வெள்ளி, 28 ஜூலை, 2017

தமிழகத்தில் ஏழு மாதங்களில் 30 தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்!
minnambalam :‘தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் 30 தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்’ என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நேற்று (ஜூலை 27) திமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்துக்குப் பிறகு இரவு கடலூரில் நடைபெற்ற அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திருமாவளவன், “அம்பேத்கருக்கு முன்னுரிமை கொடுத்த மாநிலம் மகாராஷ்டிராதான். லண்டனில் அம்பேத்கர் தங்கிய வீட்டை வாங்கி பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருநாள் அம்பேத்கரின் காலடி இங்குதான் பட்டது என்று அவரது காலடி தடத்தை தேடி அலையும் காலம் வரும்.
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் நடந்த 40 கொலைகளில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 30 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் அம்பேத்கரைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன், மிகவும் வேதனைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: