செவ்வாய், 25 ஜூலை, 2017

காங்கிரஸ் எம்பிக்கள் இடைநிறுத்தம் ... காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!


சஸ்பெண்ட் விவகாரம் : காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ஜூலை 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஜம்மு காஷ்மீர், ஹரியானா போன்ற மாநிலங்களில் வன்முறை கும்பல்களால் சிலர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாகவும், குண்டர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் நேற்று ஜூலை 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எம்.கே.ராகவன், ரஞ்சித் ரஞ்சன், கே.சுரேஷ், கவுரவ் கோகாய் மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகிய 6 எம்.பி.-க்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கோ‌ஷமிட்டு, மேஜையில் இருந்த காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசினார்கள்.

அதையடுத்து, அவையில் ஒழுங்கீனமாக நடந்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எம்.கே.ராகவன், ரஞ்சித் ரஞ்சன், கே.சுரேஷ், கவுரவ் கோகாய் மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகிய 6 எம்.பி.-க்களையும், 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமத்திரா மகாஜன் உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி-க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ஜூலை 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் இருந்தபோது இது போன்று நடந்தது இல்லை. அவர் எப்போதும் அமைதியாகவே இருப்பார். அரசின் நெருக்கடிக்குச் சபாநாயகர் அடி பணியக்கூடாது. சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப்பெற்று காங்கிரஸ் எம்.பி.-க்களை அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: