அதில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு, சிறை விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டவர், மீடியாக்களிடமும் பேட்டியும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ரூபா சிறைத்துறை டி.ஐ.ஜி. பதவியில் இருந்து மாற்றப்பட்டுவிட, இதற்கு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. மாநில பாஜக இந்த விவகாரத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.
ஆனால், டி.ஐ.ஜி. ரூபா திடீரென்று சசிகலாவின் சிறைக்குள் ரெய்டு நடத்துவதற்கு டெல்லியில் இருந்து கிடைத்த ஆவணமே காரணம் என்று கர்நாடக மாநில போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது… “டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக சில மாதங்கள் முன்பு டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
அப்போது அந்த வழக்கு சம்பந்தமாக மல்லிகார்ஜுன், சுகேஷ் சந்திரா, ரமேஷ் ஜெயின் போன்றவர்களை கைது செய்தபோது, பெங்களூரைச் சேர்ந்த வி.சி.பிரகாஷ் என்பவரிடமும் விசாரணை நடத்தினர் டெல்லி போலீஸார்.
அப்போது வி.சி.பிரகாஷ் டெல்லி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், நான் ஒரு என்.ஆர்.ஐ. நிறுவனம் சார்ந்த தொழில் நடத்தி வந்தேன். அப்போது பிசினஸ்மேன் மல்லிகார்ஜுனுடன் அறிமுகம் ஏற்பட்டது. அந்த மல்லிகார்ஜுன் தமிழ்நாட்டில் அதிமுக பிரமுகர் டி.டி.வி. தினகரனுடன் நெருக்கமானவர் என்று தெரிந்தது. மல்லிகார்ஜுன் எப்போது பெங்களூரு வந்தாலும் நாங்கள் இருவரும் பேசுவோம். எனக்கு பெங்களூரு சிறையில் சில அதிகாரிகள் பழக்கம் என்பதால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருக்கும் நிலையில் அவரைப் பார்க்க சில உதவிகளை செய்து தருமாறு மல்லிகார்ஜுன் என்னிடம் கேட்டார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மல்லிகார்ஜுன் எனக்கு போன் செய்து டெல்லியில் இருப்பதாகவும் அவசரமாக 2 கோடி பணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார். நானும் பல்வேறு நபர்களிடம் பேசி சென்னையில் இருந்து முதலில் 1 கோடி, பிறகு 1 கோடி என்று ஏப்ரல் 15ஆம் தேதியே ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஏப்ரல் 17ஆம் தேதிதான் இந்தப் பணம் தினகரனுக்காகக் கொடுக்கப்பட்டது என்பது எனக்கு தெரியவந்தது என்று பிரகாஷ் வாக்குமூலம் கொடுத்ததாக டெல்லி சாணக்யபுரி ஏ.சி.பி. சஞ்சய் ஷெராவத் ஓர் ஆவணத்தைத் தயார் செய்கிறார்.
இந்த ஆவணம் மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சில வழிகள் மூலமாக கர்நாடக டி,ஐ.ஜி. ரூபாவுக்குப் போகிறது. அதன் பின்னர்தான் அந்த 2 கோடி ரூபாய் சசிகலாவுக்குச் சலுகைகள் வழங்குவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்குமோ என்று ரூபா ‘சந்தேகித்து’ ரெய்டு நடத்துகிறார். ஆதாரம் இருக்கிறது என்று இதை வைத்துதான் ரூபா பேசி வருகிறார். மேலும், வி.சி.பிரகாஷ் என்ற அந்தப் புள்ளி கர்நாடக முதல்வர் சித்தாராமையா, மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரன் போன்ற முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாகவிருப்பதும், கைப்பேசியில் தொடர்புகொண்ட ஆதாரங்களும் ரூபாவிடம் உள்ளதாம். இந்த ஆவணங்களை வைத்து கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பாஜக முயற்சிப்பதாகச் செய்திகள் பரவிவருகிறது.
ஒருபக்கம் கர்நாடகத்தில் தனது அரசியல் எதிரியான காங்கிரஸை வீழ்த்தவும், இன்னொருபக்கம் சசிகலா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கே எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்காக இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படுத்தவும் பாஜக இந்த போலீஸ் பேப்பர்களைப் பயன்படுத்துகிறது என்றும் பேச்சு இருக்கிறது’’ என்று முடித்தனர் கர்நாடக போலீஸ் வட்டாரத்தில்.
இது ஒருபக்கம் என்றால், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுடன் பேசி சிறையில் சசிகலாவுக்குச் சலுகைகள் கிடைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முயற்சி செய்ததாக, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளர்கள் டெல்லி தலைமைக்குப் புகார் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதை திருநாவுக்கரசர் தரப்பு கடுமையாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கான தொடக்கப்புள்ளி டெல்லியில் இருந்து புறப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது போலீஸ் வட்டாரம். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக