வெள்ளி, 28 ஜூலை, 2017

BBC :பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்! கறுப்பு பண விவகாரம்!

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம் சேர்த்தார் என்றும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், எஜாஸ் ஹசன், எஜாஸ் அஃப்சல், சயீத் ஷேக், ஆசிஃப் சயீத் கோசா மற்றும் குல்ஜார் அகமத் ஆகியோர் அடங்கிய ஐந்து உறுப்பினர் சட்ட அமர்வு நவாஸ் ஷெரீஃப் குற்றம் செய்திருப்பதாக தீர்ப்பு வழங்கியது. கோசா மற்றும் குல்ஜார் அகமத் ஆகிய இருவரும் பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தின் முதல்கட்டத்திலேயே நவாஸ் ஷெரீஃப் குற்றவாளி என்று கூறிவிட்டார்கள். இருந்தாலும், மீதமுள்ள மூன்று நீதிபதிகளும் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர். தற்போது நவாஸ் ஷெரீஃப் தவறிழைத்ததாக ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளனர். நவாஸ் ஷெரீஃப் தவிர அவரது மகள் மற்றும் மருமகனும் தவறிழைத்திருப்பதாக நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு இந்த விவகாரத்தில் ஆரம்பக்கட்ட தீர்ப்பு ஜூலை பத்தாம் தேதி வழங்கப்பட்ட பிறகுதான் கூட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான டெஹ்ரீக் ஈ இன்சாப் தலைவர் இம்ரான் கான் பனாமா வழக்கில் மனுதாக்கல் செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த இம்ரான் கான், இந்த வழக்கில் கூடிய விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

பனாமா ஆவணங்கள் என்றால் என்ன?
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்து வெளியானதையடுத்து, உலகின் அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் எப்படி தங்கள் செல்வத்தைப் பதுக்க, வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

பல நாடுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் அரச தலைவர்கள் 72 பேர் தொடர்புடைய ஆவணங்கள் அப்போது வெளியாகி இருந்தன. சட்ட நிறுவனமான மொசாக் ஃபொன்சேகாவிலிருந்து கசிந்த ஆவணங்களில், பாகிஸ்தான் பிரதமரின் மகன்கள் ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ் மட்டுமல்லாது அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோருக்கு வெளிநாடுகளில் வரி ஏய்க்க உதவும் நிறுவனங்களுடன் இருந்த தொடர்பு பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அவர்கள் குவித்த சொத்துகளுக்கான ஆதாரங்கள் மீது கேள்விகள் எழுந்தன. ஆனால், பனாமா ஆவணங்களில் பிரதமரின் பேர் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆவணங்கள் வெளியான பின்பு, எதிர்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப்க்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை தொடுத்தார்.

1990 களில் நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த போது அந்த பதவியை பயன்படுத்தி அவரது குடும்பம் சட்டத்தை உடைத்து அதன் மூலம் பலன் பெற்றதாகவும் கூறினார். இதன் பின்னர் எதிர்க்கட்சி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது; பாகிஸ்தான் ஊடகங்களால் பனாமாகேட் என்று குறிப்பிடப்பட்ட அந்த வழக்கை விசாரிக்கவுள்ளதாகவும் அறிவித்தது. 2017-ம் ஆண்டில் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான விசாரணையை தினந்தோறும் நடத்தியது. அந்த நேரத்தில், பிரமரின் குற்றங்களை நீதிமன்றம் கண்டறிந்து அவரை பதவி நீக்கம் செய்யுமா என்பது போன்ற யூகங்கள் அதிகமாக நிலவின.

ஆனால், ஐந்து நீதிபதிகளைக் கொண்டிருந்த விசாரணை அமர்வானது இரண்டு பிளவுபட்ட தீர்ப்புகளை ஏப்ரல் 20-ம் தேதி அறிவித்தது, இரண்டு நீதிபதிகள் பிரதமருக்கு எதிராகவும், மூன்று நீதிபதிகள் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதன் விளைவாக கூட்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு குடும்பத்தின் சொத்து சார்ந்த 13 சிக்கலான கேள்விகளுக்கான பதில்களை 60 நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் விசாரணைக் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆஜரானார். பதவியில் இருக்கும் போதே விசாரணைக் குழு முன்பு ஆஜரான முதல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில், இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், ஷெரீஃப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இன்னும் 6 வார காலத்திற்குள் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவருடைய பிள்ளைகளுக்கு எதிராக வழக்கு பதியும்படி தேசிய கணக்கியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பி டி ஐ முகமை கூறியுள்ளது. பாகிஸ்தானின் கடந்தகாலத்தில், பர்வேஸ் முஷாரப் ஆட்சியை கவிழ்த்தபோது, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியிலிருந்து விலகியதுடன், நாட்டை விட்டும் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: