செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

சசிகலா நீக்கம்: ஓ.எஸ்.மணியன் கருத்து!

‘சசிகலா நீக்கம் குறித்து அதிமுக பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும்’ என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வின் இரு அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, ‘சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தாரை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என வலுவான கோரிக்கையை முன்வைத்தது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 21) இரு அணிகளும் இணைந்தன அதிமுக நியமனப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவது தொடர்பாக விரைவில் அதிமுக பொதுக்குழு கூடவுள்ளதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா நீக்கம் குறித்து அதிமுக பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், “அதிமுக பொதுச்செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், உடனடி தேவை என்ற நிலையில் பொது குழுவைக் கூடி சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி பொதுக்குழு கூடிதான் பொதுச்செயலாளர் பற்றி முடிவெடுக்க முடியும். இன்றைய கூட்டத்தில் சசிகலா பற்றியோ, பொதுச்செயலாளர் பற்றியோ ஆலோசனை செய்யப்படவில்லை.

சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுப்பது பற்றி வைத்திலிங்கம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. புரட்சி தலைவி ஜெயலலிதாவின் அனுமதி பெற்று, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, ஜெயலலிதாவின் உழைப்பினால் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எவரும் அதிமுக ஆள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். எவரும் அதற்கு எதிராக முடிவு எடுக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
‘சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் உங்களுடைய ஆதரவு?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது’ எனக் கூறிவிட்டார்.  minnambalm

கருத்துகள் இல்லை: