சனி, 29 ஜூலை, 2017

தோழர் திவ்யாவுக்கு கொலை மிரட்டல் பாலியல் இழிவு தொலைபேசிகள் .. டாக்டர் கிருஷ்ணசாமியின் பதில் என்ன?


என் கண்ணில் பட்ட இந்த பதிவையும் பகிர்ந்து நகர்கிறேன்:
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின் பதில் என்ன? கக்கூஸ் பட இயக்குநர் தோழர் திவ்யாவிற்கு கொலை மிரட்டல் விடும், எச்சரிக்கை செய்யும், பாலியல் ரீதியில் இழிவு செய்யும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சில நிமிடங்களுக்கு ஓர் அழைப்பு என்பதாக நிலைமை இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் அழைத்ததாகவும் தகவல் இருக்கிறது. மென்மையாகப் பேசிய அவர், பின்னர் மிகக் கேவலமாகப் பேசியிருக்கிறார்.
என்ன பிரச்சனை?
தேவந்திர குல வேளார் அல்லது பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்களும் மலம் அள்ளும் தொழிலில் இருக்கிறார்கள் என்று கக்கூஸ் படத்தில் பதிவு செய்ததை நீக்க வேண்டும் என்றும், அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசிவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இன்றைய நிலையில் பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் மலம் அள்ளும் வேலையில், வறுமையின் காரணமாக, மிகக் கொடூரமான நிலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறகிறார்கள் என்ற சமூக யதார்த்தத்தை கக்கூஸ் படம் பதிவு செய்திருந்தது. இந்த அவலத்தை நீக்க அரசு கொண்டுவந்த சட்டத்தை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
எந்த மானுடரையும், சாதிப்பிரிவையும் இழிவு செய்யும் நோக்கில் படம் இல்லை. மாறாக, மானுடத்தின் மகோன்னதத்தைக் காக்க வேண்டும் என்ற ஆவேசம் படத்தில் இருந்தது.
முதலில் டாக்டர் கிருஷ்ணசாமி திவ்யா மீது வழக்குத் தொடுக்கப் போகிறார் என்ற கோணத்தில் செய்திகள் வெளிவந்தன. அவருக்கு ஆதரவானவர்கள் அந்த செய்தியைச் சமூக ஊடகங்களில் பரப்பினர்.
இப்போது அவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் தொலைபேசியில் மிரட்டுவது, இழிவுபடுத்துவது, பெண் என்ற முறையில் கேவலப்படுத்துவது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சமூக ஊடகங்களிலும் இதுபோன்ற வேலை நடப்பதைப் பார்க்க முடிகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி தனக்கும் மேற்சொன்ன குற்றச் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை என்று அறிவிப்பாரா? அவரின் கட்சியினரைக் கட்டுக்குள் கொண்டு வருவாரா?
என்ன செய்யப் போகிறார் புதிய தமிழகத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி?
- சி.மதிவாணன் Mathi Vanan (மதுரை- தேனி மாவட்ட குழு சார்பாக)


Lulu Deva Jamla :*வார்த்தை வன்கொடுமைகள்*
தோழர் திவ்யபாரதி ஒரு பெண் என்பதால் மட்டுமே இத்தகைய வார்த்தை வன்கொடுமைகள், இணைய நிர்வாணப்படுத்தல் ஆகிய ஆதிக்க அடக்கு முறைகள் அவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இது அவரது மன உறுதியை குலைத்து, தன் போராட்ட பாதையில் நின்று பின் வாங்க வைக்க முயலும் ஈனத்தனமே அன்றி வேறில்லை! நிச்சயமாய் அது வெற்றியடையாது!
சாதி என்னும் சுய மலத்தை மூன்று வேளைகளும் தின்று பசியாறிக் கொண்டிருக்கும் இந்த ஆதிக்க வெறியர்களுக்கு சாதிய அரசியல் கொடுக்கும் போதையால் மூளை மழுங்கி விட்டது! அப்படி இல்லையெனில் இத்தகைய இழி செயலை செய்யத்துணிந்திருக்க மாட்டார்கள்!
தங்களின் சுயபோகத்திற்காய் பெற்ற தாயையும் அடகு வைத்துவிடும் ஈனர்கள் இவர்கள்! எனவே சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராய் உள்ள அடக்குமுறைகளை தோலுரித்து காண்பித்து, எதிர்வினை ஆற்றுவதால் நானும் வார்த்தை வன்புணர்வுகளுக்கு தொடர்ந்து ஆளாகி கொண்டிருப்பவள் என்ற முறையில் தோழர் திவ்யபாரதியை போன்று சமூக நீதிக்காய் களம் இறங்கியிருக்கும் பெண் சிங்கங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
தோழர்களே, நம் போராட்ட களத்தில் வரும் தடைகளை தாண்டியும் அடித்து நொறுக்கித் தள்ளியும் பயணிப்பதற்கு தேவை நமது மன உறுதி மட்டுமே! மனந்தளராமல் தொடர்ந்து அடித்தால் மட்டுமே இத்தகைய அடக்குமுறையாளர்களை எதிர்கொண்டு வெல்ல முடியும்!
அடங்க மறுப்போம்! அத்து மீறுவோம்! துணிந்து நிற்போம்! தடைகளை உடைப்போம்! திருப்பி அடிப்போம்! துரத்தி விடுவோம் இந்த வன்முறையாளர்களை!
அலைபேசியிலும் முகநூலிலும் வரும் ஆபாசத்தை கடக்க நம் மனதில் ஒரே ஒரு எண்ணம் இருந்தால் போதும்: என் நிர்வாணம், என்னை ஒருபோதும் அசிங்கப் படுத்தாது! என் அந்தரங்க உறுப்புக்கள் என் பெருமை! பாலியல் ரீதியான குற்றவுணர்வு எனக்கில்லை! என் உடலின் மேல், என் மனதின் மேல் என் அனுமதி இன்றி எந்த கொம்பனுக்கும் ஆதிக்கம் செலுத்த அதிகாரம் இல்லை! என்னை அவமானப்படுத்த ஒருபோதும் இந்த விசைப்பலகை போர் தொடுக்கும் இழிபிறவிகளுக்கு இயலாது!
உங்கள் ஒடுக்குமுறைகளை கண்டு நான் எள்ளளவும் அஞ்சவில்லை! நிதானமிழக்கவில்லை! ஏனெனில் என்னைத் தவிர வேறு எவராலும் என் மனதை பாதித்து விட முடியாது! எங்களின் செயல்பாடுகள் உங்களை பதற்றமடைய செய்து விட்டது என்பது கண்கூடாய் தெரிகிறது! என்னைத் தாக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நேர விரயம் என உரத்து கூறி கடந்து செல்வோம்! நாம் சாதிக்க வேண்டியது இன்னும் பல! உதாசீனம் என்னும் ஆயுதம் இந்த போராட்டத்தில் கைகொடுக்கும்!
செல்வோம்! வெல்வோம்! சமூக நீதி நமது பிறப்புரிமை! அதை ஆதிக்க சக்திகளிடமிருந்து அடித்துப் பிடிங்குவோம்!
உங்களுடன்,
லுலு தேவ ஜம்லா
29/07/2017

கருத்துகள் இல்லை: