தினமணி : ராய்பூர்: தன்னுடைய
கோசாலையில் பட்டினியின் காரணமாக 200 பசுக்கள் பசியால் உயிரிழந்த
சம்பவத்தில், சத்தீஷ்கார் மாநில பாரதிய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டார்.
சத்தீஷ்கார் மாநில பாஜக தலைவர் ஹரிஷ்
வர்மா. இவருக்கு துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் கோசாலை என்னும் பசு
பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500 க்கும் மேற்பட்ட பசுக்கள்
பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அதிக அளவிலான பசுக்கள் பசியாலும்,
மருத்துவ வசதியின்றியும் தொடர்ந்து இறந்து வருகின்றன என்னும் அதிர்ச்சித்
தகவல் வெளியாகி உள்ளது
கோசாலையில் இருக்கும் பெரும்பாலான மாடுகள்
அனைத்தும் பசியினால் மெலிந்து காட்சியளிக்கிறது. மேலுமிங்கு நிலவும்
சுகாதாரமற்ற சூழலில் உயிருக்கு தினமும் பசுக்கள் போராடி உள்ளன. பசியின்
காரணமாக 30 பசுக்கள் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள்
கோசாலையில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் பசுக்கள் இறந்து வருகின்றன.
இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்து உள்ளன. இந்த சடலங்கள்
கோசாலை அமைந்து உள்ள பகுதியிலே புதைக்கப்பட்டுள்ளதாக வருகிறது எனவும்
தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 'சத்தீஷ்கார் ராஜ்ய
கவ் சேவா ஆயோக்' என்னும் அமைப்பு போலீஸில் புகார் செய்துள்ளது.
விசாரணைக்குப் பிறகு ஹரிஷ் வர்மா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது:
கோசாலை உரிமையாளர் ஹரிஷ் வர்மாவை நாங்கள்
கைது செய்து உள்ளோம். அவர் மீது சத்தீஷ்கார் மாநில விவசாய கால்நடை
பாதுகாப்பு சட்டம் -2004 பிரிவு 4 மற்றும் 6-ன் கீழும், விலங்குகளுக்கு
எதிரான கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 11-ன் கீழும், இந்திய தண்டனை சட்டம்
பிரிவு 409-ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது கோசாலையில் 220
பசுக்களை பராமரிக்க முடியும். ஆனால் 650 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் கோசாலை பராமரிப்புக்கு நிலுவையில்
உள்ள ரூ. 10 லட்சத்தை வழங்கக் கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.
இதுவரை எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை என்று ஹரிஷ் வர்மா தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக