சனி, 26 ஆகஸ்ட், 2017

ஹரியாணா, பஞ்சாபில் கலவரம்: 32 பேர் பலி

மின்னம்பலம்  : பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் உயிரிழந்ததுடன், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். பஞ்ச்குலா, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா உள்ளிட்ட நகரங்களிலும், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
எனினும், கடந்த 4 நாள்களாகவே குர்மீத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக பெண்கள் பஞ்ச்குலாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானதும், பஞ்ச்குலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அப்போது, ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிள்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்குத் தீவைத்த வன்முறையாளர்கள், போலீஸார் மீது கற்களையும் கம்புகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, வானத்தை நோக்கி சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் முயன்றனர். இதனால், பஞ்ச்குலா நகரமே போர்க்களமாக மாறியது.
ராணுவம் குவிப்பு: வன்முறை சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மாநில அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஞ்ச்குலா மட்டுமின்றி சிர்சா உள்ளிட்ட இதர பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. சிர்சாவில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
2 ரயில் நிலையங்களுக்குத் தீ வைப்பு: பஞ்சாபின் மாலௌட், பல்லுவானா ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு குர்மீத்தின் ஆதரவாளர்கள் தீவைத்தனர். மான்ஸா பகுதியில் வருமான வரி அலுவலக கட்டடத்துக்கு தீவைக்கப்பட்டது.வன்முறையால் சுமார் 250 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தில்லி, ராஜஸ்தானில்...: தில்லியின் லோனி சௌக் பகுதியில் கம்பு, கற்களுடன் திரண்ட குர்மீத் ஆதரவாளர்கள் ஒரு பேருந்துக்கு தீவைத்தனர். இதேபோல, ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ரயில் பெட்டிகளுக்குத் தீவைக்கப்பட்டது. ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர், ஹனுமான்கர் மாவட்டங்களில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால், அங்கு செல்லிடப்பேசி இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்கள் வேண்டுகோள்: குர்மீத் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஹரியாணா
மனோகர் லால் கட்டர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக தேரா சச்சா அமைப்பினர் 1000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இழப்பீடு வசூல்: இதனிடையே, தேரா சச்சா சௌதா அமைப்பினரின் வன்முறைகளால் நேரிடும் பொருள்சேதங்களுக்கு அவர்களிடமே இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் கண்டனம்
ஹரியாணா, பஞ்சாபில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராம் நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், 'நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு நடைபெறும் வன்முறையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுவதும் கண்டனத்துக்குரியது. அனைத்து மக்களும் அமைதி காக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதேபோல, பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், வன்முறைச் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிப்பதாகவும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு அமைப்பு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஹரியாணா, பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் பேச்சு: இதனிடையே, தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'ஹரியாணா, பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் தொலைபேசி மூலம் பேசினேன். இரு மாநிலங்களிலும் நிலவும் தற்போதைய சூழல் குறித்தும், இயல்பு நிலையை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தேன். ஹரியாணா, பஞ்சாபில் அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்' என்றார்.

கருத்துகள் இல்லை: