வெள்ளி, 28 ஜூலை, 2017

விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை

இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். இதைத் தடுப்பதுதான் இந்தியாவைத் தேவையில்லாமல் வறுமையில் வைத்திருப்பதாக் குமறுகிறார்கள், ஆளும் வர்க்க அறிவாளிகள். விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் !
ஃபோர்ப்ஸ் – அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலக முதலாளி வர்க்கத்தின் பத்திரிகை. சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் இது.
ந்திய விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது. ஏனென்றால், பொருளாதார வளர்ச்சி என்பதே இப்படித்தான் நடக்கும்.
அதிகமான உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, மழையை நம்பி நடைபெறுகின்ற, உற்பத்தி திறன் குறைந்த இந்த விவசாயத்தை தலைமுழுகிவிட்டு, விவசாயிகள் வெளியேறட்டும். தொழிற்சாலை வேலை அல்லது சேவைத்துறை வேலை என்பன போன்ற உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் அதைச் செய்யட்டும்.


கோடிக்கணக்கான குறு, சிறு விவசாயிகளையும் அவர்களது உடலுழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு சிதறுண்ட அளவில் நடந்து வரும் இந்திய விவசாயம்.
இந்த மாற்றத்தை முடிந்த அளவுக்கு துன்பமில்லாமல் சாதிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த மாற்றத்தை தடுப்பதென்பது நம் எல்லோரையும் தேவையில்லாமல் வறுமையில் வைத்திருக்கிறது. ஒரு தொழிலை செய்து வாழ முடியவில்லை என்றால், வேறு தொழிலுக்கு மாறிக்கொள்ள வேண்டும். இது சொல்லிப் புரிய வைக்க வேண்டிய விசயமா என்ன? நீ காலாவதியாகிப்போன சாட்டைக்குச்சி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும் சரி, விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும் சரி, இதுதான் நியதி.
மகாராட்டிர முதல்வர் 30,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கிறார். ம.பி. முதல்வர் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்.… இவையெல்லாம் விவசாயத்தை ஒரு நடவடிக்கை என்ற முறையில் காப்பாற்றும். ஆனால் அந்த நடவடிக்கை, உற்பத்தி திறன் குறைந்த, உழைப்பாளிகள் அதிகம் தேவைப்படுகின்ற நடவடிக்கையாகவே இருக்கும். அதுதான் நமக்குத் தேவையில்லை என்கிறோம். ஒவ்வொரு மணி நேர மனித உழைப்பின் உற்பத்தி திறனும் அதிகரிக்க அதிகரிக்கத்தான் நம்முடைய வாழ்க்கைத்தரம் உயரும். விசயம் மிகவும் எளிமையானது. அதிகமாக உற்பத்தி செய்தால்தான் அதிகமாக நுகர முடியும்.
உற்பத்தி திறன் அதிகரித்தால் பயனடைபவர்கள் யார்? உற்பத்தி செய்பவர்கள்தான். பால் குருக்மேன் கூறுவதைப் போல, உழைப்பின் உற்பத்தி திறன் அமெரிக்காவில் இருப்பதைப் போலவே உலகெங்கும் இருக்குமானால், ஒரு வேலைக்கு அமெரிக்காவில் கிடைக்கின்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்கும். ம.பி. முதல்வரை சந்தித்திருக்கும் விவசாய சங்கத் தலைவர் தேவ் நாராயண் படேல், கடன் தள்ளுபடி கேட்டிருப்பதாகவும், குறைந்த பட்ச ஆதரவு விலை கேட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கடன் என்பது விவசாயத்தின் உள்ளீடு பொருளுக்கான செலவுகளில் ஒன்று. விலை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு. உற்பத்திச் செலவுகளைக் காட்டிலும் பொருளின் விலை குறைவாக இருக்கிறது என்றால், அந்த வியாபாரம் நட்டத்தில் நடக்கிறது என்று பொருள். இந்த விசயத்தை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்லுங்கள். ஒரு பொருளாதாரத்தில் நட்டத்தை ஏற்படுத்துபவர்கள், மதிப்பை குறைக்கிறார்கள். அதன் மூலம் நம் அனைவரையும் அவர்கள் ஏழையாக்குகிறார்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன தெரியுமா? அது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு அல்ல. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பிலிருந்து, உற்பத்திக்கான உள்ளீடு பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி செலவுகளை கழித்தால் கிடைப்பதுதான் அது. அது மட்டும்தான் கூட்டப்பட்ட மதிப்பு.  நட்டம் என்பது என்ன? நட்டம் என்பது குறைக்கப்பட்ட மதிப்பு. அது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறைக்கிறது.
ஒரு பொருளாதாரத்தில் நாம் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பைத்தான் நுகர்கிறோம். நட்டம் ஏற்படுத்துகின்ற (விவசாய) நடவடிக்கைகளினால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு குறைகின்றது என்றால், நாம் குறைவான மதிப்பை நுகர்கிறோம் என்று பொருள். நாம் ஏழையாக்கப்படுகிறோம்.
ம.பி. முதல்வர் அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதம் இருக்கிறாராம். காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க. அரசின் விவசாயி விரோத கொள்கையை எதிர்த்து உண்ணாவிரதமாம். இதன் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் நமக்குப் புரியாமல் இல்லை.
சுமார் 50% க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த விளங்காத உற்பத்தி திறன் குறைந்த விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஓட்டும் இருக்கிறது. அதனாலென்ன, பொருளாதார விதிகள் ஓட்டுக்கு கட்டுப்படுவதில்லை. அதனால்தான் சொல்கிறோம், விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள். உருப்படியான, உற்பத்தித் திறன் கூடிய வேறு ஏதாவது ஒரு தொழிலைச் செய்யுங்கள்.

நிலங்கள் சிதறிப் போகாமல் பரந்த அளவிலும், மிக நவீன முறையிலும் அமெரிக்காவில் நடந்துவரும் முதலாளித்துவ பண்ணைகள்.
விவசாயத்துறை வல்லுநர் தேவிந்தர் சர்மா கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டுவதை அரசு விரும்பவில்லை. ஏனென்றால், தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அது உகந்ததாக இல்லையென அரசு கருதுகிறது.” “கடந்த பல ஆண்டுகளாக விவசாயத் துறையை அரசு திட்டமிட்டே போண்டியாக்கியிருக்கிறது. நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைக்கு குறைந்த கூலியில் ஆட்கள் வேண்டும் என்பதற்காக, விவசாயத்திலிருந்து மக்களை வெளியேற்றி நகர்ப்புறத்தை நோக்கித் துரத்துகிறார்கள். பண வீக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உணவுப் பொருட்களின் விலைகள் உயர விடாமல் வேண்டுமென்றே தடுக்கிறார்கள்.”
“தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையிலான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இந்திய விவசாயம் ஒத்துவரவில்லை. விவசாய வருமானம் அதிகரித்தால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரந்து விடும். அப்படி நடக்கக் கூடாது என்பதுதான் அரசின் விருப்பம். மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.”
பொருளாதாரத்தில் என்ன நடக்க வேண்டும் என்று நாமும் விரும்புகிறோமோ, அதை தேவிந்தர் சர்மா தெளிவாகச் சொல்லியிருக்கிறார் –  இரண்டு சிறிய விசயங்களைத் தவிர.
முதலாவதாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் வெளியேற்றத்தை அவர் எதிர்க்கிறார். நாமோ இதுதான் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இரண்டாவதாக, தொழில்துறைக்கு குறைந்த கூலியில் தொழிலாளர்கள் வேண்டும் என்பதற்காக விவசாயிகளை விவசாயத்தை விட்டு நாம் வெளியேற்றுவதாக அவர் சொல்கிறார். அது தவறு. நாம் அவர்களுக்கு அதிக ஊதியம் அளிக்க விரும்புகிறோம். விவசாயத்தைக் காட்டிலும் உற்பத்தித் திறன் கூடிய பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அதை செய்ய விரும்புகிறோம். நமக்கு கொஞ்சம் விவசாயிகள் போதும் என்கிறோம். பெரும்பாலான மற்றவர்கள் வேறு காரியங்கள் செய்யலாம் என்கிறோம்.அதானால்தான் விவசாயத்தில் தொடர்ந்து நீடிக்கும்பொருட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதை நாம் விரும்பவில்லை.

விளைபொருட்களுக்கு இலாபம் அளிக்கக்கூடிய விலையை நிர்ணயம் செய்யுமாறு அரசை வலியுறுத்தி கோபியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் முன்பாக அப்பகுதி சிறு விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
ஒரு நாட்டிடமோ, மக்களிடமோ செல்வம் கொழிக்கவேண்டும் என்று நாம் விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? அதிக உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, உற்பத்தித் திறன் குறைந்த விவசாயத்திலிருந்து வெளியேறி, உற்பத்தி திறன் மிகுந்த வேறு தொழில்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும். பணக்கார நாடுகளான அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் முறையே 1%, 2% மக்கள்தான் விவசாயத்தில் இருக்கிறார்கள். அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கும் 1%, 2% தான். அதனால்தான் பொருளாதாரத்தின் மற்ற துறைகளில் உள்ளவர்கள் சராசரியாக எந்த அளவு உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக அங்கே விவசாயிகளும் இருக்கிறார்கள்.  மொத்தமாக பார்க்கும்போது, அந்த நாடுகளின் பொருளாதாரங்களில், மதிப்பு எவ்வளவு கூட்டப்படுகிறதோ கிட்டத்தட்ட அதற்கு சமமான அளவுக்குத்தான் உழைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவைப் பாருங்கள். இங்கே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15% தான் விவசாயத்திலிருந்து வருகிறது. ஆனால் இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகையோ 50% க்கும் மேல். மற்ற பணக்கார நாடுகளைப் போல இந்தியாவும் பணக்கார நாடாக மாற வேண்டுமானால், உழைப்புக்கும் உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கும் இடையிலான விகிதம் பணக்கார நாடுகளில் உள்ளதைப் போல மாற வேண்டும். செல்வச் செழிப்பு அடைவது என்பதன் பொருள் அதுதான்.  இந்திய மக்கள் தொகையின் பெரும்பான்மையினர், கழனிச் சேற்றில் நின்று கொண்டிருப்பதை விட்டு விட்டு, அதைக்காட்டிலும் உருப்படியான வேறு ஏதாவது தொழிலை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.
விவசாயம் செய்து பிழைக்க முடியவில்லையா?  வேறு எதையாவது செய். இதை சொல்லித்தான் புரிந்து கொள்ள வேண்டுமா? இந்தியாவில் இந்த மாற்றம் சுமுகமாக நடந்தேறினால் நல்லது. ஆனால், அவர்கள் விவசாயியாக நீடிப்பதற்காக அவர்களுக்கு மானியம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
(But India’s Farmers Should Go Bust, That’s How Economic Development Works, Tim Worstall, Forbes, 6.11.2017 கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
*****
க்கட்டுரையைப் படித்த வாசகர்களில் பலர் ஆத்திரமடைந்திருக்கலாம். இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பவையெல்லாம் இந்திய விவசாயம் பற்றிய அந்தக் கட்டுரையாளரின் கருத்துகள் மட்டுமல்ல, இதுதான் நேற்றைய மன்மோகன் அரசின் கருத்து, இன்றைய மோடி அரசின் கருத்து. நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் காட் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் இந்த திசையில்தான் இந்திய விவசாயத்தை இழுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டுரையை படித்து முடித்துவிட்டு, இதே இதழில் வெளியிடப்பட்டிருக்கும் “விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – எந்தப் பாதையில்?” என்ற கட்டுரையையும் சேர்த்துப் படித்துப் பாருங்கள். ஃபோர்ப்ஸ் இதழ் கூறும் கருத்தைத்தான் மோடி அரசு வரிக்கு வரி வழிமொழிகிறது என்பதை அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஃபோர்ப்ஸ் கட்டுரை, இந்திய விவசாயத்தை எப்படி மாற்றியமைத்தால் அது முதலாளித்துவத்துக்கு இலாபம் தரும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பிரச்சினையைப் பரிசீலிக்கிறது. “விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – எந்தப் பாதையில்?” என்ற கட்டுரை, விவசாயத்திலும், தொழில்துறையிலும் என்னவிதமான மாற்றங்களைக் கொண்டுவந்தால், விவசாயிகளுக்கு நலம் பயக்கும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பிரச்சினையைப் பரிசீலிக்கிறது.இரண்டும் இரண்டு விதமான வர்க்கப் பார்வைகள்.
“இந்திய விவசாயி உற்பத்திப் பொருளின் மதிப்பைக் கூட்டவில்லை” என்று குற்றம் சாட்டுகிறார் கட்டுரையாளர். விவசாய விளைபொருளின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து வைத்திருப்பதற்கு பொறுப்பு இந்த அரசு. இதனால் ஆதாயமடைபவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், கமிசன் மண்டிக்காரர்கள். விளைபொருளின் “பரிவர்த்தனை மதிப்பு”க்கு, அதன் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத விவசாயியைப் பொறுப்பாக்குகின்ற இந்த அயோக்கியத்தனத்தின் பெயர்தான் முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடு.

மைய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் உணவு மானியம் குறு, சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்திய மக்களின் பசியை ஆற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முதலாளித்துவப் பொருளாதாரப் பார்வை தோற்று சந்தி சிரித்து விட்டது. கட்டுரையாளரின் கருத்துகள் அபத்தமானவை. இதைச் சொல்வதற்கு ஒருவர் பொருளாதார வல்லுநராக இருக்கத் தேவையில்லை. அதனை மக்கள் தமது சொந்த அனுபவத்திலேயே கூறிவிட முடியும்.
சுதந்திரமான சந்தை ஒன்று நிலவுவது போலவும், வேண்டல் – வழங்கல் அடிப்படையிலான பொருளாதார விதிகள் மட்டுமே சந்தையை இயக்குவது போலவும், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட விவசாயிகள் மறுப்பதைப் போலவும், சுதந்திரச் சந்தையின் விதிகளுக்குப் புறம்பாக அவர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கிக் காப்பாற்றிக் கொண்டிருப்பதைப் போலவும் கட்டுரையாளர் படம் காட்டுகிறார்.
இவை அத்தனையும் வரிக்கு வரி பொய். அரசியல் அதிகாரத்தால் வளைக்கப்படாத “சுதந்திரச் சந்தை” என்று ஒன்று எங்கும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் ஒருதலைப்பட்சமான விதிமுறைகளில் தொடங்கி டிரம்பின் “கொள்கை” வரை இதைப் புரிந்து கொள்ள நம்முன் ஆயிரம் சான்றுகள் இருக்கின்றன. உள்நாட்டில் மோடி அரசின் துணையுடன் இயற்கை வளங்களை, பொதுத்துறைகளை, வங்கி சேமிப்புகளைத் திருட முடியும், சட்டங்களை வளைக்க முடியும் என்பதற்கு அதானியும் அம்பானியும் சான்று கூறுகிறார்கள்.
இந்தியத் தரகு முதலாளிகளாகட்டும், பன்னாட்டு முதலாளிகளாகட்டும், இவர்கள் தொழில் தொடங்குவதற்கு சாலை, மின்சாரம், கடன் எல்லாம் கொடுத்து, இலாப உத்திரவாதமும் கொடுக்கிறது அரசு. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்து போடப்படும் பிச்சை. சப் பிரைம் நெருக்கடி என்ற திருட்டின் விளைவாக போண்டியாகிப்போன பன்னாட்டு வங்கிகளும் தொழில்களும் தத்தம் நாட்டு அரசாங்கங்களிடம் பிச்சை எடுத்துத்தான் பிழைத்துக் கொண்டன.
உலகத் தொழிலாளர்கள், விவசாயிகளின் மானியத்தில் (அல்லது திருட்டில்) வயிறு வளர்க்கும் முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ஃபோர்ப்ஸ் கட்டுரையாளராகட்டும், நம்மூர் வெங்கய்யா நாயுடுவாகட்டும், விவசாயிகள் சலுகை கோருவதாக இவர்கள் விமரிசிப்பது பின் வாயால் சிரிப்பதற்கு மட்டுமே தகுதியான நகைச்சுவை.
“அதிகமாக உற்பத்தி செய்தால்தான் அதிகமாக நுகர முடியும்” என்கிறார் கட்டுரையாளர். அதிகமாக உற்பத்தி செய்வதன் விளைவு –  பட்டினி என்ற விசித்திரத்தைச் சாதித்திருப்பதே முதலாளித்துவம்தான் என்கின்ற பாலபாடம் கூடத் தெரியாமல் அவர் உளறுகிறார்.
வெங்காயம் முதல் தானியங்கள் வரை அனைத்தையும் விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்யவில்லையா? கிலோ 11 பைசா என்று வெங்காயத்தின் விலை வீழ்ந்ததற்கு யார் பொறுப்பு? இதற்கும் விவசாயிதான் பொறுப்பு என்கிறார் கட்டுரையாளர். சந்தை விலையைக் காட்டிலும் குறைவான செலவில் உற்பத்தி செய்யத் தவறியது விவசாயியின் பொறுப்பாம். இதனால் ஜி.டி.பி. வீழ்ந்து நாட்டு மக்கள் எல்லோரும் ஏழையாகி விட்டார்களாம்.
விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கும்போது, ஜி.டி.பி. வீழ்ந்துவிட்டதாகப் பேசும் மனிதனை, பைத்தியம் என்றோ, இரக்கமற்ற கயவன் என்றோ நீங்கள் கருதலாம். எதுவாக இருந்தாலும், அது, அந்தக் கட்டுரையாளர் மட்டுமல்ல, மோடி அரசும்தான் அதன் பொருளாதார வல்லுநர்களும் கூடத்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
விவசாயத்தில் உற்பத்திச் செலவு அதிகமாவதற்குக் காரணம் சிறுவிகித உற்பத்தியாம். எல்லாவற்றையும் கார்ப்பரேட் பண்ணைகளாக மாற்றினால்தான் விவசாயம் இலாபகரமாக இருக்குமாம். அதாவது, “விவசாயிகளையெல்லாம் விவசாயத்தை விட்டு விரட்டினால்தான், விவசாயம் இலாபகரமாக இருக்கும்” என்பதே கட்டுரையாளர் கருத்து. மோடி அரசின் கருத்தும் அதுதான்.
-சூரியன்
– புதிய ஜனநாயகம், ஜூலை 2017.

கருத்துகள் இல்லை: