வியாழன், 27 ஜூலை, 2017

ஜேஎன்யுவில் பீரங்கி: இந்திய பல்கலைக் கழகங்கள் மீது போர் ! அதே பீரங்கி யார் கைகளிலாவது சென்று விட்டால்?

thetimestamil : கார்கில் தினத்தை நினைவுகூரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேஎன்யு துணை வேந்தர், ஜேஎன்யுவுக்கு தற்போது பயன்பாட்டில் இல்லாத ராணுவ பீரங்கிகள் வாங்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு தேஜமு அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மாணவர் மத்தியில் ராணுவத்தின் மீதான பற்றை வளர்த்தெடுக்க அது போன்ற ஒரு பீரங்கி தேவை என்று அவர் சொன்னார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர், ஜேஎன்யுவை கைப்பற்றியதற்காக தற்போதைய அரசாங்கத்தை பாராட்டியதுடன் அடுத்து மற்ற பல்கலை கழகங்களையும் கைப்பற்றுவது பற்றி பேசினர்.

ஜேஎன்யுவில் நடந்த இந்த அரசியல் நிகழ்ச்சி, இன்றைய அரசாங்கமும், அரசியல் நோக்கத்துடன் அதனால் நியமிக்கப்பட்டவர்களும், அவர்களை பின்தொடர்பவர்களும் இந்திய பல்கலை கழகங்களுடன் தாங்கள் போரிடுவதாக கருதுகிறார்கள். சங் பரிவாரின், பாஜகவின் வழியை பின்பற்ற பல்கலை கழகங்கள் இது வரை செயல்துடிப்புடன் மறுத்துவிட்டன என அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.
எல்லாவிதமான அரசாங்கங்களிடமும் உண்மையை பேசும் வரலாறு கொண்ட, இந்த பல்கலை கழகங்களும் அவற்றின் மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போதைய அரசாங்கத்திடம் துணிச்சலான கேள்விகள் எழுப்புவதில் இந்திய மக்களை வழிநடத்துகிறார்கள்.
ஆசிரியர்களையும் மாணவர்களையும் அறிவுபூர்வமான வாதங்களுடன் அல்லது கல்வி கொள்கைகளுடன் எதிர்கொள்ள முடியாமல், பல்கலை கழகங்களை பலவந்தப்படுத்தி கைப்பற்றி ஆக்கிரமிக்க வேண்டும் என்று சங் பரிவாரும் பாஜகவும் கருதுகின்றன. அவர்களது எபிவிபி படை வீரர்களை சாதாரண மாணவர்கள் மீது, ஆசிரியர்கள் மீது ஏவிவிடுவதன் மூலம், இப்போது கல்வி வளாகங்களில் பீரங்கிகளை நிறுத்தும் முன்வைப்புகள் மூலம், அவர்கள் இதைச் செய்கிறார்கள்.
ராணுவ வீரர்கள் நமது மரியாதைக்குரியவர்கள். ஆனால், அரசாங்கம் பற்றி, போர்களுக்கான தேவை பற்றி, நாட்டின் பாதுகாப்பு படைகளும் காவல் துறையினரும் சாமான்ய மக்களிடத்தில் நடந்துகொள்ளும் விதம் பற்றி, சாமான்யர்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்பது ராணுவ வீரர்களை மதிப்பதற்கு, முன்நிபந்தனை ஆகாது. உண்மையில், உலகம் முழுவதும், அரசாங்கங்கள் நடத்தும் போர்களுக்கு எதிராக சாமான்ய குடிமக்கள் குரல் எழுப்புவதன் மூலம் போர்வீரர்கள்பால் அவர்கள் கொண்டுள்ள மரியாதையையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறார்கள்.
பல்கலை கழகங்கள், படைவீரர்களையோ அல்லது அணிவகுப்பில் சல்யூட் அடித்துக் கொண்டு நடந்து செல்லும் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களையோ உருவாக்கும் நோக்கம் கொண்டவையல்ல.
விவரமறிந்த, கேள்வி எழுப்புகிற, எதிர்ப்பு தெரிவிக்கிற குடிமக்களை உருவாக்குவதுதான் பல்கலை கழகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமை. எதிர்ப்பு தெரிவிக்கிற தனது மாணவர்களை மட்டம் தட்டி, அவர்கள் வாயை அடைக்க முனைவது, ஒரு துணை வேந்தர் தனது சொந்த கடமையில் இருந்து அவமானகரமான விதத்தில் தவறுவதாகும்.
ஜேஎன்யு வளாகத்தில் பீரங்கி வேண்டும் என்கிற முன்வைப்பு ஜேஎன்யு துணை வேந்தரின் வெறும் விருப்பம் என்று மட்டும் கருதிவிட முடியாது. சில நாட்களுக்கு முன்பு நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ராணுவ பள்ளி முறையில், அதாவது, ஒழுக்கம், தேசப்பற்று ஆகியவற்றின் ராணுவ மாதிரியில் நடத்த வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு விடுதலைப் போராட்டத்தை கீழ்படிதல்மிக்க, ஒழுக்கமான ராணுவம் நடத்தவில்லை, அது சாமான்ய, வரையறைகளுக்கு உட்படாத, வாதங்கள் செய்கிற, காலனிய ராணுவத்துக்கு எதிராகப் போராடிய போர்வீரர்கள் உள்ளிட்ட இந்தியர்களால் நடத்தப்பட்டது என்பதை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
அந்தப் போரில் சங் பரிவாரும் இந்துத்துவா கருத்தியலாளர்களும் ஈடுபடவில்லை. சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டார்; கோல்வால்கரும் ஹெக்டேவரும் நாட்டு விடுதலை போராட்டத்தை, பகத்சிங் போன்ற தியாகிகளை, மூவர்ணக் கொடியை, இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
காலனிய அதிகாரத்துக்கு எதிரான இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை இழிவாகப் பேசிய அவர்கள் காலனிய சக்திகளுக்கு அடங்கிப் போக வேண்டும் என்று சொன்னார்கள்; இசுலாமியர் மீதான வெறுப்பை தேசப்பற்று என்று வரையறுத்தார்கள். ஜனநாயகத்தை, எதிர்ப்பை, பன்மைதன்மையை அவமதிக்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என, இன்றும் சங் பரிவாரும் பாஜகவும் விரும்புகின்றன. அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது, இசுலாமியர்களை, பிற ஒடுக்கப்பட்ட இந்திய மக்கள் பிரிவினரை வெறுப்பது என்ற கலாச்சாரத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன.
பீரங்கிகள், கொடிகள், ராணுவமயப்படுத்தப்பட்ட பள்ளிகள் ஆகியவை மீது தற்போதைய அரசு கொண்டுள்ள விடாப்பிடியான விருப்பம், கல்வி உரிமை மீது அது கடுமையான தாக்குதல் தொடுக்கும் நேரத்தில் வெளிப்படுகிறது. நாட்டின் அரசுப் பள்ளிகளுக்கு திட்டமிட்டவிதத்தில் உள்கட்டுமானமும் நிதியும் மறுக்கப்பட்டு, கூடுதல் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு செயற்கையான, திணிக்கப்பட்ட தேவை உருவாக்கப்படுகிறது.
ஜேஎன்யு போன்ற மிகச்சிறந்த பல்கலை கழகங்களில் ஆய்வு படிப்புகளுக்கான இடங்கள் வெட்டப்படுகின்றன. ஆய்வு படிப்புகளுக்கான உதவித் தொகையும் மறுக்கப்படுகிறது. அதே நேரம், பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் உள்ள விஞ்ஞானபூர்வ, பகுத்தறிவு அடிப்படையிலான ஜனநாயக உள்ளடக்கத்துக்குப் பதிலாக இந்து மேலாதிக்க புனைவுகள் வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கிறது. இந்தியாவின் இளைய தலைமுறை நல்ல பள்ளி மற்றும் உயர்கல்வி பெறும் அதன் அடிப்படை உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலை மூவர்ணக் கொடிகளின் குவியலில் மறைத்துவிட முடியுமா? கல்வி மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு எழுவதை, கல்வி வளாகங்களில் பீரங்கிகளை நிறுவுவதன் மூலம், அச்சுறுத்திவிட முடியுமா? அழித்துவிட முடியுமா? வரலாறு வேறு விதமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது.
ராணுவப் பள்ளியில் படித்த சந்திரசேகர் பிரசாத், ராணுவ ஒழுங்கை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிந்து போகிற பொருளாக மாறவில்லை. ராணுவ அணிவகுப்பில் நடப்பதற்கு பதிலாக, தனது மனசாட்சிக்கு ஏற்றபடி நடப்பதையே தேர்ந்தெடுத்தார்; மாணவர் செயல்வீரரானார்; கம்யூனிஸ்ட் அமைப்பாளரானார்; இந்தியாவின் இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் முன்மாதிரியானார்.
ஆசியாவிலும் தெற்காசியாவிலும் இருக்கும் மாணவர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க பீரங்கிகளை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட வரலாறு கொண்டவர்கள். 1971ல் பாகிஸ்தான் ராணுவ தலைவர் யாஹியா கான் ஆபரேசன் தேடுதல் ஒளிக்காக அறிவாளிப் பிரிவினரை வேட்டையாட படுகொலை செய்ய டாக்கா பல்கலை கழகத்துக்குள் பீரங்கிகளை கொண்டு வந்தார்.
சீனத்தின் மாணவர்கள் தியானன்மன் சதுக்கத்தில் பீரங்கிகளை எதிர்கொண்டது மாணவர் இயக்கத்தின் புகழ்மிக்க வரலாறு. ஜேஎன்யு துணை வேந்தருக்கும் அவரது நண்பர்களுக்கும் வரலாற்றுப் பாடம் ஒன்றை படிப்பது அவசியம். பல்கலை கழகங்களை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் வரலாற்றில் தோல்வி கண்டிருக்கின்றன; ஏனென்றால், இளைய, மனசாட்சி கொண்ட, லட்சியம் கொண்ட, துணிச்சலான மக்களின் மனங்களை ஆக்கிரமிப்பது அவ்வளவு எளிதல்ல.
#பிரெக்ட்டின் கவிதை ஒன்று சொல்கிறது:
ராணுவ தலைவரே, உங்கள் பீரங்கி ஒரு சக்தி வாய்ந்த வாகனம்
அது காடுகளை அழித்துவிடுகிறது நூறு பேரை நசுக்கி விடுகிறது.
ஆனால் அதில் ஒரு பழுது இருக்கிறது.
அதற்கு ஓர் ஓட்டுநர் தேவைப்படுகிறது.
ராணுவ தலைவரே, மனிதன் மிகவும் பயன்மிக்கவன்.
அவனால் பறக்க முடியும். அவனால் கொலை செய்ய முடியும்.
ஆனால் அவனிடம் ஒரு பழுது இருக்கிறது.
அவனால் சிந்திக்க முடியும்.
சிந்திக்கும், கேள்விகள் கேட்கும் மனித மனத்தின் ஆற்றலை கூர்மைப்படுத்துவதுதான் பல்கலை கழகங்களின் பணி.
மாணவர்களின் சிந்திக்கும் மனதை ஒரு பீரங்கி நிறுவி அச்சுறுத்திவிடலாம் என்று கருதும் எந்த துணை வேந்தரும் தோல்வியே காண்பார்

கருத்துகள் இல்லை: