வெள்ளி, 28 ஜூலை, 2017

மணல் திருடர்களால் காணமல் போன சோழாவரம் ஏரி!

ந.பா.சேதுராமன் :ம;ணல் திருடர்களால் சென்னைக்கு அருகிலுள்ள சோழவரம் ஏரி மொத்தமாய்ச் சுரண்டப்பட்டிருக்கிறது. காணாமல் போயிருக்கிறது..

.காலியாக இடம் இருந்தால் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்… காய்ந்துகிடக்கும் ஆறு, ஏரி என்றால் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். கரைகளைப் பலப்படுத்தி மராமத்துப் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டியதால், சோழவரம்போலவே பல ஏரிகளும், ஆறுகளும் மேம்பாலத்துக்கு நடுவில் தெரியும் பொட்டல் சாலைகளாகி இருக்கின்றன. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் போன்றவை இப்போது முற்றிலும் வற்றிக்கிடக்கின்றன.
கொள்ளையர்களின் பிடியில் சோழவரம் ஏரி
சோழவரம் ஏரிதான் இப்போது மணல் கொள்ளையர்களின் புகலிடமாகிப் போயிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள இந்த நான்கு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி. இந்தப் பட்டியலில், ‘நான் மட்டுமே 880 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டவன்’ என்று சொல்லிக்கொள்ள சோழவரம் ஏரியிடம் இப்போது எந்த அடையாளமும் இல்லை.
மற்ற மூன்று ஏரிகளும் இதே கதியில்தான் இருக்கின்றன என்றாலும், மணல் திருடர்களுக்குச் சோழவரம் ஏரியில் இருக்கும் தொழில்பாதுகாப்பு பிற ஏரிகளில் இல்லை. சோழவரம் ஏரி, கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் வறண்டுள்ளது.
‘வேதனைப்படுகிறேன்’ ! : கோட்டாட்சியர் 
சோழவரம் ஏரியின் இன்றைய நிலையைப் பார்த்துவர நேரில் சென்றோம். ஏரி இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஏரியைத் தேடிக் கொண்டிருந்தோம். நின்றும், நடந்தும், தேடியும் சோர்ந்துபோன செம்மண் சாலைதான் சோழவரம் ஏரி என்பது பின்னர் தெரிந்தது. கேமராவுக்குள் சுருட்ட முடியாத மறுமுனையில் குவியல், குவியலாக மணலை அடுக்கி ‘தார்பாய்’ போல எதையோ போட்டு மூடி வைத்திருந்தனர். தார்பாய்க்குச் சொந்தக்காரர்கள்தான் மணல் கொள்ளையர்கள் என்பது பொன்னேரி (பொறுப்பு) அம்பத்தூர் கோட்டாட்சியர் அரவிந்தனிடம் பேசிய பின்னரே தெரியவந்தது.சில நாள்களுக்கு முன்னர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மணல் கொள்ளையர்களைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் சார்பில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பொன்னேரி வட்டத்தில் வருகிற சோழவரம் ஏரியின் பலகீன நிலை குறித்து அரவிந்தனிடம் பேசினோம். “சொல்வதற்கே வருத்தமாகவும், வேதனையாகவும்தான் இருக்கிறது. மணல் கொள்ளையர்களை நாங்கள் பலமுறை கையோடு பிடித்து போலீஸில்   ஒப்படைத்திருக்கிறோம். மணலை அள்ளும் கொள்ளையர்கள், இரவு வேளையில் கூட்டமாக வந்து இயந்திரங்களைவைத்து மணலைத் தோண்டி ஓரிடத்தில் குவித்துவிடுவார்கள். அது, வெளியில் தெரியாமல் இருக்க… அதன்மீது தார்பாய் போட்டு மூடிவைப்பார்கள். இதை, நாங்கள் கண்டுபிடித்து… ஆற்றில் இறங்கி அவர்களை விரட்டுவோம். ‘ஆற்றின் கரை எவ்வளவு தூரம் இருக்கும்’ என்று உங்களுக்கே தெரியும்… ஆதலால், வந்தவர்களில் ஒருசிலர்தான் பிடிபடுவார்கள். பிடிபட்ட ஆள்களிலும் சிலர், ‘நான் வரப்பு மேலேதான் நடந்து போய்க்கொண்டிருந்தேன், எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்பார்கள். இயற்கையை அழித்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழத் துடிக்கும் இதுபோன்ற கொடியவர்களை ஜாமீனில் விடமுடியாத பிரிவுகளில் மட்டுமே போலீஸார் கைதுசெய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டது என்றால், அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை உச்சப்பட்சமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து மக்களை வாழவைக்க முடியும்” என்றார். அரவிந்தனின் பேச்சில் இனம்புரியாத சோகமும், வேதனையும் கொப்பளித்தது.
பொறுப்பு ஆட்சியர் பதில்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமுக்குச் சென்றுள்ளதால் தற்காலிக ஆட்சியர் பொறுப்பை முத்து கவனித்து வருகிறார். சோழவரம் ஏரியில் நடக்கும் மணல் கொள்ளை குறித்தும், பொதுமக்கள் கொடுத்த புகார் குறித்தும் அவரிடம் பேசினோம். “மணல் கொள்ளை குறித்து போனில்தான் புகார் கொடுத்திருக்கிறார்கள். பொன்னேரிக்குப் புது வட்டாட்சியர் இப்போதுதான் வந்திருக்கிறார். அவர், மேற்பார்வையில் சோழவரம் ஏரி குறித்த பிரச்னை கவனிக்கப்படும்” என்று முடித்துக்கொண்டார்.
சென்னையின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆந்திரா-தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் ஒப்பந்தம் என்று முதலில் ஆரம்பித்தார்கள். பின்னர், தெலுங்கு கங்கா கூட்டுக்குடிநீர் ஒப்பந்தம் என்று அதன் பெயர் மாறியது. அதற்கும் பின்னர் சத்யசாயி கங்கா குடிநீர்த்திட்டம் என்று அந்தத் திட்டத்துக்குப் பெயர் மாறியது. திட்டங்களின் பெயர்கள்தான் அடிக்கடி மாறியதே தவிர கடைசிவரையில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்தான் கிடைக்கவில்லை. கிடைத்த கொஞ்ச நீரும் நிறுத்தப்பட்டு விட்டது. ஆந்திர அரசோ, “எங்களுக்கே விவசாயத்துக்கு நீர் போதவில்லை, வெய்யிலும் அதிகமாகி விட்டதால் அணைகளே வற்றிப்போய் காய்ந்து விட்டது. எங்களுக்கு வரும் போது நாங்கள் சேமித்துக்கொண்டு உங்களுக்கும் விடுகிறோம்” என்கிறது. இத்தனைக்கும் 2017-ஜனவரியில்தான் சென்னையின் குடிநீர்த்தேவைக்காக ஆந்திர அரசுக்கு ஒரு பெருந்தொகையை தமிழ்நாடு கொடுத்திருந்தது. இப்போது பணமும் போய்விட்டது, நீரும் மறுக்கப்பட்டுள்ளது.
கைவசம் இருக்கும் ஏரிகள் 
நீராதார அடையாளமாக இருந்து வந்த சோழவரம் ஏரியைப்போல் நாம் தக்க வைக்காமல் இழந்ததும், அழிந்ததும் போக, இப்போது தமிழகப் பொதுப்பணித்துறை கைவசம் 18,789 ஏரிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. கிளை வாய்க்கால்கள், 29,484, ஆறுகள் 86, அணைகள் 200 இருப்பதாக அரசின்  மற்றொரு புள்ளிவிபரக் கணக்கு சொல்கிறது. தூர் வாரப்படாத நீர் நிலைகள், பழுது நீக்கம் செய்யப்படாத மதகுகள், ஆறுகளையும், ஏரிகளையும் கூறுபோட்டு விற்ற நிலத்தரகர்கள், நிலத்தரகர்களுக்குத் துணையாக நின்ற அதிகார சக்திகள்… இன்னும் அதையேதான் தொடர்ந்துசெய்கின்றன. பாலாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, தாமிரபரணிபோன்ற பல ஆறுகளின் பெயர்கள் அனைத்து மாவட்டத்திலும் இருக்கிறது. அதாவது அனைத்து மாவட்டத்திலும் அந்த ஆறுகளின் பெயரிலேயே பல ஆறுகள் பாய்கின்றன. தாமிரபரணியின் துணை ஆறுகளாக மட்டுமே  பதினெட்டு ஆறுகள் உள்ளன. கரமணை ஆறு,சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா ஆறு, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு என்று அது பெரிதாய் நீள்கிறது. நம்நாட்டில் 118 மில்லியன் குடும்பங்கள் குடிப்பதற்கு தண்ணீர் பெறும் வசதி இல்லாமல் இருக்கின்றன. மொத்தக் குடும்பங்களில் இந்த எண்ணிக்கை 62 சதவீதம். அதாவது 30 கோடி இந்தியர்கள் தண்ணீரைப் பொதுக்குழாய் மூலமும், பூமியின் அடிக் குழாய் மூலமும் பெறுகிறார்கள்.
மண்சுரண்டலோடு மரங்களும் காலி

சென்னைப் பெருநகர மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் பெரும் பங்காற்றும் ஏரிகள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் உள்ளன. அரசின் புள்ளிவிவரப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மட்டும் 587 ஏரிகளும், ஒன்றிய ஆணையர்கள் கட்டுப்பாட்டில் 649 ஏரிகளும் என மொத்தம் 1,236 ஏரிகள் இருப்பதாகக் கணக்கில் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு வந்த பெருமழையில் 765 ஏரிகள் நிரம்பி உடைப்பெடுக்கும் அளவுக்கு நீர் வழிந்தது. இதில், எறையாமங்கலம், காக்களூர், ராஜபாளையம் உள்பட 66 ஏரிகளில் உடைப்பும் ஏற்பட்டது. 447 ஏரிகளில் 75 சதவிகித நீரும், 24 ஏரிகளில் 50 சதவிகித நீரும் நிரம்பியது. கரை உடைப்பு ஏற்பட்ட ஏரிகளை 15 ஆயிரம் மணல் மூட்டைகளைக் கொண்டு, அன்றைய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையிலான ஊழியர்கள் அடைத்தனர். மீண்டும் அப்படி ஒரு பெருமழை வருமா என்று தெரியவில்லை. ஒருவேளை,  அப்படி ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கான எந்தப் பணிகளும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் நிஜம். வீட்டை உறுதியாகக் கட்டிமுடிக்க ஆற்று மணலைச் சுரண்டுகிறவர்கள், எதிர்கால சந்ததியை நீர் இல்லாமல் சாகடிக்கும் வேலையையும் சேர்த்தே செய்கிறார்கள். மணலோடு ஆற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள தைல மரங்கள் உள்ளிட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் விலைமதிப்பற்ற மரங்களையும் அடியோடு வெட்டி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் இதுதான் நிலை!
vikatan.com

கருத்துகள் இல்லை: