சனி, 29 ஜூலை, 2017

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்)

Kirushnavel.T,S : திருப்பதி கோயில் – அதிகம் தெரியாத உண்மைகளும் வரலாறும் – பகுதி- 3
இந்த மூன்றாம் பகுதிக்குள் செல்லும் முன், ஒருவாரத்திற்கு மேல இடைவெளி ஏற்பட்டதிற்கு நண்பர்கள் என்னை மன்னிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன், நானும் வீட்டு வாடகை, கரண்டு பில் எல்லாம் கட்டவேண்டும் அதற்கு வேலையும் செய்யவேண்டும், அதனால் தான் இந்த இடைவெளி. முடிந்த அளவுக்கு அடுத்த பகுதிகளை விரைவில் பதிவிடுகிறேன்
திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றோம் பின் முதலிரு பகுதிகளில் அது தொடர்பான இந்து மத பின்னணி புராண இதிகாச கதைகளையும், இலக்கியங்களில் சான்றுகளையும் அதில் உள்ள புரட்டுகளையும் பார்த்தோம்.
முன்னரே சொன்னது போல திருப்பதி கோயில் ஒரு புத்தர் கோயில் என்ற வாதத்திற்கான தகவல்கள் நான்கு மற்றும் ஐந்தாம் பகுதிகளில் வரும். இந்த மூன்றாம் பகுதியில் வரலாற்று சான்றுகளில் திருப்பதி கோயில் விஷ்ணு கோயில் அல்ல என்பதன் சான்றுகளை பார்ப்போம்
வரலாற்று சான்றுகளை பார்க்கும் முன் சுருக்கமாக இந்திய வரலாற்றை மேலோட்டமாக பாப்போம்.
வட இந்திய வரலாறை நாம் உற்று நோக்கினால், நாம் அறியும் மன்னர் வம்சங்கள்
1. முதலில் சிந்துசமவெளி காலம் – சுமார் கிமு 3000, பிறகு
2. பிரத்யோதய வம்சம் (c. 779 BCE–544 BCE)
3. ஹர்யாங்க வம்சம் (c. 544 BCE–413 BCE)
4. சிசுநாகர் வம்சம் (c. 413 BCE–345 BCE)
5. நந்தர்கள் வம்சம் (c. 345 BCE–321 BCE)

6. மௌர்யர் வம்சம் (c. 321 BCE–184 BCE)
7. சுங்கர் வம்சம் (c. 185 BCE–73 BCE)
8. கன்வா வம்சம் (c. 73 BCE–26 BCE)
9. குப்தர்கள் வம்சம் (c. 240–550 CE)
சிந்து சமவெளி நாகரிகம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது, சொல்லப்படுவது எல்லாம் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களின் அனுமானமே.
நந்தர்களுக்கு முன் இருந்ததாக சொல்லப்படும் வம்சங்கள் இருந்தனவா என்று கூட தெரியாது அவை எல்லாம் புராணங்களில் சொல்லப்படும் வம்சங்கள்.
நந்தர்களை தவிர மற்ற வம்சங்களை பற்றி நேரடியான வரலாற்று ஆவணங்கள் கிடையாது. சொல்லப்போனால் மௌரியர்கள் காலத்திலிருந்து தான் நேரடியான வரலாற்று ஆவணங்களே கிடைகின்றன.
பலகாலம் வரலாற்று ஆசிரியர்கள், இந்தியா முழுவதும் பெரிய கல்தூண்களை, நட்டு கல்வெட்டுகளை பொறித்த தேவனாம்பியா என்ற அரசன் யார் என்று தெரியாமல், குழம்பி திரிந்தனர், இறுதியில் தான் அசோக சக்ரவர்த்தியின் பெயர் தான் தேவனாம்பியா (தேவ நாம பிரியன்) என்று அறிந்தனர்.
பின்னர் சுங்கர்கள் காலம் எப்படி வந்தது என்று பார்த்தால், அசோகனின் 4வது தலைமுறை பேரன் பிருகத்ரதன் என்பவன் மன்னனாக இருந்த போது அவனது மந்திரியாக இருந்த புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்பனன், அரச சபையிலேயே அவனை வெட்டி கொன்று மன்னாகிறான் (ஜூலிஸ் சீசர் கதையை போல), இந்த காலகட்டத்திலிருந்து தான் பார்பன வைதிக மதம் தலையெடுக்கத் தொடங்குகிறது கிமு 185 முதல்
பின்னாளில் கிபி 2-ஆம் நூற்றாண்டில் குப்தர்கள் பெரும் பலத்துடன் வளரும் போது (கிபி 240–550), வடஇந்தியா முழமையான பார்பன வைதிக மதமானது, பல சமண மத கருத்துகளை தன்னுள் வாங்கி தற்போதைய இந்து மதமாக உருவெடுக்கிறது.
நம்மிடம் உள்ள எல்லா இந்து புராண இதிகாசங்களும் இந்த காலகட்டத்தில் உருவாக்க பட்டவை தான். யாரவாது உட்கார்ந்து எழுத வேண்டும் என்றால் ஒரு மன்னன் பணம் கொடுத்து எழுதினால் தான் முடியும்,
இந்த காலத்தில் தான் யசுர், சாம அதர்வண வேதங்கள் எழுதப்பட்டு நான்கு வேதங்களாக மாற்றப்பட்டது, இராமாயண, மாகாபாரத இதிகாசங்கள், உபநிஷத்துகள் எல்லாம் எழுதப்பட்டன.
குப்தர்களின் காலத்துக்கு பின் பல சிறு சிறு அரசர்கள், சாதவாகனர், வாகாடர்கள், சில கிரேக்க வம்சாவளி அரசர்கள் (அலக்சாண்டர் விட்டு சென்ற மக்களின் வம்சாவழியினர்), சத்ரப்புகள்(இவர்களே பிற்காலத்தில் ரஜப்புத்திரர்கள்) என்ற பெயர்களில் இந்து மன்னர்களாக தலை தூக்கினாலும் அவர்கள் எல்லோருமே பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் குப்தர்கள் அளவுக்கு பெரிய மன்னர்களும் அல்ல.
குப்தர்களின் காலத்தில் வடஇந்தியாவில் கிபி 550 முடிவடைந்த மிகப்பெரிய இந்து மன்னர்களின் அரசாட்சி, மீண்டும் அதே பெரிய அளவுக்கு (நிலப்பரப்பு அளவில்) ஒரு இந்து மன்னனின் ஆட்சி மீண்டும் வந்ததே சத்ரபதி சிவாஜி காலத்தில் தான். ஆனால் அவனை பட்டம் சூட்டிக் கொள்வதற்கே இந்த பார்பனர் என்ன பாடு படுத்தினர் என்பது, ஏற்கனவே நாம் பார்த்தோம் (அதைபற்றிய பதிவு Blog-ல் உள்ளது)
இதே போல தேன்இந்தியாவின் வரலாறை பார்த்தோமானால் (இந்தியாவின் வரலாறு மொகலாயர் காலத்துக்கு முன் வரை வடக்கு தெற்கு என்று தனியாகவே இருந்து வந்தது)
1. சங்கால மன்னர்களின் காலம்
2. இருண்டகாலம் – அல்லது சங்கம் மருவிய காலம் – அல்லது களப்பிரர் காலம்
3. பல்லவர்காலம்
4. பிற்கால சோழர் காலம்
5. பிற்கால பாண்டியர்காலம்
6. நாயக்க மன்னர்களின் காலம்
என்று பிரிக்கலாம். அதன் பின்னர் மொகலாயர், பின்
ஆங்கிலேயர் ஆட்சி வந்துவிட்டது
இதில் சங்க கால மன்னர்கள் என்று சொல்லப்படும் மன்னர்களை பற்றி எந்த கல்வெட்டோ வேறு எந்த உறுதியான சான்றுகளோ கிடையாது. இந்த மன்னர்களை பற்றிய பெயர்கள் மற்ற குறிப்புகள் எல்லாமே சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை கொண்டே அறிய முடியும். கரிகாலனை மட்டும் அவன் கட்டிய கல்லணை மூலம் நாம் அறிவோம்.
இந்த சங்க பாடல்கள் மூலம் நாம் அறியும் மிக பழமையான மன்னன் பாண்டியன் கடுங்கோன் என்று சொல்வார்கள் அவனது காலகட்டம் கிமு 550 ஆக இருக்கலாம் என்று சொல்வார்கள்.
இந்த சங்ககாலம் பற்றி இவ்வளவுதான் நம்மிடம் உள்ள வரலாற்று சான்றுகள், இந்து மதம் பற்றி இந்த காலகட்டத்தில் நம்மிடம் பெரிதாக எந்த சான்றுகளும் கிடையாது,
சிலர் சங்கப்பாடல்களில் சிவனை பற்றி முருகனை பற்றி சொல்லியிருக்கிறது என்பார்கள் அவை எல்லாம் பிற்ச்செர்க்கைகள் தான்,
அப்படி முதல் சங்கத்தின் தலைவரே சிவபெருமான் தான் என்றால், சுமார் 2381 சங்க பாடல்களில் விரல் விட்டு எண்ணும் அளவில் ஒருசில பாடல்களில் மட்டுமே ஏன் சிவன் முருகன் வருகிறார்கள்.
அதிலிருந்தே பிற்காலத்தில், யாரோ விஷம எண்ணத்தோடு சேர்த்தது தான் சில சங்க பாடல்களில் வரும் சிவன் முருகன் பெயர்கள்.
சங்கப்பாடல்களை தொகுத்து இன்று நாம் பார்க்கும் வடிவில் கொடுத்ததே உ.வே.சா என்ற பார்பனர் தலைமையில் இருந்த மக்களே.
இதில் பார்பனர் எதிர்ப்பு ஏன் என்று கேட்டால், உ.வே.சா தொல்காப்பியத்தை ஏன் பதிப்பிக்கவில்லை என்பதே என் பதில் கேள்வி, அது முழுக்க முழுக்க இலக்கண நூல் அதில் இந்து பக்தி போன்றவற்றை சொருக முடியாது. என்பதே காரணம்,
உ.வே.சா-வுக்கு தொல்காப்பியதின் பிரதிகள் கிடைக்கவில்லை அதனால் தான் அவர் பதிப்பிக்கவில்லை என்று சோ, சுஜாதா போன்றவர்கள் சப்பைகட்டு கட்டுவார்கள்.
தொல்காப்பியத்தை முதலில் அச்சு வடிவில் பதிப்பித்தவர் யாழ்பாணத்தை சேர்ந்த தாமோதர பிள்ளை. அவர் கூறுவது, உ.வே.சா-வை சந்தித்து இலங்கையில் தமிழ் நூல்கள் பதிப்பிக்க சில ஓலைசுவடிகளை கடனாக கேட்க சென்றபோது சுமார் 13 தொலாப்பிய பிரதிகள் யாரும் சீந்துவார் இன்றி கிடந்ததாகவும், அதில் ஒன்றை வாங்கி வந்தே அவர் தொல்காப்பியத்தை பதிப்பித்தார் என்றும் சொல்லுவார்.
மேலும் உ.வேசா-வின் தந்திர பார்பன குணத்துக்கு மற்றுமொரு எடுத்துகாட்டு என்னவென்றால், 10-ஆம் நூற்றாண்டு காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பவர், ராஜராஜனின் விருப்பத்திற்கு இணங்க பல புலவர்கள் எழுதிய சைவ சமய பாடல்களை எல்லாம் பன்னிரு திருமுறை நூல்கள் என்று தொகுக்கிறார், அந்த தொகுப்பின் 11ஆவது திருமுறையில் உள்ள 9ஆவது நூல் திருமுருகாற்றுப்படை. இந்த நூலை வேண்டும் என்றே சங்கபாடல்கில் உள்ள பத்துப்பாட்டு தொகுப்பில் கொண்டு சேர்கிறார் உ.வே.சா, திருமுருகாற்றுப்படையை பத்துப்பாட்டில் சேர்க்க உண்மையான எந்த சங்க நூலை நீக்கினார் என்று அவருக்கே தெரியும்.
சரி குறிஞ்சி நிலா தலைவன் முருகன் என்று தொல்காப்பியம் சொல்கிறதே என்று கேட்டால், அதில் முருகன் என்று சொல்லவில்லை வேலன் என்று தான் சொல்கிறது.
சிவன் என்ற கடவுளை தொல்காப்பியருக்கு தமிழ் முதல் சங்கம் நடத்திய தலைவர் என்று தெரியுமானால், அவர் ஏன் சிவபெருமானை அல்லது அகத்தியரை, ஐந்து நிலங்களில் ஒன்றுக்கு கூட தலைவனாக சொல்லாமல் அவர் மகனை முருகனை சொல்லப்போகிறார்
அதனால் இந்த சங்க காலத்திலேயே சிவன் இருந்தார், முருகன் இருந்தார் போன்ற கதைகளில் நம் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
அதற்கு அடுத்த காலமான இருண்டகாலம், சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம் இதைப்பற்றி ஏற்கனவே விரிவாக,
களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி என்ற பதிவில் உள்ளது
(அதைபற்றிய பதிவு Blog-ல் உள்ளது)
மேலே சொல்லப்பட்ட காலங்களை தவிர்த்தால் நமக்கு மீதம் இருப்பது
1. பல்லவர்காலம்
2. பிற்கால சோழர் காலம்
3. பிற்கால பாண்டியர்காலம்
4. நாயக்க மன்னர்களின் காலம்
இதில் பல்லவர்காலம் தவிர்த்து மற்ற மன்னர்களின் காலம் சைவமதத்தின் காலம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். நாயக்கர் காலத்தில் தான் திருப்பதி முழுமையான வைணவ விஷ்ணு கோயில் ஆனது என்பதும் நமக்கு தெரியும், அதில் கிருஷ்ண தேவராயனின் காதல் காதல் கதை பற்றி தனி பதிவு வேறு உண்டு.
அதை “விஜயநகர பேரசும் - திருப்பதி கோயிலும்” பதிவில் பார்க்கலாம். (அதைபற்றிய பதிவு Blog-ல் உள்ளது)
மொத்தத்தில் பார்த்தால், பல்லவர்காலத்துக்கு முன் இந்து மதம், சிவன் முருகன், விஷ்ணு போன்ற வழிபாடுகள், மற்றும் அதற்கான எந்த சான்றுகளும் இல்லை.
பல்லவர்காலமான கிபி 275–882 நடந்த சம்பவங்களே தமிழ் நாட்டில் இந்து மதம் உருவான காலகட்டம் என்பது தெள்ளத்தெளிவு.
முக்கியமாக, நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், புராண கதை சொல்லி இந்த திருப்பதி கோயிலை வைணவ பார்பன கோயிலாக மாற்றிய ராமானுஜர் கிபி 1100 இரண்டாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்தவர்.
அதனால் ராமானுஜர் காலத்துக்கு பின் உள்ள வரலாற்று சான்றுகள், திருப்பதி விஷ்ணு கோயில் என்று நிறுவ நமக்கு பயன்படாது, நமக்கு தேவை ராமானுஜர் காலத்துக்கு முந்தைய வரலாற்று சான்றுகள் மட்டுமே.
இந்த பல்லவர்காலத்தில் என்ன நடந்ததது என்று இனி விரிவாக பார்ப்போம்,
பல்லவர் காலத்தை இரண்டாக பிரிப்பார்கள்.
முற்கால பல்லவர்கள் – கிபி – 275 - 560
பிற்கால பல்லவர்கள் – கிபி – 575 - 897
இதில் முற்கால பல்லவர்கள், பாரசீக நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று வராலற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். (பாரசீகர்கள் பல்லவர்களா என்று வேறு ஒரு தனி பதிவில் பின்னர் காண்போம்)
முற்கால பல்லவர்கள் என்ற பெயரில் சுமார் 14 மன்னர்கள் பெயர்கள் அறியப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் புத்தமதத்தை சார்ந்தவர்களாகவே அறியப்படுகிறார்கள்.
அவர்களில் முதலாம் நந்திவர்மனின் சகோதரனாக போதிதர்மர் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் காலத்தில் சிறிது சிறிதாக, சைவமும் வைணவமும் பரவ தொடங்குகிறது.
இவர்கள் களப்பிரருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், பெரும்பாலும், பிராகிருத மொழியையும், சில சமயங்களில் சமஸ்கிரத மொழியையும் பயன் படுத்திவந்தனர். இந்த காலத்திலும் பெரிய அளவில் இவர்கள் இந்து மதம் வளர்க்க ஏதும் செய்ததாக ஆதாரங்கள் இல்லை.
பிற்கால பல்லவர்கள் என்போர் வரிசை:
1. சிம்ஹவிஷ்ணு (575–600)
2. முதலாம் மகேந்திரவர்மன் (600–630)
3. முதலாம் நரசிம்மவர்மன் (630–668)
4. இரண்டாம் மகேந்திரவர்மன் (668–672)
5. முதலாம் பரமேஸ்வரவர்மன் (670–695)
6. இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்) (695–722)
7. இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (705–710)
8. இரண்டாம் நந்திவர்மன் (பல்லவமல்லன்) (730–795)
9. தண்டிவர்மன் (795–846)
10. மூன்றாம் நந்திவர்மன் (846–869)
11. அபராஜிதவர்மன் (879–897)
இதில் இறுதியாக சொல்லப்பட்ட அபராஜிதவர்மன் தான் இரண்டாம் வரகுணபாண்டியனை போரில் கொன்று சோழர்களுக்கு வேலையை சுலபமாக்கினான்.
இந்த இரண்டாம் வரகுணபாண்டியனிடம் மந்திரியாக வேலை செய்தவர் தான் திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர்.
பின்னர், கிபி 897-ல் இந்த அபராஜிதவர்மனுக்கு கட்டுப்பட்ட சிற்றசனான விஜயாலயசோழனின் மகன் முதலாம் ஆதித்தியன், திருத்தணி அருகே நடந்த போரில் அவனை கொன்று பல்லவர் ஆட்சி மொத்தமாக முடிந்து,
பிற்கால சோழர் ஆட்சி தொடங்குகிறது. பிற்கால சோழர்கள் முழுக்க சைவர்கள், எனவே அவர்கள் திருப்பதி கோயிலுக்கு எதும் செய்ய வாய்ப்பில்லை.
பிற்கால பல்லவர்கள் சிலர் சமணம், சிலர் சைவம் சிலர் வைணவம் என்று தங்கள் மதத்தை மாற்றிகொண்டே இருந்தனர். உதாரணமாக மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின் திருநாவுகரசரால் சைவத்துக்கு மாறியவர். அவர் மகன் பிறக்கும் போது சைவமாக இருந்து பின் வைணவத்துக்கு மாறியவர்.
இவர்கள் காலத்தில் தான் குகைவரை கோயில்கள் மிக சிறப்பான இடத்தை தமிழகத்தில் பெற்றது. இந்த பிற்கால பல்லவர்கள் பல இந்து கோயில்களை கட்டினார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியில், பல்லவர்கால கால செப்பேடுகள் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன, லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள அந்த செப்பேடுகள்
1. சாருதேவி செப்பேடுகள்
2. குர்ரம் செப்பேடுகள்
3. தந்தான்தொட்டம் செப்பேடுகள்
என்று பிரித்துள்ளார்கள் அவைகளின் காலகட்டம் கிபி 400-700
அவற்றில் நாம் அறிவது என்ன வென்றால்
1. மகாராஜா விஜய புத்தவர்மன், தாலூர் என்ற ஊரில் உள்ள நாராயணன் கோயிலுக்கு தானங்கள் கொடுத்தான்
2. கண்டுகரை என்ற ஊரில் பரம பாகவதம் என்ற கோயிலை விஷ்ணுகோப பல்லவன் கட்டினான்
3. விஷ்ணுகோப பல்லவன் மகன் சிம்ஹவிஷ்ணு பல்லவன் மேன்மதுரை என்ற ஊரில் புதிய விஷ்ணு கோயில் கட்டினான்
4. மகேந்திர பல்லவன், மகேந்திரவதி நகரில்(காஞ்சியின் வேறு பெயராக இருக்கலாம்) மகேந்திரதடாகம் கரையில் விஷ்ணுக்ராஹா என்னும் கோயிலை கட்டினான்
5. மகேந்திர பல்லவன், மகேந்திரபட்டு என்னும் இடத்தில் பிரம்ம ஈஸ்வரனுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரு குகை கோயிலை கட்டினான்
6. பல்லவமல்லன், வைகுந்தபெருமாள் கோயிலை காஞ்சியில் கட்டினான்
7. கோ விஜய விக்கிரவர்மன் (இராமாயண, மகாபாரத கதைகளை கோயில்களில் உபன்யாசத்தை கட்டாயமாகியவன்)
8. பல்லவமல்லன், தனது 65 வயதில், மகாபலிபுரத்தில் ஆதிவராகமூர்த்தி கோயிலை கட்டினான்
9. தண்டிவர்மன், திருச்சிக்கு அருகே திருவெள்ளறை என்ற ஊரில் புண்டரிகாக்ஷ பெருமாள் கோயில் கட்டினான்
10. தண்டிபோட்டரசர்(தண்டிவர்மனே தான்) உத்தரமல்லுரில் வைகுந்தபெருமாள் கோயில் கட்டினான்
11. இதே தண்டிவர்மன் குடவர் நாட்டில் திருவேங்கடகொட்டம் அருகில் பெருமானடிகள் கோயிலை திருச்சானூரில் கட்டினான்
12. மூன்றாம் நந்திவர்மன் காஞ்சியில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலை கட்டினான்
13. தன் 24 வயதில் நிற்பதுங்கவர்மன் காஞ்சிக்கு அருகே திருமுக்கூடல் என்ற ஊரில் வெங்கடேசபெருமாள் கோயில் கட்டினான்
மேலே உள்ளவற்றை எல்லாம் பார்த்தல், பல பெருமாள் கோயில்களுக்கு சில சிவன் கோயில்களுக்கு என்று பல்லவர்கள் பல தானங்களை செய்திருந்தாலும், எங்கேயுமே திருப்பதி கோயிலை பற்றி ஒருவரி கூட சொல்லப்படவில்லை,
திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் வரை சென்று தானம் கொடுத்த பல்லவர்கள் ஏன் திருப்பதி கோயிலுக்கு எந்த தானமும் செய்யவில்லை,
ஒரே பதில் இந்து மன்னர்களாக மாறிய பல்லவர்கள் வேறு மதமான புத்த மத கோயிலுக்கு தானம் செய்ய விருப்பவில்லை என்பதாக மட்டுமே இருக்க முடியும்.
சரி வரலாற்று கல்வெட்டுகள், செப்பேடுகளை பார்த்தோம் ஒரு நாட்டின் வரலாறு என்பது இவைகளை வைத்து மட்டுமே முடிவுசெய்ய முடியாது
வெளிநாட்டு பயனிகளானா, சீன யாத்திரிகர்கள் பாகியான், யுவாங் சாங் போன்றோர் இந்த திருப்பதி கோயிலை பற்றி என்ன சொல்கிறார்கள், சிங்கள புத்த நூலான மகாவமிசம் என்ன சொல்கிறது,
களப்பிரர் மன்னர்களில் ஒருவனின் பெயர் புள்ளி அவன் திருவேங்கடத்தையே தலைநகராக கொண்டு 3-ஆம் நூற்றாண்டில் ஆண்டவன், அவனுக்கும் இந்த கோயிலுக்கும் என்ன சம்பந்தம் இவைகளையும் நாம் ஆராயவேண்டும்.
இந்த 3-ஆம் பகுதி ஏற்கனவே, மிகமிக நீளமாகிவிட்டது, எனவே அவற்றை பற்றி அடுத்த பகுதியில் பாப்போம்.
If you like this post and want to read more related posts.
Please visit
https://hiddenhistroy.blogspot.in/?m=1

கருத்துகள் இல்லை: