புதன், 26 ஜூலை, 2017

பீகாரில் நிதிஷ்குமார் மோடி கூட்டணி ஆட்சி?

Gajalakshmi  Oneindia Tamil  : பிகாரில்  நிதிஷ்குமார் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க  கவர்னரிடம் அனுமதி கேட்பார் என்று நம்பபடுகிறது. . பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களே போதும் எனும் நிலையில், பாஜக-நிதீஷ் கட்சி கூட்டணியின் பலம் 129ஆக உள்ளதால் அவர்களுக்கே ஆட்சியமைக்க கவர்னர் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
அதேநேரம் பாஜக வெளியே இருந்து ஆதரவு அளிக்கும் என்றும் அமைச்சரவையில் இடம் கேட்காது எனவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பாட்னா : பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், சட்டசபையில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் பலம் என்ன என்பதை பார்க்கலாம். ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி விலகாததை அடுத்து முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்து உள்ளார். முதல்வர் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.


பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2015ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58 உறுப்பினர்கள் பலம் கிடைத்தது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 71 எம்எல்ஏக்களும்,
லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிக்கு 80 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரசின் பலம் 27.
ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்கள் தேவை.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில் இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: