செவ்வாய், 25 ஜூலை, 2017

சத்தமில்லாமல் நடக்கும் சமூகக் கொலைகள்! - எவிடன்ஸ் கதிர்


இரண்டு கைகளும் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, முகம் சிதைந்துபோன நிலையில் பிணமாகக் கிடந்தார் கதிர் (எ) கதிரேசன். அவருடைய மனைவி நந்தினியும், தாயார் மல்லிகாவும் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியழுதனர். ஒட்டுமொத்த கிராமமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
சாதி ஒழிப்புக்காகவும், மது ஒழிப்புக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடுகிற தலித் இளைஞர்கள் கொலை செய்யப்படுவது தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. 2016 ஜூன் மாதம் முதல் இப்போது வரை, சாதி ஒழிப்புப் போராளிகள் 27 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஜூலை 8-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட கதிர் (எ) கதிரேசன்.
திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பஞ்சிலி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த நந்தினியைக் காதலித்தார். அவர்களின் திருமணம் ஐந்து மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிலையில், ஜூலை 8-ம் தேதி காலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த தங்கராசு, அவருடைய மகன்கள் சுரேஷ், பாஸ்கர் ஆகியோர் கதிரேசன் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து, அங்கிருந்த பொருள்களை எல்லாம் காலால் எட்டி உதைத்து ‘‘கதிரேசன் எங்கே?’’ என்று கேட்டுள்ளனர். ‘‘என்ன விஷயம்?’’ என்று நந்தினியும், மல்லிகாவும் கேட்டதற்கு, ‘‘என் தோட்டத்தில் பிளாஸ்டிக் குழாயைக் கதிரேசன் உடைத்துவிட்டான். அவனைக் கொல்லாமல் விடமாட்டோம்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குக் கதிரேசன் சென்றுள்ளார் என்பதை அறிந்து கொண்டு, அங்கு சென்ற மூவரும் கதிரேசனைச் சாதி ரீதியாக இழிவாகப் பேசி, செருப்புக் காலால் எட்டி உதைத்துள்ளனர். இரும்புக் கம்பியால் முகத்தில் அடித்ததும் கதிரேசனின் பற்கள் உடைந்தன. ‘‘என் கணவரை அடிக்காதீர்கள்’’ என்று அவர்களின் கால்களைப் பிடித்து நந்தினி கதறியுள்ளார். அவர்கள், நந்தினியின் முடியைப் பிடித்து இழுத்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். மல்லிகாவின் கன்னத்தில் அறைந்துள்ளனர்.
கதிரேசனை இரு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கட்டி, அடித்தவாறு இழுத்துச் சென்றுள்ளனர். திருப்பஞ்சிலி பஸ் நிறுத்தம் அருகே கதிரேசனை நிர்வாணமாக்கி, ‘‘கீழ்சாதி நாய்க்குக் கட்சிக் கேக்குதா? எங்கப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுட்டா எங்களுக்குச் சரிசமமா வந்துருவியா?’’ என்று கூறிக்கொண்டே 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. அவர்களின் கால்களைப் பிடித்து நந்தினியும் மல்லிகாவும் கெஞ்சியும், தாக்குதல் நிற்கவில்லை. கதிரேசனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டனர். கதிரேசன் தந்தை கணேசன், உடனே மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வந்தபோது, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார் கதிரேசன். குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் உள்ளனர்.
“இந்தக் கொலைக்கு, குழாய் உடைக்கப்பட்டது காரணம் அல்ல. அவர், சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டு சொந்த ஊரில் துணிச்சலாக வாழ்ந்துள்ளார். மேலும், அந்த ஊரில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டார். அந்த வன்மத்தில்தான் கொன்றனர்” என்று கதிரேசன் குடும்பத்தினர் கூறுகின்றனர். தலித் சமூகத்தினரைப் பொது இடத்தில் கட்டி வைத்து அடிப்பது, இழுத்துச் செல்வது போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில்தான் நடக்கும். அதுபோல தமிழகத்திலும் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மதுரை மாவட்டம், வடபழஞ்சி கிராமத்தில் முத்தழகு என்கிற இளைஞர், 15 பேர் கொண்ட கும்பலால் ஜூன் 28-ம் தேதி வெட்டிக் கொல்லப் பட்டார். சாதிமறுப்புத் திருமணம் செய்து வைத்ததற்காகவும், மதுக்கடையை இழுத்து மூடியதற்காகவும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வழக்கு போட்டார் என்பதற்காகவுமே இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் முருகன். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடியவர். கட்டப்பஞ்சாயத்துக் கும்பலுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தவர். அதனால் ஆத்திரம் கொண்ட கும்பல் ஒன்று, முருகனைக் கொலைசெய்ய முயன்றது. அப்போது, முருகனின் தம்பி முத்துகிருஷ்ணன் கொல்லப் பட்டார். அதன்பின்னர், முத்துகிருஷ்ணனைக் கொன்ற குற்றவாளிகளில் ஒருவர் கொல்லப்பட, வேம்பத்தூர் கிராமத்தையே அந்தக் கும்பல் அடித்துநொறுக்கியது. ஒட்டுமொத்த தலித் குடும்பங்களும், கடந்த ஏழு ஆண்டுகளாக அகதிகள் போலத் திரிகிறார்கள். இதற்கிடையில், முருகனைக் கொலைசெய்ய ஏழு முறை முயற்சி நடந்தது. இறுதியில், ஏப்ரல் மாதத்தில் அவரை வெட்டிக்கொன்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார். அதனால் ஆத்திரமடைந்த கள்ளச்சாராயக் கும்பல், பழனிவேலை 2016 செப்டம்பரில் வெட்டிக்கொன்றது.
குற்றக் கும்பலுக்கு எதிராகக் குரல் கொடுத்த திருநெல்வேலி ராஜலிங்கம், சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்த மதுரை முத்துமாணிக்கம், கழிவுகளைக் கொட்டியதற்கு எதிராகக் குரல் கொடுத்த சிவகங்கை நாகப்பன், அரசுப் புறம்போக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய போடி பார்த்திபன், பொது நீர்த்தொட்டியில் உரிமை கேட்டதற்காக சோணை... இப்படிக் கொலைசெய்யப்பட்ட தலித் இளைஞர்களின் பட்டியல் நீளமானது.
இவர்கள் அனைவரும் பொதுப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்டவர்கள். கந்துவட்டி கும்பல், மணல் மாஃபியா, தொழில் நிறுவனங்கள், சாதிய சக்திகள் போன்றோர்தான் இத்தகைய கொலைகளின் பின்னணியில் உள்ளனர். கொல்லப்படும் இந்த இளைஞர்கள் எந்தப் பின்புலமும் இல்லாதவர்கள். அதனால், இந்தச் செய்திகள் பெரிதாக வெளியே வருவதில்லை.
மது ஒழிப்புப் போராளி முத்தழகு கொல்லப்பட்டபோது, அவருடைய மனைவி அருள்மொழியைச் சந்தித்தோம். அழுதுகொண்டே அவர் சொன்னார். “என் கணவரிடம் ‘சமூகம் சமூகம் என்று உழைக்கிறீர்களே... இந்தச் சமூகம் உங்களுக்கு என்ன செய்யப்போகிறது’ என்று கேட்டிருக்கிறேன். ‘நான் செத்துப்போய்விட்டால் எல்லோரும் வருவார்கள். அவர்கள் கண்டிப்பாக உன்னையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றுவார்கள்’ என்று சொன்னார். ஆனால், இப்போது நானும் என் குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்கிறோம்” என்று கண்ணீருடன் கதறினார்.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், ‘ஈவ்டீசிங் செய்த ஒரு கும்பலைத் தட்டிக்கேட்டதற்காக அழகர் என்கிற இளைஞர் வெட்டுப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார்’ என்று என் அலைபேசிக்கு ஒரு தகவல் வந்தது. விரைந்து சென்று பார்த்தேன். சுயநினைவின்றி மூச்சுத்திணறலோடு கிடந்தார் அழகர். அருகில் தலையில் அடித்துக்கொண்டு குடும்பமே கதறிக்கொண்டிருந்தது. இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பும் நேரத்தில், ‘அழகர் இறந்துவிட்டார்’ என்ற செய்தி வந்தது. நீதிக்காகப் போராடுகிறவர்களின் குடும்பங்களை நடுத்தெருவில் நிற்க வைப்பது ஆதிக்க சாதி மனோபாவத்துடன் செயல்படுபவர்கள் மட்டுமல்ல, அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நாமும்தான்! - எவிடன்ஸ் கதிர்

கருத்துகள் இல்லை: