திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தமிழருவி மணியன் ; ரஜினி வெற்றி பெற்று கோட்டையில் அமரும் நாள்


காந்திய மக்கள் இயக்க மாநாடு!‘நாளை ரஜினிகாந்த் வெற்றிபெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமரும் சூழல் வரும். நாங்கள் தெருத்தெருவாகப் பிச்சை எடுத்து கடன் வாங்கித்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம்’ என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசியுள்ளார்.
திருச்சியில் உள்ள அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த மாநாட்டில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருதல், உள்நாட்டு நதிகளை இணைத்தல், பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல், லோக் ஆயுக்தா உடனே அமைக்க கோருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், இந்த மாநாட்டின் முக்கிய தலைப்பே ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் - அவசியமா?’ என்பதுதான். இதனால், இந்த மாநாடு தமிழக ஊடகங்கள் மட்டுமில்லாமல் தேசிய ஊடகங்களின் கவனத்தையும் பெற்றன.

இது ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்போகிற மாநாடு என்பதால், மாநாடு தொடங்குவதற்கு முன்பு மதியமே பல மாவட்டங்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருச்சி மாநாட்டுக்கு வந்து குவிந்தனர். மாநாட்டுக்கு வருபவர்களுக்கு 5,000 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. நாற்காலிகள் முழுவதும் நிரம்பி மைதானங்களில் 2,000 பேருக்கு மேல் நின்றுகொண்டிருந்தனர். மைதானம் மனித தலைகளால் நிரம்பியிருந்தது.
இந்த மாநாட்டில், முக்கிய உரையாற்றிய தமிழருவி மணியன் பேசுகையில், “காந்திய மக்கள் இயக்கம் ரஜினிகாந்த்தை முதல்வராக ஆக்க ஏன் முடிவெடுத்தது? திமுக-வும், அதிமுக-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என காமராஜர் தன் வாழ்நாள் இறுதி மூச்சு வரை கூறினார். தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஊழல் மயமாக்கினது திராவிட கட்சிகள். இரண்டு கட்சிகளும் சொத்துச் சேர்த்து அரசியலமைப்பை ஊழலாக்கிவிட்டன. இதுதான் தமிழகத்துக்குக் கடைசி வாய்ப்பு, இதைவிட்டால் தமிழகம் எழவே வாய்ப்பு இல்லை. சுயநலத்தோடு செயல்பட்ட இந்த இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய சபதம் எடுத்தேன்” என்று கூறினார்.
தமிழருவி மணியன் தனது உரையில் ரஜினியை ஆதரிப்பதற்கான காரணம் பற்றி கூறுகையில், “ரஜினி சிஸ்டம் சரியில்லை என்பதை ரசிகர்களுடனான சந்திப்பின்போது கூறினார். இந்த வார்த்தைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ரசிகர்கள் ஊழலுக்கு எதிரான போருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தன்னுடைய பெயரை பயன்படுத்தி தவறாக சம்பாதிக்க முயற்சித்தால் விலகிவிடுமாறு ரஜினி கூறினார். இதுவும் நான் ரஜினிகாந்த்தை ஆதரிக்க காரணம்” என்று பேசினார்.
இதையடுத்து, ரஜினி சந்திப்பு பற்றி தமிழருவி மணியன் பேசுகையில், “தமிழருவி மணியோடு சந்திக்க வேண்டும் என ரஜினி விரும்பினார். எங்கு வேண்டுமானாலும் சந்திப்பதாக கூறினார். அந்த பெருந்தன்மை தன்னை கவர்ந்தது” என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளுக்கு ரஜினி சரியான தீர்வைச் சொன்னதாகக் தமிழருவி மணியன் கூறுகையில், “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? அப்படி வந்தால் தனிக்கட்சி தொடங்குவீர்களா?” எனக் கேட்டதாகவும் அதற்கு ரஜினி, “நிச்சயமாக வருவேன்” எனக் கூறியதாக தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மேலும், ரஜினியுடனான உரையாடல் குறித்து தமிழருவி கூறுகையில், “ஆண்டவன் கட்டளையிட்டான். அதனால்தான் பேசியதாக ரஜினி கூறினார். எத்தனையோ கட்சிகள் இருக்கிறது. என்ன கனவுகளோடு வர விரும்புகிறீர்கள் என்ற எனது கேள்விக்கு 'காவிரி அரசியல் பிரச்னையாக ஆகிவிட்டது. தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்பதே தன் திட்டம்’ எனக் கூறினார். 2002ஆம் ஆண்டிலேயே தென்னக நதி இணைப்புக்கு ரூ.1 கோடி தருவதாக அப்போதே ரஜினி அறிவித்தார். 2007ஆம் ஆண்டு முதல் 2014 வரை மன்மோகன் சிங் நதிநீர் இணைப்பை செயல்படுத்தவில்லை. தற்போது அந்த பேச்சை செயல்படுத்த ரஜினி கிளம்பிவிட்டார். ரஜினியை விவசாயிகள் தோளிலே செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சுமந்து செல்ல வேண்டும்.
பிறகு நான், ‘இது ஒன்றுதான் உங்கள் கனவா? இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா?’ என்று கேட்டேன். அதற்கு ரஜினி ‘மாநில முதல்வராக இருந்து நிறைவேற்ற முடியாது. மத்திய அரசிடம் செல்வாக்கை பயன்படுத்தி மற்ற மாநில முதல்வரோடு பேசி சம்மதிக்க வைத்து பத்து ஆண்டுகளில் நதிகளை இணைப்பேன்’ என்றார். இவர் நமக்கு தேவையா, இல்லையா என்பதை பொதுமக்கள் முடிவு செய்யுங்கள்” என்று தமிழருவி மணியன் கூறினார்.
ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று பேசப்பட்டபோது, நடிகர் நாடாளலாமா என்று விமர்சனங்கள் எழுந்தது குறித்து தமிழருவி மணியன் பேசுகையில், “அறிஞர் அண்ணா, கலைஞர் என தமிழ்நாட்டை ஆண்டவர்கள் நடிகர்கள்தான். 1988இல் ஜானகி, ஜெயலலிதா உட்பட அனைவரும் நடிகர்கள்தான். ரஜினிகாந்த்தை தமிழகம் நடிகனாகப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த சமூகத்தை நேசிக்கிற, மனிதநேயம் மிகுந்த மகத்தான மனிதனாகப் பார்க்கிறது” என்று கூறினார்.
அதே போல, ரஜினியை பாஜக பின்னிருந்து இயக்குவதாக எழுந்த விமர்சனம் குறித்து தமிழருவி கூறுகையில், “பாஜக உங்களை பின்னிருந்து இயக்குவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, ரஜினி தான் வகுப்புவாதி அல்ல; ஆன்மிகவாதி என பதிலளித்தார். ரஜினிக்கு ஜாதி, மதம் இல்லை. அனைவரும் உறவினர்கள். என்னுடைய ரசிகர்கள் எனக்காக எதையும் இழக்க தயாரானவர்கள். என்னைப் பின்னிருந்து யாரும் இயக்க முடியாது. நான்தான் பின்னிருந்து இயக்க முடியும் ரஜினி தெரிவித்தார்” என்று தமிழருவி மணியன் கூறினார்.
இதைத் தொடர்ந்து அதிமுக-வைப் பற்றி பேசிய தமிழருவி மணியன், “தற்போது அதிமுக-வினர் முகவரி அற்றவர்கள். அதனால்தான், மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஜெயலலிதா முகத்தைக்காட்டி ஆட்சியைப் பிடித்தது அதிமுக. இந்த நொடியிலிருந்து அதிமுக ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. ஆட்சி முடியப் போகிறது. விரைவில் ரஜினி வருவார். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்கிறார்களே. அந்த காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்பதற்காகத்தான் ரஜினி அரசியலுக்கு வர இருக்கிறார். தமிழகம் காமராஜருக்கு இணையான ஆட்சியை காண இருக்கிறது.
நான் தவறிழைத்து காசு சேர்த்ததாக, தரகர் மணியர் என விமர்சிப்போருக்கு நான் பொது மேடையில் சவால் விடுகிறேன். என் மீதான உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? என்னை விமர்சிப்போர்கள் சொத்து சேர்த்த அளவை நான் கூறட்டுமா? என்னை விமர்சிப்பதால் நீங்கள் தரம் தாழ்ந்து போகிறீர்கள். தமிழகத்தின் முதல்வராக அமர வைகோ தகுதி வாய்ந்தவர். போர்க் குணம் கொண்டவர். ஊடகங்களில் அவரை காமெடியனாக்கி விட்டீர்களே. 5 சதவிகிதம்கூட அவரால் ஓட்டு வாங்க முடியாத அளவுக்கு செய்துவிட்டீர்கள்.
தமிழகத்தில் திடீரென ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால், அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை டெபாசிட்கூட வாங்க மாட்டார்கள். இது ஆட்சியா? கோடி கோடியாக கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கிறீர்கள். பணத்தாசைக்கு மருந்து இல்லை. நாம் பணத்தாசை பிடித்தவர்களை அமைச்சர்களாக வைத்திருக்கிறோம்.
நான் ஊழலற்றவன். என்னை ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுத தயாராகிவிட்டார்கள்” என்று பேசினார்.
இறுதியாக ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய தமிழருவி மணியன், “பிரகடனம் செய்கிறேன். ரஜினி அரசியலுக்கு வருகிறார். திமுக-வின் கனவு கலைந்தது. இது அஇஅதிமுக ஊழல் ஆட்சி. ஆகவே, முடிவு கட்ட வேண்டும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: