வெள்ளி, 20 ஜனவரி, 2017

1965 இல் இந்தி பேயை விரட்டிய வீரம் மீண்டும் வந்தது பாரீர் வீறு கொண்டெழுவதை பாரீர்


மின்னம்பலம்: தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை அண்ணாநகரில் இருந்து, கோயம்புத்தூரில் இருந்து ஜல்லிக்கட்டு நடக்கிற அல்லது நடக்காத பகுதிகள் என்று இல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த எல்லாப் பகுதி இளைஞர்களும், தமிழ் கலாசாரத்தின், பாரம்பரியத்தின் அடையாளமாகிய ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற குரல் எழுப்பி எழுந்திருக்கிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாத இடத்தில் ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரவென்றும், பகலென்றும் பாராமல் திரண்டு, தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் முன்னின்று நடத்தவில்லை. தன்னெழுச்சியாக இந்தப் போராட்டம் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. மிக விரைவாக சிற்றூர்களுக்குக்கூட பரவி வருகிறது.

மாணவர்கள் போராட்டம் என்று சொல்லும்போதே தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழகத்தில் நடந்த மறக்கமுடியாத வரலாற்று மாணவர் போராட்டம் என்பது இந்தி எதிர்ப்புப் போராட்டம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் தொடக்கத்தில் அரசியல் கட்சியை சாராத தனி அமைப்பாகத்தான் போராடினார்கள். அந்தப் போராட்டத்துக்கு வெளியிலிருந்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தந்தது. இந்தி எதிர்ப்பில் திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்டுகளும்கூட அந்த காலக்கட்டத்தில் முனைப்பாக இருந்தார்கள். ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரிய மாணவத் தலைவர்கள் பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிய காரணத்தால் அந்தப் போராட்டம்கூட ஏறக்குறைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டம்போல தோற்றம் பெற்றது. இருந்தாலும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது முழுக்க முழுக்க மாணவர்களின் போராட்டம்தான். இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியக் குடியரசு உருவான 13 ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. குடியரசாக மலர்ந்த இந்தியாவில் முதன்முறையாக கூட்டாட்சி தத்துவத்துக்கு வலுச்சேர்க்கவேண்டுமே அல்லாது, குவிக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய நடுவண் அரசு இருக்கக் கூடாது என்பதற்காக நடந்த வலிமைமிக்க சித்தாந்தப் போர் இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1963ஆம் ஆண்டு ‘இந்தியா முழுவதும் இந்தி என்ற ஒரே மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் விலக்கிக் கொள்ளப்படும் என்றும், இந்திய அரசுப் பணிகளின் தேர்வுகள் அனைத்தும் இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே இருக்கும்’ என்றும் வெளியான சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம். அந்தப் போராட்டம், அந்த காலக்கட்டத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஐக்கிய நாடுகள் சபை அரை மணிநேரம் அந்தப் போராட்டத்தை விவாதித்தது. அந்தப் போராட்டம் ஏறக்குறைய முழு வெற்றியை அடைந்தது என்றே சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் இந்திய ஆட்சிப் பணிக்கு 14 மொழிகளிலேயே தேர்வு எழுதலாம் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை தொடர்ந்து ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற உறுதியும் தரப்பட்டது.
எங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம் தனிச் சொத்து மற்றும் அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலில், மனித வரலாற்றில் மனிதன் தன்னையும் தன்னுடைய சொத்துகளையும் பாதுகாப்பதற்காக எப்படி குழுக்களாக அமைந்து, குடும்பம் என்ற நிறுவனம் ஏற்பட்டு, அரசுகள் அமைந்தன என்பதைச் சொல்லியிருப்பார். பொதுவாக, அரசு என்ற அமைப்பின் சட்டங்களுக்கு ஒரு மனிதன் கட்டுப்படுவதற்குக் காரணம் தன்னுடைய பொருளுக்கும் வாழ்க்கைக்குமான பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கைதான். நவீன, அறிவுசார்ந்த சமூகத்தில் நாடு என்ற தத்துவத்தின் கடமை ஒரு மனிதனுக்கான உணவைக் கொடுப்பதுடனும் அல்லது பாதுகாப்பை கொடுப்பதுடனும் முடிந்துவிடாது. அதைத்தாண்டி, அந்த மனிதனுடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் அவனுடைய மதத்தையும் அவனுடைய மொழியையும் காக்க வேண்டியது அரசு என்ற அரசியல் அமைப்பின் கடமையாக இருக்கிறது. பல மொழிகள் பேசும், பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்கிற ஒரு நாட்டில், அந்த நாட்டின் பன்முகத்தன்மையை காக்கிற அரசாக இருந்தால் மட்டுமே அந்த அரசு நிலைக்க முடியும். நம்முடைய காலக்கட்டத்திலேயே இதற்கான படிப்பினையை நாம் பெற்றிருக்கிறோம்.
1922ஆம் ஆண்டு மனித வரலாற்றின் மிக முக்கியமான புரட்சியாகிய ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு தோன்றிய சோவியத் யூனியன் என்ற அரசியல் அமைப்பு 69 ஆண்டுகளில் உடைந்து, சுக்குநூறாகிப் போனது. 1991ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் நாள் கிரெம்ளின் மாளிகையில் இருந்த சோவியத் கொடி இறக்கப்பட்டு, ருஷ்யக் கொடி ஏற்றப்பட்டது. சோவியத் யூனியன் 15 நாடுகளாக துண்டாகிப் போனது. சோவியத் யூனியன் துண்டாகிப் போனதற்கான காரணங்களில் முக்கியமான ஒரு காரணம், குவிக்கப்பட்ட அதிகாரத்தோடு மாஸ்கோவில் இருந்து நடத்தப்பட்ட மத்திய ஆட்சிதான். சோவியத் குடியரசுகளுக்கான தன்னாட்சி அதிகாரம் முழுமையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக, ரஷ்ய மொழித் திணிப்பு என்பது சோவியத் யூனியனில் இருந்த பல்வேறு உறுப்பு நாடுகளை ஆத்திரமடையச் செய்தது. கசாகிஸ்தான் நாட்டில் இருக்கிற அல்மாட்டி நகரில் கசாக் நாட்டின் தேசிய நூலகம் இருக்கிறது. நான் அந்த நூலகத்துக்குச் சென்றிருந்தேன். அந்த நூலகத்தில் 1990ஆம் ஆண்டுக்கு முன்பு 30 இலட்சம் ருஷ்ய புத்தகங்கள் இருந்தன. சோவியத் யூனியன் உடைந்து, கசாகிஸ்தான் என்ற நாடு தோன்றியபிறகு, அந்த 30 இலட்சம் புத்தகங்களும் ருஷ்ய மொழியில் இருந்து கஸாக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் அந்த 30 இலட்சம் ருஷ்ய மொழிப் புத்தகங்களும் எரியூட்டப்பட்டன. ரஷ்ய மொழித் திணிப்பு எத்தகைய ஆத்திரத்தையும் கோபத்தையும் கஸாக் மக்களுக்கு கொடுத்திருந்தது என்பதற்கான உதாரணம் இது. மிகப்பெரிய கனவாகத் தோன்றி, உலகில் இருந்த இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக இருந்த சோவியத் யூனியன் உடைந்து, இன்றைக்கு ஒரே வல்லரசாக அமெரிக்கா இருப்பதற்கான பின்னணி இதுதான்.
1783ஆம் ஆண்டு உருவான ஐக்கிய அமெரிக்க குடியரசு நாடு 13 உறுப்பு நாடுகளுடன் உருவானது. இன்றைக்கு 50 உறுப்பு நாடுகளுடைய நாடாக மேலும் வளர்ந்து உலகத்தின் ஒரே வல்லரசாக மாறி இருப்பதற்கான காரணம், பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்புதான். அமெரிக்கா என்றுமே தனி மனித உரிமையை பாதுகாக்கிற நாடாக விளங்குகிறது. இன்றைக்கு அமெரிக்காவின் உறுப்பு நாடுகளாக இருக்கிற மாகாணங்கள் முழுமையான தன்னாட்சி பெற்றவை. இந்த ஒவ்வொரு மாநிலமும் 1778ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தின்கீழ் சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம். அந்த அடிப்படையில், ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்கும் மிகப்பெரிய அளவில் சட்ட வேறுபாடுகள் உண்டு. ஒரு மாநிலத்தில் மரண தண்டனை உண்டு, இன்னொரு மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது என்றளவுக்கு மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு. பிராந்திய வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, மாகாணங்களின் பன்முகத்தன்மையை மதிக்கிற காரணத்தால்தான் அமெரிக்க ஐக்கிய குடியரசு நாடு இன்னும் பல நூற்றாண்டுகள் ஸ்திரத்தன்மையோடு, தன்மையோடு விளங்கும் என்கிற அமைப்பாக இருக்கிறது. அமெரிக்காவைப் பொருத்தவரை முழுவதும் ஆங்கிலம் பேசும் நாடு அல்ல. மாறாக, அங்கே ஸ்பானிஷ், பிரன்ச் மொழிகள் மிக அதிகமாக பேசப்படுகின்றன. பெரிய அளவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் இருக்கிறார்கள். இந்தி பேசும் மக்களும் இருக்கிறார்கள். அமெரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகள் ஆங்கிலத்திலும், ஸ்பானிஷிலும், பிரென்ச்சு மொழியிலும், ஜெர்மனியிலும், தமிழிலும், இந்தியிலும், தெலுங்கிலும் இருப்பதைப் பார்க்கலாம். இப்படி பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அதைப் பாதுகாக்கிற ஒரு அரசியல் அமைப்பாக இருக்கிற காரணத்தால்தான் அமெரிக்கா வலிமையான நாடாக விளங்குகிறது இன்னும் நீண்டநாள் விளங்கும்.
இந்தியக் குடியரசு உண்டானபோது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ ‘Unity in Diversity’ என்பதை நேரு முன்னிறுத்தினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்புப் போராட்டம் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சித்தாந்தத்துக்கு நேர் எதிராக இந்தித் திணிப்பு நடந்தபோது, அதை எதிர்த்து வெற்றி கண்டு சாதனையைப் படைத்தது. ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒரு நடவடிக்கையே. நேருவுக்குப் பிறகு இந்திராகாந்தியும் சரி, இராஜிவ்காந்தியும் சரி, பாரதிய ஜனதா கட்சியும் சரி அதிகாரப் பரவலுக்கு எதிரானவர்களாக கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவர்களாக, இன்னும் சொல்லப்போனால் நடுவண் அரசை இன்னும் வலிமையாக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்திராகாந்தியின் ஆட்சிக் காலம் என்பது மிக வலிமையான மத்திய அரசை அமைப்பதற்கான தொடக்கமாக இருந்தது. இராஜிவ்காந்தி தன் ஆட்சிக் காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்மூலம் அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த நிர்வாக அமைப்பில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் நேரடியாக நடுவண் அரசின் காட்டுப்பாட்டில் இயங்கும் என்ற தவறான ஷரத்து இருந்த காரணத்தால் பல மாநில அரசுகள் அதை ஏற்கவில்லை. அது அதிகாரப் பரவலுக்கான உண்மையான படிக்கட்டாக இருக்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாகவே இந்தியாவை எல்லா அதிகாரமும் கொண்ட குடியரசுத் தலைவர் ஆட்சி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிற கட்சி. பாரதிய ஜனதா கட்சி பன்முகத்தன்மையை விரும்பியதில்லை என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த 67 ஆண்டுகளில் நடுவண் அரசு தொடர்ந்து பலம் வாய்ந்ததாக மாறிக்கொண்டே இருக்கிறது. உலகமயமாக்கலுக்கும், தனியார் மயமாக்கலுக்கும் பிறகு நடுவண் அரசு தொடர்ந்து மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்துக்கொண்டு வருகிறது. மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கான அகில இந்திய அளவிலான பொது தகுதிகாண் தேர்வு என்பதெல்லாம் ஏறக்குறைய மாநில அரசுகளை செல்லாக் காசுகள் ஆக்கிவிட்டு நடுவண் அரசு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் கொண்டது என்ற நிலையை உருவாக்குவதுதான். 20.01.2017 தேதியிட்ட ஃப்ரண்ட் லைன் இதழில் ‘பேரரசர் மோடி’ (Emperor Modi) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் இந்திய அரசின் நிர்வாக அமைப்பையும் அரசியல் சாசன வழிமுறைகளையும் பாரம்பரியங்களையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு மோடி சர்வாதிகாரத்தன்மை கொண்ட ஆட்சி செய்கிறார் என்பதை காட்டுகின்றன. குவிக்கப்பட்ட அதிகாரம் கொண்ட மத்திய அரசை உருவாக்கி, இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து, இந்தியாவை ஒரு மொழி பேசும் நாடாக அல்லது ஒரு மதத்தை பின்பற்றும் நாடாக, ஒரு கலாச்சாரத்தை மட்டும் உடைய நாடாக மாற்ற முயலுவது என்பது இந்தியக் குடியரக்கே ஆபத்தாக மாறிவிடும்.
இந்த மண், பல பேரரசுகளையும் பல அரசர்களையும் கண்டிருக்கிறது. குப்தப் பேரரசு என்பது இந்தியாவில் அமைந்த மிகப்பெரிய பேரரசு. அதன்பிறகு அசோகப் பேரரசு ஒரு பெரிய அரசு. அக்பரும், ஔரங்கசீப்பும் ஏறக்குறை இந்தியா முழுமையையுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவை ஏறக்குறைய முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இப்படி பிராமண மதத்தைச் சேர்ந்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல மதத்தை சேர்ந்தவர்கள் ஆண்டபோதும், பல மொழி பேசும் மன்னர்களும், அரசர்களும் இருந்தபோதும்கூட இந்திய நாட்டின் பல மொழிகளும் கலாசாரங்களும் தத்தம் தனித்தன்மைகளுடன் விளங்கின. இத்தனை கலாசாரத் தாக்குதலுக்குப் பிறகும்கூட தமிழகத்தில் மாரியம்மாக்களும் ஜல்லிக்கட்டுகளும் தங்களுடைய நிலையில் இருந்து சிறிதும் வழுவாமல் கோலோச்சி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழ் மொழியும் என்றும்போலவே தமிழ் மக்களுடன் விளங்கி வருகிறது.

இதை அரசியல் அதிகாரத்தின் மூலம் மாற்றிவிடலாம் என்றோ, அழித்துவிடலாம் என்றோ யாராவது நினைத்தார்கள் என்றால் அது இந்தியா என்ற குடியரசுக்கான ஆபத்தாகவே மாறிவிடும். என்னைப் பொருத்தவரை, இப்போது அமைந்திருக்கிற இந்தியக் குடியரசு என்ற அரசியலமைப்புக்கு இந்த மண்ணின் கடைசியான ஆட்சி முறை அல்ல. எப்படி குப்த சாம்ராஜ்யம் அழிந்ததோ, அசோக சாம்ராஜ்யம் மறைந்ததோ, மொகலாய ராஜ்யம் கரைந்ததோ, பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்ததோ, அதுபோல இந்த அரசியல் அமைப்பும் மார்க்ஸ் சொன்னதுபோல, மாறுதலுக்கு உட்பட்டதே. இந்த அரசியல் அமைப்பை இன்னும் ஒரு நூற்றாண்டாவது வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால், அந்த அதிகார அமைப்பு இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளையும், இந்தியாவில் பின்பற்றப்படும் எல்லா மதங்களையும், இந்தியாவில் இருக்கிற எல்லா கலாசார பண்பாடுகளையும் வளர்த்தெடுக்க வேண்டிய அமைப்பாகத்தான் இருக்க வேண்டும். நடுவண் அரசு இந்த அடிப்படையை புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறது அல்லது புரிந்துகொண்டே ஒரு கை பார்த்துவிடலாம் என்று செயல்படுகிறது. இது ஆபத்தான போக்கு.
இந்திய நாட்டில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் சட்டத்தை எதிர்த்து வெற்றி கண்டது இந்த தமிழ் மண். அன்று, எப்படி அரசியல் கட்சி சாராமல் மாணவர்கள் முன்னின்று தொடங்கிய ஒரு போராட்டத்தின் மூலம் சாதனை செய்தார்களோ அதேபோல, இன்றும் அரசியல் கட்சிகள் சாராத தன் எழுச்சியான போராட்டத்துக்காக தமிழக மாணவர்கள் திரண்டிருக்கிறார்கள். இது, மிக மிக வரவேற்கக்கூடிய ஒன்று. தமிழ் மண்ணின் பெருமைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய ஒன்று. எனவே, இந்தப் போராட்டம் வெற்றி பெறும். தமிழக மாணவர்கள் இந்தியாவை வழிநடத்துவார்கள்.

கருத்துகள் இல்லை: