புதன், 23 ஆகஸ்ட், 2017

BBC : "நீட்" ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அழைப்பு.. நாளை சென்னையில் ...

தமிழகத்தில் "நீட்" தேர்வு முறையில் இருந்து மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு விலக்கு வழங்கும் நடவடிக்கையில் சரியாக செயல்படவில்லை எனக் கூறி, சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீட்' தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்த மத்திய - மாநில அரசுகளை கண்டித்து நாளை (ஆகஸ்ட் 24) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாணவர்களும், அனைத்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்று 'நீட்' தேர்வில் தமிழகத்தை வஞ்சித்துள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற வைத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்திட வேண்டும்" என்றும் திமுக தலைமைக் கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: