வியாழன், 27 ஜூலை, 2017

தூர்தர்ஷன்: சின்னத்தை மாற்ற ... பொதுமக்களுக்கு அழைப்பு!


லோகோவை மாற்றும் தூர்தர்ஷன்: பொதுமக்களுக்கு அழைப்பு!தூர்தர்ஷன் தனது லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது. சிறந்த லோகோவை வடிவமைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பார்தியின் ஒரு பிரிவாக தூர்தர்ஷன் செயல்பட்டு வருகிறது. கடந்த 1959ஆம் ஆண்டு தூர்தர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 57 ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறது. தற்போது 23 சேனல்களை தூர்தர்ஷன் ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில், இளைஞர்களைக் கவரும் விதமாகத் தனது லோகோவை மாற்ற தூர்தர்ஷன் முடிவு செய்துள்ளது. இதற்கான போட்டி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தூர்தர்ஷனின் பழைமை நினைவுகளைப் பாதுகாக்கும் வகையிலும் தற்போதைய இளைஞர்களுக்கு தூர்தர்ஷனுடன் இணைப்பு ஏற்படும் வகையிலும் லோகோவை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சிறந்த லோகோவை வடிவமைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய லோகோவை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 13 ஆகும்.
இது தொடர்பாக பிரச்சார் பார்தியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஷி வேம்பட்டி கூறுகையில், “தூர்தர்ஷன் பிராண்ட் மற்றும் லோகோ நாட்டின் சில தலைமுறைகளின் நெஞ்சத்தில் நீங்காத நினைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் 30 வயதை விடக் குறைந்தவர்களே அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு கிடைத்த அதே நினைவுகள் தூர்தர்ஷன் மூலம் கிடைப்பதில்லை. தற்போது உள்ள தலைமுறைக்கு ஏராளமான சேனல்கள் உள்ளன. எனவே அவர்கள் தூர்தர்ஷனுடன் இணைய முடியவில்லை. எனவே இளைஞர்களைக் கவரும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: