடியும், பன்னீரும் மண்டியிடாவிட்டால், ஆட்சியை இழக்கவும் தயார் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் என்றே கருதத் தோன்றுகிறது.
speaker-dhanapal-should-become-the-next-cm-dhivakaranதிவாகரன் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில், சபாநாயகராக உள்ள தனபாலனை முதல்வராக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, எடப்பாடி அணியில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணியிருக்கிறது.   அதிமுக அமைச்சரவையில், கவுண்டர்கள், முக்குலத்தோர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், அதிகாரம் மிக்க அமைச்சர்களாக இருக்கிறார்கள்.  ஆனால் 30க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.  சபாநாயகர், ஆதி திராவிடர் நலத்துறை போன்ற உப்புசப்பில்லாத துறைகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றன.   தனபாலன் முதல்வர் என்ற திவாகரனின் கோரிக்கை மூலம் அதிமுகவில் எம்எல்ஏக்களாக உள்ள தலித்துகளுக்கு அமைச்சர் கனவு முளை விடத் தொடங்கியிருக்கிறது.  இது தனக்கு பெரும் ஆபத்து என்பதையும் எடப்பாடி உணர்ந்திருக்கிறார்.
திவாகரனின் இந்த கோரிக்கையினால் அவர் ஒரு தலித் பாதுகாவலர் என்ற முடிவுக்கு வர வேண்டாம்.  தனபாலனைப் போல ஒருவர் முதல்வரானால், அடிமைகளிலேயே தலைச் சிறந்த அடிமையாக அவர் இருப்பார். சாதியினரை கட்டுப்படுத்துவதை விட, ஆண்டானாக இருந்து, தலித்துகளை பண்ணையடிமையாக வைத்திருக்க முடியும் என்ற அவர் நம்பிக்கையையே இது காட்டுகிறது.   30க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள தலித் எம்எல்ஏக்களிடையே கல் விட்டு எரிவதன் மூலம் எடப்பாடி அணியில் பெரும் சலசலப்பை உண்டு பண்ண முடியும் என்று அவர் நம்புகிறார்.  அவர் நம்பிக்கை சரியே.
30க்கும் மேற்பட்ட தலித்துகள் எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள் என்பது திவாகரனுக்கு இத்தனை நாள் தெரியாதா என்ன ?   அவர்களில் ஒருவரை முதல்வராக்க வேண்டாம்.  குறைந்தபட்சம் பொதுப்பணித் துறை அமைச்சராகவோ, உள்ளாட்சித் துறை அமைச்சராகவோ ஆக்கியிருக்க முடியும்தானே ?  திவாகரனின் திடீர் தலித் கரிசனம், அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமேயன்றி, வேறு எதற்காகவும் அல்ல.
எடப்பாடி அணியில், அமைச்சர் பதவியிலும் இல்லாமல், கூவாத்தூரில் பேசியபடி தொகை வந்து சேராமலும் உள்ள பல எம்எல்ஏக்கள் நிலைகொள்ளாமல் இருக்கிறார்கள்.  டிடிவி அணிக்கு தாவினால் குறைந்தபட்சம் பணமாவது கிடைக்கும் என்ற கருத்தே எடப்பாடி அணி எம்எல்ஏக்களிடம் நிலவுகிறது.  இதையெல்லாம் எதிர்ப்பார்த்தே, பாண்டிச்சேரி ரிசார்ட்டில், டிடிவி 30 அறைகளை புக் செய்து வைத்திருக்கிறார்.
மேலும் எடப்பாடி மற்றும் பன்னீருக்கு இருக்கும் ஒரு பெரிய சிக்கல், டிடிவியைப் போல, அவர்களும் தங்கள் அணி எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்கவைத்தால் கடும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதே.   ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு, ஒரு தனி நபருக்கு பயந்து தங்கள் அணி எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைக்கிறார் என்ற விமர்சனம் எடப்பாடிக்கு.  எந்த கூவாத்தூர் ரிசார்ட் குறித்து பன்னீர் விமர்சனம் செய்தாரோ, அதே முறையை தானும் கடைபிடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்ற நெருக்கடி பன்னீருக்கு.  மேலும், டிடிவி தினகரன் தன் சொந்த செலவில் எம்எல்ஏக்களை தங்க வைக்கிறார்.  எடப்பாடி அணி இந்த வேலையை செய்தால், அரசு அதிகாரிகளை வைத்து குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறார் என்ற விமர்சனமும் வரும்.
டிடிவி அணியோடு இருக்கும் எம்எல்ஏக்களே தேர்தலை விரும்பவில்லை என்பதுதான் உண்மை.  ஆனால், தங்களுக்கு அமைச்சர் பதவியோ, அதிகாரமோ கிடைக்காவிட்டால் உனக்கும் கிடைக்க விட மாட்டேன் என்ற மனநிலையிலேயே அவர் அணி எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.   இதனால்தான், 19 பேரும் உறுதியாக டிடிவி பக்கம் நிற்கிறார்கள்.  எடப்பாடி அணியில் இருந்து மேலும் சில ஆடுகள் பிரிந்து வந்து டிடிவி மந்தையில் இணைவதற்காக சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளது.
தமிழக அரசியலில் நடந்து வரும் சதுரங்க வேட்டையில், டிடிவி.தினகரன் முதல் ரவுண்டில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறார்.  அடுத்த ரவுண்ட் யாருக்கு என்பதை காலம்தான் கூறும்.

கருத்துகள் இல்லை: