வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு திமுகவை வசைபாடுவது அறியாமையின் வெளிப்பாடு . கிருபா முனிசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்!

ஜல்லிக்கட்டு போராட்ட குரல்களில் ஒன்றாக தி.மு.க.வையும், ஸ்டாலினையும் வசைபாடுவதை கேட்க நேர்கிறது.
போராட்ட நோக்கத்தின் பின்னணியும், அரசியலும் தெரிந்துக் கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடே இது!
தமிழக அரசு ஒருபோதும் ஜல்லிக்கட்டிற்கு எதிராக இருந்ததே கிடையாது. அதுவும் குறிப்பாக தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசுக்கு எதிராக "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009" சட்டத்தை இயற்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சவால் விடுத்தது. அதன் அடிப்படையிலேயே 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தமிழ்நாடு அரசே ஜல்லிக்கட்டை எடுத்து நடத்தியது.
அப்படியாக தி.மு.க. அரசு கொண்டுவந்த "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009" சட்டத்தை அகற்ற கோரியே 'பீட்டா' அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.
உண்மையிலேயே அவர்கள் குற்றம்சாட்ட வேண்டுமானால், தி.மு.க.விற்கு பிறகு ஆட்சிக்கு வந்து ஜல்லிக்கட்டை நடத்தாத ஜெயலலிதாவின் ஆ.தி.மு.க. ஆட்சியையே குறைக்கூற வேண்டும்!

அதைவிடுத்து, இந்த ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணியை பற்றி எதுவும் தெரியாமல் வெறுமனே யாரோ ஒருவரை சாடி பேசுகிறார்கள். அதன் உண்மைத்தன்மையை பகுத்தறியாமல் கூடியிருப்பவர்களும் கைத்தட்டுகிறார்கள். இப்படியாகவே இளைஞ, இளைஞிகள் மத்தியில் தவறான அரசியல் கருத்துகள் பரப்பப்படுகின்றன.
இதுபோன்ற அரசியல் உள்வாங்காத பல்லாயிரக்கணக்கான இளவயதினர் சமூகத்தின் கட்டமைப்பை பற்றி எதுவுமறியாது இடஒதுக்கீட்டிற்கு எதிராக 'சமத்துவத்திற்கான இளைஞர்கள்' (Youth For Equality) என்று அன்னா ஹசாரே தலைமையில் ஒன்றுகூடினார்கள். ஆனால், இன்று அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எப்படி சமூக நீதிக்கெதிரான அரசியல் நிலைப்பாட்டோடு சிதறுண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, போராட ஒன்றுக்கூடுவோரின் அரசியல் புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
குறிப்பு: நான் தி.மு.க. உறுப்பினரோ, ஆதரவாளரோ இல்லை. எனக்கு தி.மு.க. மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் உண்டு.  .. முகநூல் பதிவு கிருபா முனுசாமி

கருத்துகள் இல்லை: